Saturday, January 15, 2011

பாக்கியம் ராமசாமியின் "அக்கறை" ஓர் அனுபவம்!

குமுத்ததின் துணையாசிரியராகப் பணியாற்றிய ஜ.ரா. சுந்தரேசன்தான், பாக்கியம் ராமசாமி என்று தெரிய வந்தது. அவர் அக்கறை என்ற பெயரில் மாதத்திற்கொரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தி வருகின்றார். அம்பத்தூர் சித்திரை சிங்கர், மற்றும் சிரிப்பானந்தா தந்த தகவலின் பேரில், அக்கறை ஜனவரி மாத நிகழ்வில் இன்று கலந்து கொண்டேன். சென்னை இராஜா அண்ணமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவில் எதிர்ச் சாலையில் உள்ள ஒர் பங்களாவில் நடைபெற்றது.

அங்கு ராணி மைந்தன், வ.உ.சிதம்பரம் பிள்ளையின் மகன் வாலேஸ்வரனது மகள் (வ.உ.சியின் பேத்தி) திருமதி. மரகதம் மீனாட்சி ராஜா, பாரதி பாலசுப்பிரமணியன், புதுவை பாடலாசிரியர் இராமதாஸ், பாம்பே கண்ணன், சரவெடி ஸ்ரீதர், டாக்டர் பக்தவச்சலம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படைப்பாளிகளைச் சந்திக்கும் நல்வாய்ப்பாகவும் அமைந்தது.

அங்கு துவக்கத்தில் ஒரு சிறு துண்டுக் காகிதம் தரப்பட்டது. அதில் அனைத்தும் என்ற வார்த்தையும் அதற்குப்பின் மூன்று எழுத்துக்களை நிரப்பிட மூன்று தனித்தனி அடிகோடுகளும் இடம் பெற்றிருந்தன. அதில் எழுதப்படும் மூன்றெழுத்துக்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் பத்து நபர்களுக்கு அழகான பேனாக்கள் பரிசாக வழங்கப்பட்டன. அன்பு -என்று எழுதிய எனக்கும் ஓர் பரிசு கிடைததது. என்னை அழைத்துச் சென்ற சிரிப்பானந்தா, கார்த்திகேயன் ஆகிய இருவரும் பேனாக்களைப் பரிசாகப் பெற்றனர்.

எனது கருத்தாகக் கூறியவை.

தமிழ் மென்பொருளை இலவசமாகத்தரும் azhagi.com, அறிவியல் கட்டுரைகளை அழகுத் தமிழில் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் கனடாவிலிருந்து எழுதி வெளிவந்து கொண்டிருக்கும் jayabarathan.wordpress.com, பாடம் திங்கள் இதழ் ஆசிரியர் வெளியிட்டுள்ள, ஐந்து வகையான ( குடி, போதைப் பொருட்கள், பிளாஸ்டிக், முதலான) சமூகச்சிக்கல்களையும் தீர்வுகளையும் உள்ளடக்கிய DVD குறித்தும், ம.பொ.சி.-யின் பேத்தி, தி.பரமேஸ்வரி maposivagnanam.blogspot.com வலைப்பு மற்றும், சென்னையில் சிலம்புச் செல்வருக்குச் சிலை அமைப்பதில் தமிழக அரசின் அக்கறையற்ற தன்மை, வலைப் பதிவர் பாசிட்டிவ் அந்தோணி முத்துவின் நினைவு மலர் வெளியிடும் விபரம் முதலியவற்றைக் குறிப்பிட்டேன்.

ஆர்வலர் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால் பிப்ரவரி நிகழ்ச்சியில் பங்குபெற முடியும்
யான் பெற்ற இன்பம் நீங்களும் பெறலாமே.

சென்னையில் உள்ள கேபிள் சங்கர், உண்மைத்தமிழன், அண்ணா கண்ணன் மற்றும் சில வலைப் பதிவர்களை அடுத்த மாதம் அழைத்துச் செல்லத் தீர்மானித்துள்ளேன்.

appusamy.com பாக்கியம் ராமசாமி என்றழைக்கப்படும் ஜ.ரா. சுந்தரேசன் வழங்கிடும் தமிழ் நகைச்சுவை இணைய தளம் என்பது ஒரு கொசுறுச் செய்தி!

0 comments:

Post a Comment

Kindly post a comment.