Friday, September 2, 2011

மக்களின் பாராட்டைப் பெறுமா அரசு கேபிள் டி.வி

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 2) தொடங்கும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்புச் சேவை ரசிகர்களை முழுமையாக மக்களின் பாராட்டைப் பெறுமா   என்ற கேள்வி எழுந்துள்ளது.மாதம் ரூ.70 கட்டணத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மக்கள் காணலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

முதலில் 70 இலவச சேனல்கள் இந்த ஒளிபரப்பில் இடம் பெறும் என்றும், கட்டணச் சேனல்கள் பின்னர் சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அதன்படி சென்னையில் கேபிள் ஆபரேட்டர்களுக்கு வந்துள்ள சேனல்களின் பட்டியலில் இதுவரை அதிக முக்கியத்துவமான வரிசையில் இடம் பெறாத சேனல்களும் இடம் பெற்றுள்ளன

.தமிழில் பொதிகை சேனலும், கலைஞர் குழுமம், ஜெயா குழும தொலைக்காட்சி சேனல்களும், கேப்டன் டி.வி.யும், வசந்த், மக்கள், மெகா டி.வி. சேனல்களும், இமயம், வின், எஸ்.எஸ். மியூசிக், மூன் டி.வி. ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.சன் குழும சேனல்களும், ராஜ் டி.வி., ராஜ் டிஜிட்டல், விஜய், ஜீ தமிழ் ஆகிய தமிழ் சேனல்கள் இதில் இடம் பெறவில்லை. 

இவை கட்டணச் சேனல்களாக உள்ளதால் இப்போது இதில் இடம் பெறவில்லை.சில ஆன்மிகச் சேனல்கள் இதில் இடம் பெற்றுள்ளன என்றாலும், இந்து ஆன்மிக சேனல்களான சங்கரா, ட்டி,ட்டி.டி. போன்ற இலவச சேனல்கள் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.அதிக பிரபலம் இல்லாத சேனல்கள் எல்லாம் பட்டியலில் உள்ள போது, இந்துக்கள் அதிகம் பார்க்கும் இவ்விரு சேனல்களும் இடம் பெறாதது, வாடிக்கையாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தும் என கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கூறுகின்றனர்

.மேலும், புதிதாக அமைக்கப்படும் தலைமுனைகள் அனலாக் தொழில்நுட்பத்தில் அமைக்கப்படுவதால், அதன் மூலம் அதிக தொலைவுக்கு இணைப்புகள் தருவதும், அதிக எண்ணிக்கையில் இணைப்புகள் தருவதும் சிரமமாக இருக்கும் என்கின்றனர்.அதுமட்டுமன்றி, தலைமுனைகளில் இருந்து ஆபரேட்டரின் கட்டுப்பாட்டு அறை வரையில் கேபிள் அமைக்கும் செலவை இனி ஆபரேட்டரே ஏற்க வேண்டும் என்ற நிர்பந்தம் தங்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்

.இதுதவிர ரூ.70 கட்டணம் என்பதில், சேவை வரியும் அடக்கமா அல்லது அதைக் கூடுதலாக வசூலிக்க வேண்டுமா என்பது தெரியவில்லை. ஒரு இணைப்புக்கு ஆபரேட்டருக்கு ரூ.50-ம், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு ரூ.20-ம் கிடைக்கும்.எந்த அடிப்படையில் கணக்கிட்டு இந்தக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது என்பதும் தெரியவில்லை. 

வழக்கமாக 500 இணைப்புகள் வைத்திருக்கும் ஆபரேட்டருக்கு எவ்வளவு செலவாகும் என்பதைக் கணக்கிட்டு, அதற்கேற்ப கட்டணம் நிர்ணயிப்பார்கள் என்றும், அதன்படி பார்த்தால் மாதம் ரூ.25 ஆயிரம் வருமானத்தில் 500 இணைப்புகளுக்கு நல்ல சேவையை பராமரித்து, தாங்கள் லாபம் ஈட்டுவது கஷ்டம் என்றும் ஆபரேட்டர்கள் கூறுகின்றனர்.கட்டணச் சேனல்கள் வரும்போது ரூ.70 என்ற கட்டணம் அதிகரிக்குமா என்பதும் தெளிவாக்கப்படவில்லை.

அனலாக் தொழில்நுட்பத்தில் சிக்னல் தருவது, தலைமுனைகளில் இருந்து ஆபரேட்டர் கட்டுப்பாட்டு அறை வரை ஆபரேட்டரே வயர் அமைத்துக் கொள்வது என்ற நிலை இருந்தால் ஏற்கெனவே சேவை அளித்து வரும் எம்.எஸ்.ஓ. நிறுவனத்திடமே சேவையைத் தொடர ஆபரேட்டர்கள் விரும்பக்கூடும் என்ற நிலையும் உள்ளது.சில பகுதிகளில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு கட்டுப்பாட்டு அறையைத் தர முன்வராத எம்.எஸ்.ஓ. நிறுவனங்கள் வெள்ளிக்கிழமையில் இருந்து ஒளிபரப்பை நிறுத்துமாறு மறைமுக நெருக்குதல் ஏதும் வரக்கூடும் என்ற அச்சமும் ஆபரேட்டர்களிடம் உள்ளது.

எனவே தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் மக்களுக்கு குறைந்த செலவில், நிறைவான சேவையை அளிக்க வேண்டுமானால், தங்களை முதல்வர் நேரடியாக சந்தித்து கருத்துகளைக் கேட்டால், இதில் உள்ள சிக்கல்களை விளக்கிக் கூற தயாராக இருப்பதாக இத் தொழிலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வரும் ஆபரேட்டர்கள் கூறுகின்றனர்.பெயரளவில் சங்கங்கள் வைத்துள்ளவர்கள் கூறுவதுடன், உண்மையாகவே தொழிலில் ஈடுபட்டுள்ள தங்களின் நெருக்கடிகளையும் கேட்டு அதற்கேற்ப முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.


0 comments:

Post a Comment

Kindly post a comment.