தமிழக எம்.எல்.ஏ-க்களுக்கான கோனார் உரைநூல்!!
இந்தியாவின் மாபெரும் சொத்து என்று மகாத்மா காந்தியால் போற்றிப் புகழப்பட்டவர், தோழர்.ப.ஜீவானந்தம். தமிழ்நாடு உயர்ந்தோங்க இறுதி மூச்சு உள்ளவரை போராடிய பொது உடைமைப் பகலவன்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி எனும் ஊரே, ஜீவாவைத் தமிழகத்திற்குத் தந்திட்ட புண்ணிய பூமி. பிறந்த நாள். ஆகஸ்ட் 21, 1907. அவரது இதயம் துடிப்பதை நிறுத்திக் கொண்ட நாள் ஜனவரி 18, 1963.
அவரது பூத உடல் இன்று இல்லை. ஆனால் புகழுடல் இன்று நிலைத்து நிற்கின்றது.என்றும் நிலைத்திருக்கும். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் அவர் தோற்றுவித்ததுதான். பொதுவுடைமைப் புகழ்பரப்பும் ஜனசக்தி, எண்ணிறந்த படைப்பாளிகளை உருவாக்கிவரும் இலக்கியத் திங்கள் இதழ் தாமரை இரண்டுமே ஜீவா என்று அழைக்கப்படும் ப.ஜீவானந்தம் வித்திட்டவைதான்.
இவை மூன்றாலும் உருவான படைப்பாளிகளின் எண்ணிக்கை ஏராளம். எடுத்துக்காட்டிற்காக இன்றைய உண்மை நிகழ்வு.
எல்லோருக்கும் தெரிந்த நடிகர், சத்தியராஜ் ஒரு படைப்பாளியைப்பற்றிக் கூறுவதைக் கேட்போம்.
"திரைப்படத் துறைக்கு வரும் புதியவர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் முன்னிலையில் நுனி நாற்காலியில் கூனிக் குறுகி வளைந்து நெளிந்து அமர்வர்.ஆனால், முழு நாற்காலியிலும் மொத்தமாக உட்கார்ந்தவர் ஜீவபாரதி" என்று சொல்வார், சத்தியராஜ். இயக்குனர் மணிவண்ணனின் பல வெற்றிப்படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர். இந்த ஜீவபாரதி. பல திரைப்படப் பாடல்களையும் எழுதியவர். "கைகளிலே வலுவிருக்கு கம்மாக்கரை நிலமிருக்கு" என்ற ஜீவபாரதியின் பாடல் வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகிவருவது மகிழ்ச்சிக்குரியதோர் சிறப்பு.
முல்லைச்சரம் என்ற கவிதைத் திங்கள் இதழை 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பவர் கடற்கரைக் கவியரங்கப் பிதாமகன், கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் பொன்னடியான். ஜீவபாரதியின் கவிதையை தன் முல்லைச்சரத்தில் முதல் முதலாக அச்சிடும்போது புனைபெயர் ஒன்றைச் சொல்லுமாறு கேட்கின்றார், ஓர் இளைஞரிடம்! அந்த இளைஞர் இராமமூர்த்தி சொன்ன பெயர் ஜீவபாரதி. ஜீவாவின் வழி நடக்கும் சீரிய பண்பாளர், ஜீவபாரதி. பாரதி புகழ் பாடும் தண்பொதிகைத் தென்றல.
பாரதி- ஜீவா இருவரையும் இரு கண்களாகக் கொண்டு தமிழக இளைய தலைமுறையினர் பலரைப் படைப்பாளிகளாக உருவாக்கிவரும் பெருமைக்கும் சொந்தகாரர், ஜீவபாரதி!
"ஒரு முடிவுக்கு வாருங்கள்" என்ற இவரது முதல் கவிதைத் தொகுப்பினைப் படித்த ஒரு தமிழ் அன்பர் தன் இல்லத்திற்கு வைத்த பெயர் "ஜீவபாரதி." நெல்லை, குமரி மாவட்டங்களில் பள்ளி மாணாக்கர்கள் பலருக்கு இவரது பாடல்கள் பல மனப்பாடம்.
ஆனால், தமிழ் நாட்டுப் பாட நூல்களைத் தயாரிக்கும் தமிழ்ப் பேராசிரியர்கள் எவரும் இன்றளவும் ஜீவபாரதியின் பாடல் ஒன்றக்கூட தமிழ்ப் புத்தகத்தில் இடம்பெறச் செய்யவில்லை. அவர்களில் பலருக்கு இன்றைய இலக்கியங்களில் ஈடுபாடு கிடையாது என்பதே காரணமாக இருக்கக் கூடும்.
ஜீவாவின் படைப்புக்கள் அனைத்தையும் தொகுத்து இன்றைய தலைமுறையினருக்கு வழங்கி வருகின்றார், ஜீவபாரதி! அவரது ஐந்தாவது தொகுப்பாக வெளிவந்த நூல், "சட்டப் பேரவையில் ஜீவா. கிடைக்கும் இடம்:- "பத்மா பதிப்பகம்,10,லோகநாதன் நகர் இரண்டாம் தெரு, சூளைமேடு,சென்னை,600 094.விலை.ரூபாய்120/-
சட்டப்பேரவையில் எப்படிப் பேச வேண்டும் என்ன பேச வேண்டும் என்று தெரிந்து கொள்ள இந்தப் புத்தகம் ஓர் கலங்கரை விளக்கம். வெளிநடப்பும், சபாநாயகரின் தற்காலிகப் பதவிப் பறிப்பும், நிபந்தனை அற்ற தாராள மன்னிப்புமாக மக்கள் வரிப்பணத்தை விரயமாக்கிக் கொண்டிருப்போர் எல்லோருமே படித்துப் பயன்பெற வேண்டிய நூல்.
சுதந்திரம் பெற்றபின் தமிழ் நாட்டில் முதல் பொதுத் தேர்தல் 1952.பிப்ரவரி மாதம். நடந்தது.
தமிழ்நாடு, ஆந்திரம் (தெலிங்கானா நீங்கலாக), மலபார் உள்ளிட்ட சென்னை மாகாணத்திற்குத் தேர்தல் நடந்தது. தி.மு.க. தேர்தலில் போட்டியிடவில்லை. "திராவிட நாடு" கோரிக்கயை ஏற்றுக் கொண்டால், கம்யூனிஸ்டுகளை ஆதரிக்க தி.மு.க. தயாராய் இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி இதனை ஏற்றுக்கொள்ளவில்லை."அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு" என்பது அன்றைய தி.மு.க.வின் முழக்கம்.
ஈ.வே.ரா. எடுத்த நிலையோ வேறானது. காங்கிரஸ் என்ற பாம்பினை அடிப்பதே அவர் குறிக்கோள்.( அன்று அவர் பயன்படுத்திய வார்த்தை) எந்தெந்தத் தொகுதியில் எந்தெந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அந்தந்தத் தொகுதியில் அந்ததக் (காங்கிரஸ் அல்லாத) கட்சியை ஆதரிப்பதென்பது ஈ.வே.ராவின் முடிவு.
374 எம்.எல்.ஏ.க்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். கவர்னரால் ஒரு எம்.எல்.ஏ.நியமனம் செய்யப்படுவார். ஆக மொத்தம் 375 சட்ட்சபை உறுப்பினர்கள்.
அது கம்யூனிஸ்டுகளுக்குப் பொற்காலம். 63 கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்றனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரிதத சிலரும் வெற்றி பெற்றது மற்றொரு சிறப்பு. சென்னை வண்ணாரப் பேட்டையில் ஜீவா வெற்றிவாகை சூடினார். எதிர்த்தவர்கள் எல்லோரும் முன்தொகையை இழந்தனர்.
சட்டசபையில் எதிர்க் கட்சித் தலைவர், தோழர்.பி.ராமமூர்த்தி. துணத்தலைவர், தோழர்.எம்.கல்யாணசுந்தரம். இடதும் வலதும் ஒன்றாக இருந்த காலம். ஐந்து எருது ஒருசிங்கம் கதையை மறந்துவிட்டு, ஓரிரு சீட்டுக்களுக்காக கூட்டணி சேரும் கம்யூனிஸ்டுகள் கவனிக்க வேண்டும்
பி.டி.ராஜன் தற்காலிக சபாநாயகர். (1952, மே,3). ஜே.சண்முகம் பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட சபாநாயகர். (1952, மே 6). பி.பக்தவத்சல நாயுடு துணை சபாநாயகர்.
தேர்தலில் இராஜாஜி போட்டியிடவில்லை. மேல்சபையில் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். தமிழகத்தில் நடந்த முதல் தேர்தலில் ,மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இராஜாஜி, முதல்வரானது கடந்தகால வரலாறு.
சட்டசபை கூட்டப்படுவதற்கு முன்பே "இன்றைய பார்முலாக்கள்" மூலம் ராமசாமி படையாச்சி, மாணிக்கவேல் நாயக்கர் இராஜாஜியால் விலைக்கு வாங்கப் பட்டனர். தோழர்.கல்யாணசுந்தரம் இராஜாஜியின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கவில்லை என்பதும் ஓர் வரலாற்றுச் செய்தி. பின்னாளில், கே.சுப்பு, மணலி கந்தசாமி போன்றோர் திராவிடக் கட்சிகளுக்கு விலைபோனது தமிழகத்தின் துயரம்.
ஜீவாவின் சட்டசபைப் பேச்சுக்கள் வெற்றுக் கூச்சல்கள் அல்ல. ஆழமான கருத்துப் பெட்டகங்கள். அவற்றை, பொருளாதாரம், உணவு, விவசாயம், விவசாயிகள்-தொழிலாளர் பிரச்சினைகள், தொழில் துறை,ஜானநாயக அடிப்படை உரிமைகள், வளர்ச்சிப் பணிகள், சமூகச் சீர்திருத்தம், கல்வி, தமிழ் மொழி, மொழிவழி மாநிலம் என பல்வேறு பிரிவுகளாக வகைப்படுத்திக் காணலாம்.
சட்டப் பேரவையில் ஜீவா என்ற இந்த நூலில், 38-தலைப்புக்களில் தொகுத்தளித்துள்ளார், ஜீவபாரதி. ஜீவா தன் பேச்சில் பயன்படுத்தியுள்ள தமிழிலக்கியப் பாடல்களை மட்டுமே, ஜீவபாரதி தனிப்புத்தகமாகக் கொண்டு வரலாம். குற்றாலக் குறவஞ்சியையும், திருமூலரையும், கம்பராமாயணத்தையும் படிப்பதற்கு ஜீவாவிற்கு நேரம் எப்படிக் கிடைத்தது என்பதே ஆய்வுக்குரிய ஒன்று.
ஜீவாவின் சட்டசபைப் பேச்சுக்கள் அனைத்தையும் இணையதளத்தில் இடம்பெறச் செய்யும் மகத்தான பணியைப் பொள்ளாச்சி தமிழ்க்க்கனல் நசன் பார்த்துக்கொள்வார். இன்னும் ஓரிரு நாட்களில் தமிழம் இணையத்தில் அவர் அச்சேற்றும் நூல் இதுவாகத்தான் இருக்கும்.
பாரதிபாடல்கள் பற்றி 1955, மார்ச் 14-ல் ஜீவா பேசிய மிகச் சிறிய உரை பின்வருமாறு. ஜீவா மிகக் குறைந்த நேரம் பேசியது இதுதான். மற்றவை விரிவானவை.
"கனம் சபாநாயகர் அவர்களே, கல்வி அமைச்சர் அவர்கள் பாரதியாருடைய நூல்களைப்பற்றிக் குறிப்பிடும்போது, பொதுமக்கள் விருப்பம்போல் அவற்றை எப்படி வேண்டுமானாலும் வெளியிட்டுத் தமிழ் மக்களுக்குத் தரும்படியாக, விடுதலை செய்திருப்பதாகக் கூறினார்கள். அது வரவேற்கத் தக்கது. ஆனால், நூல்களை வெளியிடும்போது AUTHORISED VERSION- ஐத்தான் வெளியிட வேண்டுமென்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். இங்கே நான் ஒன்று சொல்ல விரும்புகின்றேன். AUTHORISED VERSION - என்று வரும்போது, பாரதியார் உணர்ச்சியோடு, தேசபக்த வீறோடு, தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு ஒரேதரமாக வாழவேண்டுமென்ற உணர்ச்சி கொண்டு பாடிய பாட்டுக்களின் பல வரிகள் ஏற்கனவே செல்லரிக்கப்பட்டனவோ அல்லது அரசாங்கத்தால் விழுங்கப்பட்டனவோ தெரியவில்லை. (ஆள்வோரின் குறைகளைச் சுட்டிக் காட்டும்பொழுதுகூட முதல்வரின் முகம் வாடிவிடக் கூடாதென்ற கரிசனத்தோடு பயபக்தியுடன் பேசுகின்ற தமிழகத்தை ஆள்வோரின் தோழமைக் கட்சியினர் கவனிக்க வேண்டும் இதற்குப் பதிலாகத் தம் கட்சியைக் கலைத்துவிட்டு ஆள்வோருடனேயே ஐக்கியமாகிவிடலாம்)
எட்டையபுரத்தில் பாரதி மண்டபத் திறப்புவிழாவின்போது பாரதியாரின் பாட்டில், "பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே" என்ற அடிகள் மட்டும் எடுக்கப் பட்டிருந்தது. பாரதியின் "மறவன் பாட்டு" கல்வி அமைச்சருக்கு நன்றாகத்தெர்யும் என்று நம்புகின்றேன். அதில் பல அடிகள் DASH போடப்பட்டிருக்கும். எங்களைப் போன்றவர்கள் பள்ளியில் இருந்த காலத்தில் பாரதியுடைய செய்யுட்களைப் படித்திருக்கிறோம். பாரதியுடன் வாழ்ந்த சுப்பிரமணிய சிவா , அவருடைய தேசபக்த சமாஜ் ஊழியர்கள் முதலானவர்கள் அன்றைக்குப் பாடிய அடிகள் எல்லாம் இன்றைக்கும் பழைய தேச பக்தர்களுக்கு நன்றாக ஞாபகமிருக்கின்றன. அவையெல்லாம் விடப்பட்டிருக்கின்றன.இன்னும் சில பாடல்கள் PONDICHERY--ல் பாடப்பட்டது. உண்மையில் சமுதாயம் சமத்துவமாக மாற வேண்டும் என்று பாடிய பாடல்கள் இன்றைக்கு, SOCIALISTIC PATTERN OF SOCIETY ஏற்படவேண்டுமென்று சொல்லப்படுகின்ற, அந்த சமுதாயத்திற்கு ரொம்ப அவசியமானது. இப்படிப்பட்ட பாடல்கள் எல்லாம் AUTHORISED VERSION -l வரவில்லை என்பதை கவனத்திற்குக் கொண்டுவந்து, இந்தப் பாடல்களும் வெளிவரும்படியாகச் செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன்".
( அன்றைக்கு இராஜிஜியின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தவர், டாக்டர். எம்.வி.கிருஷ்ணாராவ். இது ஒரிஜினல் டாக்டர் பட்டம்)
பாரதி ஓர் பார்ப்பனியக் கவிஞர் என்று தமிழகத்தின் திராவிடர்கள் புறக்கணித்த காலக்கட்டத்தில், பட்டிதொட்டி எங்கும் பாரதி புகழ்ப் பரணி பாடிய பேராசான் ஜீவானந்தத்தின் நினைவுநாள் ,ஜனவரி,18. எனவேதான் இன்று இந்த வலைப்பதிவு.
ஒரு போனஸ் செய்தி:-
பாளை சண்முகம் தயாரிப்பில் உருவானது ஏழாவது மனிதன். அதன் இயக்குநர் ஹரிஹரன். அதில் இடம்பெற்ற பாரதியார் பாடல்கள் அனைத்தும், பாரதி வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்குவதற்காகத் தொகுக்கப்பட்டவை. ஆனால், அவர், பாரதியை அச்சு அசலாகக் கொண்டுவர இயலாதென்று முடிவுக்கு வந்தார். தாழையூத்து சங்கர் சிமெண்ட் தொழிற்சாலையில் பாளை சண்முகம் வேலை பார்த்தபோது ஏற்பட்ட அனுபவங்களைக் கோர்த்து ஏழாவது மனிதன் திரைக்கதையை உருவாக்கினார். பாரதியார் திரைப்படத்திற்காகவே தொகுக்கபட்ட பாரதி பாடல்களும் ஏழவது மனிதன் திரைப்படத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.
முண்டாசுத் தலைப்பாகையுடனும், முறுக்கு மீசையுடனும் நாம் பார்க்கும் பாரதி படங்கள் அவரது உண்மையான தோற்றம் அல்ல. கற்பனையில் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் தோற்றத்தைப் போன்று கற்பனையானதேயாகும். தமிழகத்தில் இந்திய சோவியத் கலாச்சாரக் கழககத்தின் சார்பில் வெளிவந்த "இஸ்கஸ்" மாத இதழின் அட்டைப் படத்தில் அசல் படம் ஒருமுறை வெளியிடப்பட்டிருந்தது.
சமூக அக்கறையோடும், இலக்கிய ஈடுபாட்டுடனும் திகழ்ந்து வரும் தற்போதைய தினமணி ஆசிரியர், மதிப்பிற்குரிய திரு.கே.வைத்தியநாதன் அவர்களுக்கு ஓர் கோரிக்கை.
தினமணி நாளிதழில் தலையங்கத்திற்கும் மேலாக, "நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்" என்ற வரிகள் இடம் பெற்று வருகின்றன. அவற்றின் மூலகர்த்தா, பாரதியார். அசல் பாரதியாரின் படத்துடன் சுப்பிரமணிய பாரதியார் என்ற முழுப்பெயரையும் இடம் பெறச் செய்வதுதான் நியாயமானதாக இருக்கும். என் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் தினமணி நிர்வாகத்திற்கும் அதன் ஆசிரியருக்கும் கோடி கோடி நமஸ்காரங்கள்..
0 comments:
Post a Comment
Kindly post a comment.