Tuesday, August 2, 2011

சென்னையில் ரூ.100 கோடியில் சித்த மருந்து ஆய்வகம்

சென்னை, தாம்பரத்தில் 100 கோடி ரூபாயில் சித்த மருந்து ஆய்வகம் அமைக்க, இந்திய மருத்துவ முறைகளுக்கான மத்திய அமைப்பு முடிவு செய்துள்ளது.

பன்னிரண்டாவது திட்டத்தில் இதற்கு நிதி ஒதுக்க, திட்டக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில், இந்த மருந்து ஆய்வகம் அமைக்கப்படும். இந்த ஆய்வகத்தில் மேற் கொள்ளப்படும் புதிய ஆராய்ச்சிகள் மூலம், சித்த மருந்துகளை உலக தரத்துக்கு மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், சித்த மருந்துகளின் சிறப்புகளை சர்வதேச மருந்துச் சந்தைக்கு கொண்டு செல்ல, இந்த மருந்து ஆய்வகம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. புதிய மருந்துகளால் உள்ளூர் மக்களுக்கும் பயன் கிடைக்கும் என, சித்த மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, மத்திய திட்டக்குழு (ஆயுஷ்) செயற்குழு உறுப்பினர் டாக்டர் சிவராமன் கூறியதாவது: ஆயுர்வேதம், சித்தம், யுனானி, யோகா போன்ற இந்திய மருத்துவ முறைகளை மேம்படுத்த, அதிக முக்கியத்துவம் அளிப்பது என, பன்னிரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை விட, 10 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12வது திட்டத்தில் 40 ஆயிரம் கோடி ரூபாய்,ஆயுஷ் மேம்பாட்டுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளது. தேசிய சுகாதார திட்டங்கள், இப்போது, அலோபதி மருத்துவத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இனி, இத்திட்டங்களில் ஆயுர்வேத, சித்த மருத்துவத்தையும் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, காசநோய் தடுப்பு, ரத்த சோகை ஒழிப்பு போன்ற திட்டங்களில், இனி சித்த, ஆயுர்வேத மருந்துகளையும் வழங்க, கொள்கை அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ரத்தசோகைக்கு இரும்புச் சத்து மாத்திரைகளை கொடுப்பதைப் போன்று, இரும்புச்சத்தை பெருக்கும் மூலிகைகள், பழத்திலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளைக் கொடுத்திட கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்று, தொற்றுநோய்களுக்கு, தடுப்பூசிகளோடு, உடலில் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சித்த, ஆயுர்வேத மருந்துகளை அளிக்கவும் ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. டில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தைப் போன்று, அகில இந்திய ஆயுர்வேத மருத்துவ விஞ்ஞான கழகம் அமைக்கும் திட்டம் நடப்பு திட்ட காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் இந்த திட்ட காலத்தில் முடுக்கி விடப்படும்.

மேலும் யுனானி, யோகா, சித்த மருத்துவத்துக்கும், அகில இந்திய அளவில் பெரிய மருத்துவமனைகளை, 12வது திட்ட காலத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ பன்முகத்தன்மை கோட்பாட்டின்படி, எம்.பி.பி.எஸ்., பாடத் திட்டத்தில் ஆயுர்வேத, சித்த மருத்துவ பாடங்களை சேர்க்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த மருத்துவ கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில், அலோபதி மற்றும் இந்திய மருத்துவ முறையை ஒருங்கிணைக்கும் வகையில், சிகிச்சை முறைகள், மருந்துகளை பரிமாறிக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்துக்கு தனியாக மத்திய கவுன்சில் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது, சித்த மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில், 200 கோடி ரூபாய்க்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நமது முன்னோர் நோயில்லாமல் நெடுநாட்கள் வாழ்ந்தனர். உடை, உணவு, வாழ்க்கை நெறிமுறைகளில் அந்நியத்தன்மை ஆக்கிரமித்ததால்தான், நாடெங்கும் வீதிதோறும் மருத்துவ மனைகள் பெருகிவிட்டன. அடுத்த தலைமுறையேனும் ஆரோக்கியமாக வாழ்ந்திட இத்தகைய முயற்சிகள் துணை செய்யட்டும்.

1 comments:

Kindly post a comment.