Thursday, September 15, 2011

இலங்கை ராணுவ முகாம்களில் 2 லட்சம் தமிழர்கள்

போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் இலங்கை ராணுவ முகாம்களில் 2 லட்சம் தமிழர்கள் தவிக்கின்றனர்.
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தது. அப்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த தமிழர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர், அவர்கள் அனைவரும் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அகதிகள் முகாம்கள் என அழைக்கப்படும் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.
போர் முடிந்த பிறகு மீண்டும் அவர்கள் வாழ்ந்த பகுதியில் மறு குடியமர்த்தப்படுவார்கள் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் அவர்களில் மிக சிலர்தான் மறு குடியமர்த்தப்பட்டுள்ள னர். பெரும்பாலானவர்கள் இன்னும் முள்வேலி முகாம்களில் சிக்கி தவிக்கின்றனர். இவ்வாறு சுமார் 2 லட்சம் தமிழர்கள் தவிப்பதாக தமிழர் தேசிய கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து அக்கட்சி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இறுதி கட்ட போர் முடிந்து 2 ஆண்டுகளாகியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தங்கியிருந்த 2 லட்சம் தமிழர்கள் இன்னும் ராணுவ முகாம்களிலேயே அடைபட்டு கிடைக்கின்றனர். அவர்களில் பெரும் பாலானவர்கள் யாழ்ப்பாணத் தில் உள்ள வலிகாமம், திரிகோணமலையில் உள்ள சாம்பூர் மற்றும் வன்னி பகுதியை சேர்ந்தவர்கள். முகாம்களில் இருந்து அனுப்பபட்டவர்களில் சிலர் வாழ்வதற்கு அடிப்படை வசதி இல்லாத நிலையில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களின் வீடுகள் மற்றும் விளை நிலங்கள் மெஜாரிட்டியாக வாழும் சிங்களர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது சட்டத்துக்கு புறம்பானது. முல்லைத் தீவு மற்றும் வடமராச்சி பகுதியில் உள்ள இந்து கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. அங்கு பல அவமதிப்புகளும், கலாச்சார சீரழிவுகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.