Friday, August 12, 2011

மக்களுக்காகச் சிந்திக்கும் சிந்தனைப் பேரவை!



ஈரோடு என்றால் இப்பொழுது முதலில் நினைவுக்கு வருவது, மக்கள் சிந்தனைப் பேரவையும், அதன் உயிர்த்துடிப்பாகத் திகழ்கின்ற ஸ்டாலின் குணசேகரனும்தான். இவர் இல்லாத கட்சிசார்பற்ற பொதுநல நிகழ்வுகளே ஈரோடு வட்டாரத்தில் கிடையாது என்பதை எவருமே மறுத்துரைக்க முடியாது. ஆனால், இவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர் என்பதுதான் வியப்புக்குரியதொன்று.

அடாது மழை பெய்தாலும், விடாது இடி இடித்தாலும் நாடகம் நிச்சயம் நடைபெறும் என்ற விளம்பரங்கள் அந்தக் காலத்தில் சர்வ சாதாரணம். அதே போன்று அடுத்து எட்டாவது புத்தகத் திருவிழா அடுத்த ஆண்டு ஆகஸ்டு மூன்றாம் தேதி துவங்கி பதினாலாம் தேதிவரை நடைபெறும் என்று 7ஆம் ஆண்டு நிறைவு விழாவின்போதே அறிவித்து விட்டார், மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர், ஸ்டாலின் குணசேகரன்.

75அரங்குகளுடன் துவங்கிய ஈரோடு புத்தகக் கண்காட்சி, படிப்படியாக வளர்ந்து 200அரங்குகளாகப் பெருகியுள்ளது.

ஒவொரு ஆண்டும் ஏதாவது புதுமையைப் புகுத்துவது இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்துவோரது வழக்கம்.

புத்தகம் வாங்க பணத்தைச் சேமிக்கும் பழக்கத்தை மாணாக்கர் மத்தியில் ஊக்குவித்திட, உண்டியல்களை மாணாக்கர்களுக்கு வழங்கிவருகின்றனர். இந்த ஆண்டு 25000க்கும் மேற்பட்ட உண்டியல்கள் விற்பனையாகி உள்ளன.

தனியார் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளகளுக்கு100ரூபாய் டோக்கன் வழங்கி, அதன் மூலம் அவர்களிடையே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த ஆண்டு2000ம் நூறு ரூபாய் டோக்கன்கள் வழஙப்பட்டுள்ளதாக ஸ்டாலின் குணசேகரன் தெரிவிக்கின்றார்.

இந்த ஆண்டின் சிறப்பம்சமாக, எளிதில் வாங்கி விரும்புபவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கும் விதத்தில் முக்கிய புத்தகங்களுடன் கூடிய மர அலமாரியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த புத்தக மர அலமாரியின் விலை ரூபாய்10000/- (புத்தகங்களுடன் சேர்த்து).

ஈரோடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டனர். எப்படி? ஈரோடு மாவட்டம், திங்களூர் அருகில் உள்ளது வெட்டையன் கிணறு என்ற கிராமம். அக்கிராமத்தில் உள்ளது நூலக வசதியற்ற அரசு நடுநிலைப் பள்ளி. மேற்படி புத்தகங்களுடன் கூடிய அலமாரியினை விலைக்கு வாங்கி அந்தப் பள்ளிக்குத் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மூலம் வழங்கினர். பள்ளித் தலமை ஆசிரியை அதனைப் பெற்றுக் கொண்டார்.

ஈரோடு புத்தகத்திருவிழாவின் சிறப்பு அழைப்பாளர்கள் பெயர்களைப் பார்த்தாலே, அவர்கள் அருமை பெருமைகள் தெரியும். எல்லோரும் ஈரோடு செல்ல முடியாது. எனவே, அவர்களது உரைகள் அனைத்தையும் அச்சிட்டு விலைக்கு வழங்கினால் சிறப்பாக இருக்கும். ஏனெனில், மெய்யான மக்கள் நலம் வெளிப்படுவது இது போன்ற அரங்கங்களில் மட்டும்தான்.

மக்களுக்காகச் சிந்திப்போம் என்ற முழக்கத்துடன் மெய்யான பொதுநல அமைப்பாகத் திகழ்ந்துவரும் மக்கள் சிந்தனைப் பேரவை போன்ற அமைப்புக்கள் தமிழகம் முழுவதும் இயஙகத் துவங்கினால், தமிழகம் வளமை பெறும். வலிமையும் அடையும்.

4 comments:

  1. ஈரோடு புத்தகத்திருவிழா பற்றிய 'ஈரோடு புத்தகத்திருவிழாவில் சிவகுமார்' என்ற கட்டுரையை என்னுடைய பதிவில் வாசிக்கவும்.
    அமுதவன்.
    http://amudhavan.blogspot.com/2011/08/blog-post_08.html

    ReplyDelete
  2. நல்ல திட்டங்களை செயல்படுத்தும் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையினர் பாராட்டுக்குரியவர்கள். தொடரட்டும் அவர்களின் சேவை.பகிர்ந்து கொண்ட தங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  3. அமுதவன் வலைப்பூவிலிருந்து கீழ்வரும் பகுதியையும் எடுத்து மீள்பதிவு செய்துள்ளேன். நடிகர் சிவகுமாரின் மற்றொரு ஆற்றல்மிகு பக்கத்தையும் அறிந்துகொள்ள அமுதவன் வலைப்பூவிற்குச் சென்று சிவகுமாரின் முழு உரையையும் தயவு செய்து படிக்கவும். என்னிடம் நூறு பாடல்களில் கம்பராமாயணம் என்ற அவர் உரையாற்றிய குறுந்தகடு உள்ளது.

    இந்த நிகழ்ச்சியின் இன்னொரு முக்கிய அம்சம் சக்தி மசாலா தம்பதியினர் செய்யும் புத்தகத்தொண்டு. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கி அவற்றை இவர்களாகவே அரசுப்பள்ளிகளுக்கு எடுத்துச்சென்று அங்கே நூல்நிலையம் ஏற்படுத்தச்செய்து அதில் ஒரு நூலகரையும் இவர்களுடைய செலவிலேயே அமர்த்தி மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் ஆர்வத்தைத்தூண்டி வருகிறார்களாம். இதனை மாவட்டம்தோறும் என்பது மாத்திரம் இல்லாமல் மாநிலம் முழுவதுமே நடத்தும் எண்ணமும் செயல்பாடும் உள்ளதாகவும் திருமதி சாந்தி துரைசாமி தெரிவித்தார்.

    ReplyDelete
  4. எனது வலைப்பூவில் தங்கள் மறுமொழிபார்த்து தங்கள் தளத்திற்கு மறுபடி வந்தேன்.தங்களின் சேவைக்கும் அன்பிற்கும் நன்றி சேதுபாலா.

    ReplyDelete

Kindly post a comment.