Wednesday, August 31, 2011

2-ந்தேதி முதல் 70 ரூபாய் கட்டணத்தில் 65 சேனல்களை பார்க்கலாம்: சென்னை தவிர மற்ற ஊர்களில் சன்-விஜய் டி.வி. தெரியாது

தமிழ்நாட்டில் அரசு கேபிள் டி.வி. செப்டம்பர் 2-ந்தேதி முழுமையாகச் செயல்பட தொடங்கும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தஞ்சை, திருநெல்வேலி, கோவை, வேலூர் ஆகிய 4 ஊர்களில் ஏற்கனவே எம்.எல்.ஓ.க்கள் உள்ளன. மற்ற மாவட் டங்களில் தனியார் வசம் உள்ள எம்.எல்.ஓ.க்களை வாடகைக்கு வாங்கியும் புதிதாகவும் நிறுவி ஒளி பரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் அரசு கேபிள் டி.வி. செயல்பாட்டுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் 40 ஆயிரம் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உள்ளனர். இதில் 34 ஆயிரத்து 344 கேபிள் ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டி.வி.யில் இணைந்து விட்டனர்.

1 கோடியே 45 லட்சம் இணைப்புகள் இவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளதால் அரசு கேபிள் டி.வி.தான் தமிழ்நாடு முழுவதும் அதிக இடங்களில் தெரியும். அரசு கேபிள் டி.வி.யில் எந்தெந்த சேனல்கள் தெரியும்? பொதுமக்கள் எவ்வளவு கட்டணம் கொடுக்க வேண்டும்? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.
இதுபற்றி அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பாளர்கள் சங்க மாநிலத் தலைவர் யுவராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சென்னையை தவிர்த்து மற்ற ஊர்களில் கேபிள் டி.வி.க்கு பொதுமக்கள் ரூ.150 முதல் 280 வரை பணம் கட்டுகின்றனர். சில இடங்களில்தான் 100 ரூபாய் உள்ளது. இனி அரசு அறிவித்தபடி 70 ரூபாய் செலுத்தினால் போதும். அதற்குமேல் பணம் கொடுக்க வேண்டாம். முதலில் நாங்கள் இலவசச் சேனல்களை ஒளிபரப்ப உள்ளோம். இதில் குறைந்தது 65 சேனல்கள் தெரியும். தமிழ் சேனல்கள் அனைத்தும் சென்னையில் இலவச சேனல்களாக உள்ளன.

ஆனால் மற்ற ஊர்களுக்கு சில சேனல்கள் கட்டண சேனல்களாக இருக்கிறது. அந்த கட்டண சேனல்களை 2-ந்தேதி முதல் ஒளிபரப்ப இயலாது. சன் டி.வி., ராஜ் டி.வி., விஜய் டி.வி. இசட் தமிழ், டிஸ்கவரி தமிழ் சேனல் ஆகியவை கட்டண சேனல்களாக இருப்பதால் இவற்றை இலவச சேனல்களாகத் தருமாறு அவர்களிடம் கேட்டுள்ளோம். இதில் ராஜ், விஜய் டி.வி. யுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.

சன் டி.வி., அரசு கேபிள் டி.வி.க்கு இலவசமாக சேனல்களைத் தராவிட்டால் அவற்றை ஒளிபரப்ப மாட்டோம். எனவே 2-ந்தேதி முதல் சன் குரூப் உள்பட கட்டண சேனல்கள் சென்னையைத் தவிர மற்ற ஊர்களில் தெரியாது. பொதுமக்கள் கேபிள் ஆபரேட்டர்களிடம் முறையிடும்போது நாங்கள் நிலைமையை எடுத்து சொல்வோம். கட்டண சேனல்கள் இலவசமாக கிடைக்க வாய்ப்பு ஏற்படும். அதுவரை பொறுத்திருங்கள் என்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்பது இதுதானோ? வானொலி. சைக்கிள் இவற்றிற்கெல்லாம் லைசென்ஸ் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்ற காலம் ஒன்றும் இருந்தது. கண்கூசும் அளவிற்கு விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுகின்றனர், தொலைக்காட்சியினர். காலம் மாறுகின்றது. அரசு சாராயக் கடைகள் நடத்தும்போது தொலைக்காட்சிகளை ஒளிபரப்பக்கூடாதா என்ன? அரசுக்கு இதன் மூலமும் கொஞம் வருவாய் வரட்டுமே? அனைத்தும் இலவசமாக்கப் பட வேண்டும். ”டெலிவிஷங்களைப்” பார்ப்பதற்கு அவர்கள் அல்லவா காசு கொடுக்கவேண்டும்?

1 comments:

  1. ”டெலிவிஷங்களைப்” பார்ப்பதற்கு அவர்கள் அல்லவா காசு கொடுக்கவேண்டும்?

    ;) இது நிஜம் கூட.

    கட்டண சானலாக இருந்தால் அவர்கள் விளம்பரங்களை ஒலிபரப்பக்கூடாது என்ற விதிமுறை வந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete

Kindly post a comment.