Saturday, September 10, 2011

சொகுசு கப்பல் பயண சேவையை, தமிழக அரசு அறிமுகப்படுத்துமா?





தமிழகத்தில், ஐ.டி., மோட்டார் வாகனம் என, அனைத்து துறைகளும் அதிவேக வளர்ச்சி பெற்று வரும் நிலையில், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், சொகுசு கப்பல் பயண சேவையை, தமிழக அரசு அறிமுகப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இந்தியர்கள், சொகுசு கப்பல் பயணம் செய்ய, விமானம் மூலம் சிங்கப்பூர் பறந்து, அங்கிருந்து மலேசியா, தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கப்பலில் சொகுசு பயணம் செய்கின்றனர். இவ்வாறு ஆண்டுதோறும், 15 லட்சம் இந்தியர்கள் சொகுசு கப்பலில் பயணம் செய்கின்றனர். இதன் மூலம், அந்த நாடுகளுக்கு அன்னியச் செலாவணியாக அதிக வருவாய் கிடைப்பதுடன், சுற்றுலா மூலம் வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.

இந்தியாவில், 7,000 கி.மீ., நீளத்திற்கு இயற்கையாகவே அமைந்த கடல் எல்லை உள்ளது. தமிழகத்தின் கடல் எல்லை, 1,076 கி.மீ.,. இந்திய கடற்கரையிலிருந்து, 15 "நாட்டிகல்' தூரத்தில் சர்வதேச கடல் எல்லை உள்ளது. ராமேஸ்வரம் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் இதன் இடைவெளி மாறுபடும்.

தமிழகத்தில், அரசுக்கு சொந்தமான, பூம்புகார் நிறுவனம் சரக்கு கப்பல் சேவையை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்திற்கு, எம்.வி. தமிழ் அண்ணா, எம்.வி. தமிழ் பெரியார், எம்.வி. தமிழ் காமராஜ் என, மூன்று கப்பல்கள் உள்ளன. இந்த கப்பல்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு சொந்தமான அனல்மின் நிலையங்களுக்குத் தேவைப்படும் நிலக்கரியை ஹால்டியா, பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களிலிருந்து ஏற்றி, தூத்துக்குடி மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்கு கொண்டு வரும் பணியை மேற்கொள்கிறது.

மேலும், எம்.எல். பகீரதி, எம்.எல். குகன், எம்.எல்.,பொதிகை ஆகிய மூன்று படகுகள் மூலம் கன்னியாகுமரி முனையிலிருந்து, விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்தையும் நடத்தி வருகிறது. இந்தியாவில், அனைத்து துறைகளிலும் சிறப்பாக வளர்ச்சி கண்டு வரும் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.

தமிழக சுற்றுலாத் துறையை மேம்படுத்த, சொகுசு கப்பல் சேவையை அரசு ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன்மூலம், அரசுக்கு அதிக வருவாய் கிடைப்பதுடன், சுற்றுலாத் துறையும் வளர்ச்சி பெறும். வசதி படைத்தவர்கள் மட்டுமே கப்பலில் பயணம் செய்யும் நிலை மாறி, அனைவரும் கப்பல் பயணம் மேற்கொள்ளலாம். இத்திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு, கூடுதல் செலவு ஏற்படும் என்று கருதினால், தனியாருடன் கூட்டு சேர்ந்தும் களமிறங்கலாம்.

இதுகுறித்து பெயர் விரும்ப வெளியிடாத தமிழக கடல்சார் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், கடலோர பகுதிகளில் அதிகளவில் சுற்றுலாத் தளங்கள் உள்ளன. கப்பல் பயணம் மூலம் சுற்றுலா வரும் வெளிநாட்டினர், சென்னை துறைமுகத்தில் இறங்கி, தரை வழி பயணம் மூலமாக தான் அந்த சுற்றுத் தளங்களுக்குச் செல்கின்றனர்.

அரசே, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக சொகுசு கப்பல் பயணத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தலாம். சொகுசு கப்பல்களை இயக்குவதற்கு, மும்பையில் உள்ள "டைரக்டர் ஜெனரல் ஆப் ஷிப்பிங்' நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும். இதன் கீழ் இயங்கும்,"மெர்கன்டைல் மரைன் டிபார்ட்மென்ட்', சென்னை, விசாகப்பட்டினம், கொச்சி ஆகிய இடங்களில் உள்ளது. முதன்மை அலுவலர் தலைமையில் செயல்படும் அலுவலகத்தில்,"இன்ஜின் சர்வயர்', "நாட்டிகல் சர்வயர்' ஆகியோர் இருப்பர். கப்பலின் எடை, இன்ஜின், எத்தனை பேர் பயணம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, கப்பலை இயக்குவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவர்.

தமிழகத்தில் உள்ள, சிறு துறைமுகங்கள் தனியார் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. இதை தளர்த்தி சொகுசு கப்பல் நிறுத்துவதற்கு, அரசு அனுமதி வழங்கினால், இச்சேவையில் களமிறங்க தனியார் நிறுவனங்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

நல்ல வரவேற்பு: இந்தியாவில் முதன் முறையாக, தமிழகத்தைச் சேர்ந்த, "அமெட்' நிறுவனம்,100 கோடி ரூபாய் செலவில், 1,300 பேர் பயணம் செய்யும் சொகுசு கப்பல் சேவையை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்நிறுவனத்தின் கப்பல் சேவைக்கு, உயர் வருவாய் பிரிவு மக்கள் என்றில்லாமல் அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பு உள்ளது.

தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள்: தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி, எண்ணூர் ஆகிய மூன்று பெரிய துறைமுகங்கள் உள்ளன. கடலூர், நாகை, பாம்பன், ராமேஸ்வரம், வாலிநோக்கம், கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய இடங்களில், அரசுக்கு சொந்தமான சிறு துறைமுகங்கள் உள்ளன. காட்டுப்பள்ளி, எண்ணூர் சிறு துறைமுகம், திருச்சோபுரம், சிலம்பிகுளம், பி.ஒய்.03, திருக்கடையூர், திருக்குவளை, காவேரி, வானகிரி, உடன்குடி, புன்னக்காயல், மனப்பாடு, கூடலூர் ஆகிய இடங்களில் தனியாருக்குச் சொந்தமான சிறு துறைமுகங்கள் உள்ளன.

0 comments:

Post a Comment

Kindly post a comment.