Tuesday, September 13, 2011

திருவாவடுதுறை ஆதீனத்தில் ஆறு ஓதுவார்களுக்கு விருது



 நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் வட்டம், திருவாவடுதுறை ஆதீனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் 6 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.  திருக்கயிலாய பரம்பரை, திருவாவடுதுறை ஆதீனம், ஆன்மார்த்த மூர்த்தி அருள்மிகு ஞானமா நடராசப் பெருமான் ஆவணி வளர்பிறை சதுர்த்தசி விழா நடைபெற்றது. விழாவையொட்டி, காலை நேர நிகழ்வாக அருள்மிகு ஞானமா நடராசப் பெருமான் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், திருநீராட்டும் நடைபெற்றன.

 பிறகு, அன்று இரவு திருவாவடுதுறை ஆதீனம் வேணுவனலிங்க விலாச அரங்கில் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றன. தொடர்ந்து, ஆதீன குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் சன்னதி, ஞானமா நடராசப் பெருமான் சன்னதிகளில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் எழுந்தருளிய திருவாவடுதுறை ஆதீனம் 23-வது குருமகா சன்னிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.  

ஓதுவார்களுக்கு விருது: விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, ராமநாதபுரம் அரசு இசைக் கல்லூரி தேவார ஆசிரியர் அ. பாலசுப்பிரமணியன், சேலம் கணேசுவரர் திருக்கோயில் வெங்கடாலசலம், திருமலைக்கோயில் அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில் ஆ. பிள்ளைமுத்து, கடலூர் சைவத்திருமுறை பயிற்சி மையம் திருமுறை ஆசிரியர் ரா. சங்கரநாராயணன், வைத்தீசுவரன்கோவில் அருள்மிகு தையல்நாயகி உடனாய அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில் சு. முருகன் ஆகிய ஓதுவார்களின் திருமுறைப் பணிகளைப் பாராட்டி 5 பேருக்கும் பொன்னாடை அணிவித்தும், உருத்திராக்கம் அணிவித்தும், ரூ. 5 ஆயிரத்திற்கான பொற்கிழி வழங்கியும், தெய்வத் தமிழிசைச் செல்வர் என்னும் சிறப்பு விருதுகளை ஆதீனகர்த்தர் வழங்கினார்.  அதைத் தொடர்ந்து, திருச்சியைச் சேர்ந்த துரை நமச்சிவாயத்தின் சைவத் தமிழ்ப் பணிகளைப் பாராட்டி, பொன்னாடை, உருத்திராக்கம் அணிவித்து, சைவப்புராண உரையாளர் என்னும் சிறப்பு விருதையும் ஆதீனகர்த்தர் வழங்கினார்.

 விழா மலராக, கடலூர் புலவர் வ. ஞானப்பிரகாசம் எழுதிய திருப்பாதிரிபுலியூர் தல வரலாறும், திருப்பதிகங்களும் என்னும் நூலை ஆதீனகர்த்தர் வெளியிட, நூலின் முதல் பிரதியை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி தமிழ்த் துறை முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி பெற்றுக் கொண்டார். 

 நிகழ்ச்சிகளில் திருவாவடுதுறை ஆதீனம் கட்டளைத் தம்பிரான் சுவாமிகள், திருவிடைமருதூர் கட்டளை மீனாட்சிசுந்தர தம்பிரான் சுவாமிகள் மற்றும் தமிழார்வலர்கள், ஆதீனப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.