Wednesday, August 31, 2011

பண்ருட்டி அருகே 3000 ஆண்டுகள் முந்தைய முதுமக்கள் தாழி



கொண்டாரெட்டிப் பாளையத்தில் கண்டெடுக்கப்பட்ட 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த முதுமக்கள் தாழி.
பண்ருட்டி மேற்கே 8 கி.மீ. தொலைவில் உள்ள கொண்டாரெட்டிப்பாளையம் கிராமத்தில் 3000 ஆண்டுகள் பழமைவாயந்த முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இக்கிராமத்தில் வியாழக்கிழமை தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் குளம் தூர்வாரும் பணியின் போது, வட்ட வடிவில் இரண்டு முதுமக்கள் தாழிகள் தென்பட்டவுடன் வேலை செய்தவர்கள் பயந்து சென்றதுடன் சிலர் சாமியாடி பல கதைகளையும் கூற ஆரம்பித்து விட்டனர். இதனால் கிராம பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து பண்ருட்டி கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசனுடன் கள ஆய்வு செய்த போது, இவை 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை என்று கண்டறியப்பட்டது.இது குறித்து கல்வெட்டு ஆய்வாளர் கூறியது: 5 அடி உயரம் கொண்ட இந்தத் தாழிகள் 260 செ.மீ. சுற்றளவுடன் காணப்படுகின்றன.72 செ.மீ. அகலம் கொண்ட இந்த தாழிகளுக்குள் மனித எலும்புகள் மக்கிய நிலையிலும், கருப்பு சிகப்பு வண்ணம் கொண்ட மண் தட்டுகள், ஏழு வடிவங்களில் மண் கலயங்கள் உடைந்த நிலையில் காணப்பட்டன.

இதுபோன்று பண்ருட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் 5000 ஆண்டுகள் முதல் 2000 ஆண்டுகள் வரை பழமைவாய்ந்த தாழிகள் கிடைத்து வருகின்றன. சில தாழிகளுக்குள் போர்வாள் மற்றும் குறுவாள்கள் கிடைத்துள்ளன.மதமதக்கசால், முசுமுசுங்கை சால் என்று மக்களால் வழிவழியாகக் கூறப்பட்டு வரும் பானை வடிவங்கள் முதுமக்கள் தாழிகள் என வரலாற்றால் பேசப்படுகின்றன.

வயது முதிர்ந்தவர்களின் உயிர் பிரியாமல் செயலற்று இருக்கும் தருணத்தில் அவர்களை இதுபோன்ற தாழிக்குள் வைத்து, அவர்களுக்குப் பிடித்தமான உணவு வகைகளையும், தண்ணீர் வைத்து தாழிகளை மூடி விடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.இவற்றில் அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் வைத்து மூடுவது வழக்கம் உண்டு.

பூமி மட்டத்துக்கு 12 அடிக்கும் கீழே இக்கிராமத்தில் கிடைத்துள்ள இரண்டு தாழிகளும் மூன்று அடுக்குகள் கொண்டன. இவற்றில் எலும்புகள் மக்கியும், மண் பாண்டங்கள் உடைந்தும் காணப்படுகின்றன.கருப்பு சிகப்பு வண்ணம் கொண்ட இப்பாத்திரங்களின் வேலைப்பாடுகள், வடிவங்களை கணக்கில் கொண்டு இவை 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.

இதேபோல் சில மாதத்துக்கு முன்னர் சூரக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் சூளை போட மண் எடுத்தபோது அவரது நிலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.அந்த தாழிகளை ஆய்வு செய்ததில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என தெரிய வந்தது. தற்போது கொண்டாரெட்டிபாளையத்தில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாழிகள் கிடைத்துள்ளன.

0 comments:

Post a Comment

Kindly post a comment.