Tuesday, March 30, 2010

மாஸ்கோவில் மழை பெய்தால் கம்யூனிஸ்டுகள் மதுரையில் குடைப் பிடிப்பார்கள் என்ற வார்த்தைகளுக்குச் சொந்தகாரர் -அம்பேத்கரின்37 தமிழ் நூல் தொகுப்பாளர்-மரணம்!


ரெங்கசாமி என்கிற இவர்
உயர்நிலைப்பள்ளியில்
படிக்கும் பொழுது
"பாரத நாடு பழம் பெரும்நாடு" என்ற கட்டுரைப் போட்டி நடந்தது. 40 பக்க நோட்டு முழுவதும் கட்டுரை எழுதி ஆசிரியரிடம் பாராட்டுப் பெற்றார்.மேற்படி பாராட்டு ,
அந்தக் காலத்தில் சிறந்த பத்திரிக்கைகளாகத் திகழ்ந்த ஆனந்த போதினி, பிரசண்ட விகடன், ஹனுமன், ஹிந்துஸ்தான்,
ஆகியனவற்றில் இவருடைய
எழுத்துக்கள் வெளிவரக் காரணிகளாயின.
அறிவுக்களஞ்சியம் வெ.சாமிநாத சர்மா எழுதிய இத்தாலிய வரலாற்று நூலைப் படித்தபின் ரெங்கசாமி, மாஜினி என்ற புனை பெயரை வைத்துக் கொண்டார். 1942-ல் ஆனந்த விகடனில் "பார்வதியின் உயில்" என்று வெளியனதுதான் இவரது முதல் படைப்பு.அல்லயன்ஸ் நிறுவனம் வெளியிட்ட 50 சிறந்த சிறுகதைகளில் இவர் எழுதிய " குல தெய்வம்" என்ற சிறு கதையும் இடம்பெற்றது.

இந்த அனுபவங்கள் ஆதித்தனார் தினத் தந்தியை மதுரையில் துவக்கியபோது மாஜினியைத் தந்தியின் துணை ஆசிரியராக்கிக் கொண்டார். அப்பொழுது இவரது வயது 22 தான்."மாஸ்கோவில் மழை பெய்தால் கம்யூனிஸ்டுகள் மதுரையில் குடை பிடிப்பார்கள்" என்று இவர் தினத்தந்தியில் எழுதிய வாசகங்களை கம்யுனிஸ்ட் எதிர்ப்பாளர்கள் தம் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்திக் கொண்டனர்.இடதுசாரிக் கருத்துக்களால் கவரப்பட்ட மாஜினி "தந்தி ஊழியர்கள் சங்கம்" அமைத்தார். ஆதித்தனார் இதனை விரும்பவில்லை. என்வே, நல்ல வருவாய் உள்ள வேலையை விட்டு தாமாகவே விலகிக் கொண்டார்.

இவரது வற்புறுத்துலால்தான் சேலம் டாக்டர். பி.வரதராஜுலு நாயுடு, ஜவுளி வணிகர்களின் துணக்கொண்டு "தமிழ்நாடு" பத்திரிக்கையை ஆரம்பித்தார். சோஷலிஸ்ட் கருத்துக்கள் அதிகம் தமிழ் நாடு இதழில் இடம் பெறுவதை முத்ல் போட்டவர்கள் விரும்பவில்லை. என்வே, அதிலிருந்தும் விலகி, புரட்சி என்ற வார இதழைத் தாமே துவக்கினார்.

பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். ஜனசக்தி, தாமரை, சோவியத் நாடு, பத்திரிக்கைகளில் இவரது எழுத்தாற்றல்கள் பரிணமித்தன.

தமிழ்த் திரையுலகில் இன்றும் மறக்க முடியாத கல்யாணப்பரிசு, குலதெய்வம் இவரது கதைகள்தான். ஆனால் அதற்கு உரிய பலன்கள் இவருக்குக் கிடைக்கவில்லை. உரிமைகளைப் போராடிப் பெறவும் முற்சித்தாரா என்றும் தெரியவில்லை.

சோவியத் நூல்கள் பலவற்றை மொழி பெயர்த்திருக்கின்றார். பல தமிழ் நூல்களை எழுதி இருகின்றார்.

மத்திய அரசு ட்க்டர். அம்பேத்கரின் அனைத்து நூல்களையும் தொகுத்துத் தமிழில்
வெளியிடும் முயற்சியில் இறங்கியது. அதற்கு மாஜினியை நிர்வாக ஆசிரியராக நியமித்தது. இதனை இவரது வாழ்க்கையின் மணிமகுடம் என்று சொல்லலாம். இவரது உழைப்பில் இன்றுவரை 37 தொகுதிகள் வெளிவந்துள்ளன என்பது நாம் எல்லோருமே பெருமைப்பட வேண்டிய விஷயம்.

இவற்றை எல்லாம் இன்று எழுத வேண்டியதற்குக் காரணம் என்ன? 28-03-2010-ல் மாஜினியின் உயிர் உடலை விட்டுப் பிரிந்து போனது. 14-04-2010 வந்திருந்தால் மாஜினியின் வயது 90!

BEHIND INDIA -என்ற ஆங்கில இதழ் தமிழ் நாட்டு எழுத்தாளரின் மரணச் செய்தியை முதன்மைச் செய்தியாக வெளியிட்டிருக்கின்றது;கணினியில் கண்ட தகவல். அம்பேத்கர் நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்த இந்த மானுட விசுவாசிக்குக் கண்ணீர் அஞ்சலி தெரிவிப்பது நியாயம்தானே நண்பர்களே?

0 comments:

Post a Comment

Kindly post a comment.