போலிகளை அதன் உண்மையான பொருட்களில் இருந்து வடிவம்மாறாமல் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தத்வரூபமாக வடிவமைப்பதில் சீனர்கள் கில்லாடிதான். ஆனால் அதற்காக இப்படியா? சீனா எந்தவொரு பொருளையும் வெளிநாடுகளில் இருந்து ஒன்றை மட்டுமே வாங்கும். பின்னர் அதனைப்போன்று போலியான பொருட்களை உருவாக்கி அதே பெயருடன் சந்தைப்படுத்தியும் விடும் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே உள்ளது.
ஆரம்ப காலத்தில் மற்றைய நிறுவனங்களின் இலத்திரனியல் பொருட்களை போலியாக தயாரித்து சந்தைப்படுத்தத் தொடங்கியது சீனா. மலிவான விலை காரணமாக அவை சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவற்றின் வெற்றியைத் தொடர்ந்து பலவற்றையும் போலியாகத் தயாரிக்கத் தொடங்கியது சீனா. மென்பொருட்கள் முதல் ஆடைகள் வரை எதனையும் விட்டு வைக்கவில்லை. போலி உற்பத்திகளை உருவாக்குவதில் அடுத்த பரிணாமமாக தற்போது சீனாவில் போலி வர்த்தக நிலையங்களும் முளைவிடத் தொடங்கியுள்ளன. இதற்கு இலக்காகியுள்ளது ‘அப்பிள் ஸ்ரோர்ஸ்’. கின்னிங் மாகாணத்தில் தாங்கள் எந்தவொரு அப்பிள் நிறுவனத்தையும் தொடங்கவில்லை என்று அமெரிக்க அப்பிள் நிறுவனம் அறிவித்தபோதுதான் இந்தப்போலி அம்பலமானது. அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு கூட தாங்கள் பணியாற்றுவது போலி என்று தெரியாத அளவிற்கு அந்நிறுவனத்தை உருவாக்கியவர் வைத்திருந்துள்ளார்.
இதுமட்டுமல்ல இவ்வாறு சீனாவில் பல நிறுவனங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. அப்பிளின் ஐ போன் மற்றும் ஐ‡பேட் ஆகியவை சீனாவில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. சீனாவின் போலி உற்பத்தியாளர்கள் இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். பல போலி அப்பிள் ஸ்ரோர்ஸ் மற்றும் அனுமதியற்ற விநியோகஸ்தர்கள் அங்கு நிறைந்து வழிவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் நடைபெற்ற ஆரம்பகட்ட விசாரணைகளில் பல போலி அப்பிள் ஸ்ட்ரோர்ஸ்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதுடன், விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர்.
இத்தகைய போலி ஸ்ரோர்ஸ்கள் சீனாவில் மட்டுமன்றி வெனிசூலா மற்றும் ஸ்பெய்ன் உட்பட பல நாடுகளிலும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக சீனாவில் அப்பிளின் உத்தியோகபூர்வ ஸ்ரோர்கள் 4 மட்டுமே அமைந்துள்ளன. இவற்றில் 2 பீஜிங்கிலும் மற்றைய இரண்டும் சங்காயிலுமே அமைந்துள்ளன. போலி உற்பத்திகள் அப்பிளின் வர்த்தக நாமத்திற்கும், தரத்திற்கும் பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக அப்பிள் தற்போது கவலை வெளியிட்டுள்ளது.
நன்றி - ஈழமுரசு
0 comments:
Post a Comment
Kindly post a comment.