Saturday, July 30, 2011

கலைஞர் "டிவி' சொத்துக்களை பறிமுதல் செய்யநடவடிக்கையில் இறங்கியது அமலாக்கத் துறை !

சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (பி.எம்.எல்.ஏ.,), கலைஞர் டிவி'யின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை, அமலாக்கத் துறை இயக்குனரகம் துவக்கியுள்ளது. கலைஞர் "டிவி'க்கு, 215 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், சென்னை உட்பட, தமிழகத்தின் பல பகுதிகளில் இருப்பது தெரியவந்துள்ளது. அதனால், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், அவற்றைப் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.

விதிகளை மீறி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததற்காகவும், சிலருக்கு சலுகை காட்டியதற்காகவும், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கும், அவரது கூட்டாளிகளுக்கும், பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது. அந்த லஞ்சப் பணத்தை மீட்கும் வகையில், இந்தப் பறிமுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

கலைஞர் "டிவி'யில், கருணாநிதியின் மனைவி தயாளு மற்றும் மகள் கனிமொழிக்கு, 80 சதவீத பங்குகளும், அந்த "டிவி'யின் நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு, 20 சதவீத பங்குகளும் உள்ளன. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சலுகை பெற்ற "டி.பி' ரியாலிட்டி நிறுவனம், கலைஞர் "டிவி'க்கு 200 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் கொடுத்தது என்பது, சி.பி.ஐ., விசாரணையில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறி, 2,100 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, ஏற்கனவே "டிபி' குரூப், வெர்ஜின் மொபைல், மில்கிவே டெவலப்பர்ஸ் மற்றும் இடிஏ ஸ்டார் குரூப் ஆகிய நிறுவனங்களுக்கு, அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.