தமிழ்த் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் இயக்குனர் விசு, சங்கத்தின் பொறுப்புச் செயலாளர் கவிஞர் பிறைசூடன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , தயாரிப்பாளர் திரிசக்தி சுந்தர்ராமன் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி கௌரவித்தார்.
சென்ற ஆண்டு இந்தச் சங்கத்திற்காகப் பத்து லட்சம் நிதியுதவி வழங்கியிருந்தார் சுந்தர்ராமன். அந்த நிதியின் வட்டித் தொகையிலிருந்து மூத்த உறுப்பினர்கள் பத்து பேருக்குத் தலா ஐயாயிரம் பென்ஷன் வழங்கப்படும் என்று அறிவித்த சங்கத் தலைவர் விசு, இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் கூறினார்.
நடிகர் திலகம் சிவாஜி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உள்ளிட்ட பல்வேறு சாதனையாளர்களுக்கு வசனங்கள் எழுதிய எஸ்.எம்.உமர், உமேஷ் சர்மா, கலைஞானம், ஆர்.கே.சண்முகம், ஆருர் தாஸ், மா.ரா, கே.எம்.பாலகிருஷ்ணன், ஓம் சக்தி ஜெகதீசன், மோகன் காந்திராமன், வி.என்.சம்பந்தம் போன்ற திரைப்பட எழுத்துலகின் ஜாம்பவான்கள் நிகழ்ச்சியில் பங்கு பெற்று ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.
வரவேற்புரை வழங்கிய கவிஞர் பிறைசூடன் அருமையான உதாரணம் ஒன்றைச் சொன்னார். வீட்டில் லட்சம் லட்சமாகச் சம்பாதித்து வைத்திருப்போம். மனைவி கேட்கும் போதெல்லாம் நகையும் பட்டுப் புடவையுமாக எடுத்துக் கொடுத்திருப்போம். ஆனால் அதெல்லாம் அவர்களுக்குப் பெரிதாகத் தெரியாது. பொங்கல் தீபாவளிக்கு ஊரிலிருந்து வரும் வரிசைப்பணம் 150 ரூபாய்தான் பெரிதாகத் தெரியும். எங்க அப்பா 150 ரூபாய் அனுப்பியிருக்காரு என்பார்கள் பெருமையாக. அந்த மனநிலையில்தான் இந்த பென்ஷனையும் தாய்வீட்டு சீதனமாக இந்த ஜாம்பவான்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
தென்னிந்திய திரைப்பட சங்கத்திற்கு இரண்டேகால் கிரவுண்ட் நிலத்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து வாங்கிக் கொடுத்ததே நான்தான் என்று குறிப்பிட்டார் சங்க உறுப்பினர் மோகன் காந்திராமன். முதல்வரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சங்கம் 300 ரூபாய் வாடகையில்தான் இயங்கி வருகிறது என்றேன். ஆச்சர்யமாக கேட்டுக் கொண்ட அவர், இவ்வளவு பெரிய தொழிலாளர் அமைப்பை உள்ளடக்கிய சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் இல்லையா என்று கேட்டார். நான் இல்லை என்று கூறியதுடன் வடபழனி, கோடம்பாக்கம் பகுதியில் நாலு கிரவுண்ட் நிலம் ஒதுக்கி தர வேண்டும் என்று சொன்னேன். அவ்வளவு பெரிய நிலம் அந்த பகுதியில் இருக்கிறதா என்று கேட்டார் அவர்.
நான் கையோடு எடுத்து சென்றிருந்த சர்வே நம்பரை அவரிடம் காட்டி இந்த பகுதியில் இருக்கிறது என்றேன். உடனே தலைமை செயலாளரை அழைத்த முதல்வர் ஜெயலலிதா, ஒரு வாரத்தில் இந்த நிலத்தை அவங்களுக்கு பதிவு செய்து கொடுங்கள் என்று உத்தரவிட்டார் என்று கடந்த கால நிகழ்வை குறிப்பிட்டார் அன்றையை பெப்ஸி அமைப்பின் தலைவராக இருந்த மோகன் காந்திராமன்.
சிறிய உதவியாக இருந்தாலும் அதை முனமுவந்து பெற்றுக் கொண்ட மூத்த உறுப்பினர்களுக்கு திரிசக்தி சுந்தர்ராமன் தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார். விழாவில் மூத்த இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம், ஆஞ்சநேய புஷ்பானந்த், கவிஞர் பூவை செங்குட்டுவன், கவிஞர் முத்துலிங்கம், இயக்குனர் மதுமிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.
திரைப்பட எழுத்தாளர்கள் ஓய்வூதியம் பெறுவது இதுதான் முதல் முறை.
0 comments:
Post a Comment
Kindly post a comment.