Friday, September 2, 2011

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினரின் கூடங்குளப் போராட்டம் வெற்றி பெறுமா?

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி,  நெல்லை இடிந்தகரையில் இம்மாதம் 11-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. 
இதுதொடர்பாக, இயக்கத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் சுப. உதயகுமார், அன்டன் கோமஸ், சகாய இனிதா, லிக்வின், மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்க நிர்வாகி ராஜலிங்கம் ஆகியோர் திருநெல்வேலியில் வியாழக்கிழமை கூட்டாக அளித்த பேட்டி:கூடங்குளத்தில் தொடங்க இருக்கிற அணு உலையானது தென் தமிழகம், தென் கேரளம் மற்றும் வட இலங்கையில் வாழும் மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் அழிக்கக் கூடியது.
இந்த அணுமின் நிலையம் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி மனிதர்களுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்தும்.இதனால், அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி ஜனநாயக ரீதியாக பல்வேறு போராட்டங்களை மக்கள் நடத்திவிட்டனர். கூடங்குளம் அணு உலையை உடனே மூட வேண்டும், அணுமின் நிலையத்தில் நடைபெறும் சோதனை ஓட்டத்தை உடனே நிறுத்த வேண்டும், போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்
கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்பதால், அக்டோபர் 1-ம் தேதி வரை போராட்டம் நடத்துவதை நிறுத்திவையுங்கள்; அதுவரை அவசரகால ஒத்திகை நடத்தப்பட மாட்டாது என்றும் மாவட்ட நிர்வாகத்தினர் உறுதி அளித்ததால் போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலை செப்டம்பர் மாதம் செயல்படத் தொடங்கும் என இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி தெரிவித்துள்ளார்.மேலும், அணுமின் நிலையத்தில் சோதனை ஓட்டம் நிறுத்தப்படவில்லை. வழக்குகளும் திரும்பப் பெறப்படவில்லை. எனவே, அரசு தங்களது கோரிக்கையை ஏற்காதோ என்ற பயம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி இடிந்தகரை கோயில் முன் செப்டம்பர் 11-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். சமூக ஆர்வலர்கள், அரசியில் கட்சியினர் போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்
சென்ற இருபது ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் எந்த நாட்டிலும் அணுமின் நிலையங்கள் உருவாக்கப்படவில்லை. வைத்திருப்போரும் மூடி வருகின்றனர். அவர்கள் ஒதுக்கித் தள்ளிய மிச்ச சொச்சங்களைக் கொண்டுவந்து  தமிழ்  நாட்டில்  அணுமின் நிலையங்கள் அமைப்பது அவசியம் தானா? கண்ணை விற்றுச் சித்திரம்  வாங்குபவர்  யாரும்  உண்டோ?



0 comments:

Post a Comment

Kindly post a comment.