கவிஞர் தமிழ்ஒளியின் இயற்பெயர் விஜயரங்கம். பாரதியைப் போன்று இவரும் 40 ஆண்டுகாலம்தான் வாழ்ந்துள்ளார். பிறப்பு : 21.9.1924, இறப்பு : 29.3.1965. புதுவையில் பிறந்தார். புதுவை கல்வே கல்லூரி, கரந்தை செந்தமிழ்க் கல்லூரி ஆகியவற்றில் பயின்றார். தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தார்.
பாரதிதாசன் மாணவர்; திராவிட மாணவர் கழகத்தில், ஆரம்ப காலத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1947 முதல் பொதுவுடைமைக் கருத்தினை அங்கீகரித்து செயல்பட்டு வந்தார். முன்னணி, மனிதன் போன்ற பல ஏடுகளில் அவர் எழுதியவற்றை பலரிடம் சேகரித்து, தொகுத்து நூற்களாக வெளியிட்ட பெருமைக்குரியவர் செ.து. சஞ்சீவி என்பவராவார். இந்த அரிய பணிக்காக அவரை எத்துணை பாராட்டினாலும் தகும். ஜனசக்தி, போர்வாள், அமுதசுரபி முதலிய ஏடுகளிலும் அவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.
கவிஞரின் கவிதைகள் பல தலைப்புகளில் நூல்களாக வெளிவந்துள்ளன. நிலை பெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல், நீ எந்தக் கட்சியில்?, மே தினமே வருக!, கண்ணப்பன் கிளிகள், விதியோ வீணையோ (இசை நாடகம்), மாதவி காவியம், மக்கள் கவிதைகள் முதலியவை அவரது முக்கிய கவிதை நூல்களாகும். உயிரோவியங்கள் என்ற நூல், அவருடைய 15 சிறுகதைகளைக் கொண்ட நூலாகும்.
மக்கள் கவிதைகள் என்ற நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பன்மொழிப் புலவர் டாக்டர் கா. அப்பாதுரை அவர்களின் கருத்துக்கள் மிகவும் நெஞ்சை அள்ளுவனவாகும்.
கடல் பார்க்க விரும்பியவன், பசிபிக் மகாகடலின் நடுவே விடப்பட்டது போல் திணறினேன். இவ்வளவு பெரிய ஒரு கவிஞன் என் காலத்தில், என் அருகே வாழ்ந்தபோதும், அவன் பெருமையை அறிந்து கொள்ளாமல் எப்படி இருந்துவிட்டேன் என்று நான் அங்கலாய்த்தேன்.
பாரதியின் கவிதைகள் சித்தர் மரபின் கவிதைகள் எனலாம். பாவேந்தரின் கவிதைகள் சங்க இலக்கியத்தின் பெருமைகளை நமக்கு மீண்டும் தந்தன. ஆனால், சிலம்புக் கவிஞன் இளங்கோ, சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர் ஆகியோருடைய கவிதை மாயங்களை (அதிசயங்களை) இன்றைய தமிழகத்திற்கு தமிழ்ஒளியின் கவிதைகள் மூலமாக மீட்டுக் கொணர்கின்றன.
ஒரு சமதர்ம இந்தியாவும், ஒரு சமதர்மத் தமிழகமும் அமையும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அது அமையும் போது, கவிஞர் தமிழ்ஒளி உலகத்தில் முன்னணிக் கவிஞருள் ஒருவராகக் கட்டாயம் இடம் பெறுவார். தேசியக்கவி பாரதியார் ருஷ்யப் புரட்சியையும், ஐரோப்பிய நாடுகளின் விடுதலைச் சூழல்களையும் முதன்முதலில் பாடிச் சிறப்பித்தது போல, வண்ணப் புரட்சிக்கவிஞர் தமிழ்ஒளி, சீனத்தின் புரட்சியையும், ஆசிய நாடுகளின் விடுதலைச் சூழல்களையும் தனது ஒப்புயர்வற்ற பாடல்களால் சிறப்பித்துள்ளார். இது அவரது தலைசிறந்த பெருமையாகும்.
மாதவி காவியம் நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள டாக்டர் பூவண்ணன் என்பார் இது குறித்து குறிப்பிட்டுள்ளமை இங்கு மனங்கொள்ளத்தக்கதாகும்:-
மாதவி கதை இளங்கோ சிலம்பில் கூறியது. அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ஒளி படைத்துள்ளார். கண்ணகியைக் கோவலன் பிரிந்த காரணத்தை இளங்கோ கூறவில்லை. கண்ணகிக்கு கலையார்வமில்லாததால், மாதவியிடம் சென்றானென்பர் சிலர். தமிழ்ஒளி வேறுவிதமாக, குழந்தையில்லாக் குறை என்று குறிப்பிடுகிறார். புலியொன்றிடப் புகழென்றிடப் / பூப்போல் ஒரு பிள்ளை / கிளையாடவும், கிளியாடவும் / கீர்த்திக் கொருபிள்ளை / வயிருற்றிடு மலட்டுப்பிணி / மாய்க்கும் ஒரு பிள்ளை.
கோவலன் இக்கவலை மறக்க கலைகளை நாடினான். பின்னர் கலைச் செல்வியாம் மாதவியை நாடினான். மாதவியைக் குறிப்பிட வந்த கவிஞர்:-
கணிகை என்ற பெயர் படைத்த / கற்பு மாதவி - தெய்வக் / கற்பு மாதவி - என்று குறிப்பிடுகிறார்.
டாக்டர் மு. வரதராசன் அவர்கள், தமிழ் இலக்கிய வானில் மின்னிப் பொலியும் காலை நட்சத்திரம் என தமிழ்ஒளியைப் போற்றியுள்ளமை இங்கு நினைவு கூரத்தக்கதாகும். உயிரோவியங்கள் என்ற 15 சிறுகதைகளைக் கொண்ட நூல், கவிஞர் தமிழ் ஒளி, கவிதைகளில் மட்டுமின்றி, சிறு கதைகள் இயற்றுவதிலும் திறன்மிக்கவராகத் திகழ்ந்தமையினை எடுத்துக் கூறுகிறது. இதனைக் குறித்து கவிஞர் இன்குலாப் குறிப்பிட்டு உள்ளது கவிஞரைப் புரிந்துகொள்ளப் பெரிதும் துணைபுரிவதாகும்.
கெட்ட கனவு என்ற சிறுகதையில் ஒரு நீதிபதியை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். சுவரில் ஆணி அடித்துக் கயிறு முடிந்து, இரவில் உமது உச்சிக்குடுமியை அதில் கட்டிவிட்டுத் தூங்கி விழும்பொழுது வெடுக்கென்று குடுமியிழுக்க - துடித்தெழுந்து கண் விழித்துப் படித்து சட்ட புத்தகத்தைக் கரைத்துக் குடித்து, சட்டப்புலியென்று பெயரெடுத்தவர் நீர்! ஒரு நாளாவது மனிதனைப் பற்றியும், அவன் வாழ்க்கை எப்படி நடக்கிறது என்பது பற்றியும், அவன் சூழ்நிலையைப் பற்றியும் நீர் யோசித்ததுண்டா?
இந்த வரிகள் இன்றும் கூர்மையானவை. ஆனால், இவை எழுதப்பட்டது இன்றல்ல; கட்சி தடை செய்யப்பட்ட காலம். நீதிபதிகள் கேள்விக்கும் அப்பாற்பட்ட புனிதர்கள் என்ற மாயை மூடியிருந்த காலம். அந்த காலத்தில் உள்ளத்தில் உண்மை ஒளி உடையவன் ஒருவன் மட்டுமே இப்படி எழுதியிருக்க முடியும். தமிழ்ஒளி இதை எழுதினார்.
மே தினமே வருக! என்ற அவரது கவிதை உழைப்பாளர் உலகிற்கு அவர் வழங்கிய டானிக் எனலாம். கையில் விலங்கிட்டுக் காலமெல்லாம் கொள்ளையிட்ட / பொய்யர்குலம் நடுங்கப் பொங்கிவந்த மே தினமே! / மன்னர் முடிதரித்த நாட்கள் மடிந்தன காண்! / மின்னாய் எரியுற்ற மீனாய் விழுந்தன காண்! / நாதம் கிளர்ந்துலகை நாள்முழுதும் ஆட்டிவைத்த / வேதம் பெயர் மழுங்கி வெற்றுடலாய் ஆனதுகாண்!
ஆனால், ஏழைத் தொழிலாளர் ஏற்றி வைத்த தீபத்தில் / நின்னுடைய நாமம் நிலைத்ததுகாண் இவ்வுலகில் / ......................... /நீல நெடுந்திரையாய் நீளுகின்ற கைகளினால் / ஞாலத் தொழிலாளர் நல்லரசைத் தோற்றுவிப்போம் / என்ற சபதமொடும் எண்ணரிய வேகமொடும் / குன்றா உறுதியொடும் கொள்கையோடும் நீ வருக! / ......................... / தெருவில் தொழிலாளர் சிம்மக்குரல் எடுத்து / நின்னாமம் உச்சரிக்க நின்றார் அணி அணியாய்! / பொன்னாமம் வையம் புகழ்நாமம் நின்னாமம்! / ஆலையின் பக்கம் அணிபெற்ற மைதானம்! / சோலைப் பறவைகளாய் சூழ்ந்த தொழிலாளர் / ஊர்வலமோ வெள்ளம்! ஒரு கடலின் நெடுங்கைகள்! / ......................... / குமுறியெழுந்து குருதியெலாம் சிந்தியதால் / வான்சிவந்து மண்சிவந்து மகாகடலும்தான் சிவந்து / ஊன்சிவந்து வந்தாய் உயிர் சிவந்த செந்தினமே! / ......................... / உலகத் தொழிலாளர் ஒற்றுமையே, நல்லுணர்வே, / அன்பே, இருட்கடலின் ஆழத்திருந்துவந்த / முத்தே, முழுநிலவே, மேதினமே வாராய் நீ! / வாராய் உனக்கென்றன் வாழ்த்திசைக்கின்றேன்! இந்த மகத்தான பாடலை, 1949 மே, முன்னணி என்ற இதழில் எழுதியுள்ளார்.
ஆலைத் தொழிலாளி நோய்கொண்டு வந்தபோது, ஆலையின் மருத்துவர் அலட்சியத்தால் அவன் உயிர் போகிறது. இந்தக் கொடுமையினைக் கண்டித்து நீ யார் பக்கம்? என்ற கவிதையினை எழுதியுள்ளார். அடக்குமுறைக் காலத்தில் தோழர்கள் அனுபவித்த வேதனையை, ஒரு தாயின் துயரத்தை தாய் செய்த குற்றம் என்ற கவிதையில் வெளிப்படுத்தியுள்ளார்.
துறைமுகத் தொழிலாளி, துணிதுவைப்போர், கழைக் கூத்தாடி, நெசவாளி என உழைப்பாளர் வாழ்க்கையை கவிதை களில் உணர்ச்சி பொங்க சித்தரித்துள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களின் இழிநிலையை எடுத்துரைத்து, அவர் பேரால் சுருட்டும் கூட்டத்தை தோலுரிக்கும் கவிதைதான் மாசற்ற தியாகம்.
உன்பேர் உரைத்தே உயர்ந்தார் ஒருசில பேர்! / துன்பக் கொடுஞ்சேற்றில் தூர்ந்தாய், துயருற்றாய்! / அன்றிருந்த மேனி அழியாதிருக்கின்றாய்! / தொன்றுதொட்டு வந்த சுமை தூக்கி மடிகின்றாய் / மண்ணில் மடிகின்ற மாசற்ற தியாகத்தை / எண்ண, எழுத எவருள்ளார் இந்நாட்டில்?
கடவுளின் பெயரால் நடக்கும் மோசடிகளைப் பல. கவிதைகளில் சாடியுள்ளார். மெட்ராஸ் எலக்ட்ரிக் ட்ராம்வே தொழிலாளர் போராட்டம், புதுவைத் தொழிலாளர் போராட்டம் போன்றவற்றை ஆதரித்துக் கவிதைகள் படைத்துள்ளார்.
தொழிலாளர் உரிமையினைத் தகர்ப்பதற்கும் / சுதந்திரத்தை ஒற்றுமையை உடைப்பதற்கும் / இழிவான செயல் செய்து கருங்காலிக்கு / எலும்பிட்டு நாய்போலே வேலை வாங்கி / அழிவுவழி நடந்து செல எண்ணிடாதீர் / அலையலையாய் எழுகின்ற முழக்கம் கேட்பீர்!
செல்வர்களுக்கு ஒரு கேள்வி என்ற கவிதையை 1960 ஜனவரி 14-ல் ஜனசக்தி வெளியிட்டது. உலகம் உன்றன் கைகளில்தான் உருளுமோ? - ஏழை / உரிமை பெற்றால் இயற்கை என்ன? மருளுமோ? / கலகம் செய்யும் ஏற்றத்தாழ்வை நீக்கடா - பேதம் / காட்டுகின்ற முறைமையைத்தூள் ஆக்கடா!
1959ல் சோவியத் ரஷ்யா ஸ்புட்னிக் என்ற விண்கலத்தை வானில் செலுத்தி, சந்திரனில் செங்கொடியை பதிப்பித்த சிறப்பிiனை, ஜனசக்தியில் எழுதிய கவிதை ஒன்றில் போற்றியுள்ளார். காதலர் பார்த்தநிலா - புவி / கற்பனை யாவையும் சேர்த்த நிலா! / மோதிக் கடல் அலையைத் - தன் / மோகவெளிச்சத்தால் ஈர்த்த நிலா! / மண்ணவர் கைகளிலே - ஒரு / மாயவிளக்கென மாற்றமுறப் / பணணினர் உருசியரே - இப் / பாரினிலே வர்க்கினி யார் நிகரே!
பொங்கல் திருநாளில், அவரது பொங்கல் நினைவு என்ற கவிதை வரிகளை நினைவு கூர்வது சாலப் பொருத்தமுடைய தாகும். உழவர்க்கே நிலம் வேண்டும்! யாவருக்கும் / உணவளிக்கும் அந்நாளே பொங்கல் என்று / முழக்கமிடும் வரிகள் தமைக் கண்ணால் கண்டேன் / முன்னோக்கி நடந்திட்டேன்; இந்தச் சொல்லை / எழுதியவர் என் தோழர் ஆவார் என்றே /இணையற்ற வீரன் போல் நடக்கலானேன்!
உழைப்பாளரைப் பாடிய உன்னதக் கவிஞனின் கவிதைகள் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் பரவிட வேண்டும். கவிஞர் தமிழ்ஒளியின் பவளவிழாவினை நாடெங்கும் நடத்திட நம்மவர் முனைய வேண்டும். மூடிமறைக்கப்பட்ட தலித் கவிஞனை, புதிய தலைமுறைக்கு எடுத்துரைப்போம்.
கவிஞர் தமிழ்ஒளி, மரணத்தை வென்று நிற்கும் கவிஞன் என்பதில் ஐயமில்லை. அதனைக் கவிஞரின் வரிகளே எடுத்துணர்த்தும்:
வஞ்சகக் காலன் / வருவதும் போவதும் / வாழ்க்கையின் நியதியடா - எனில் / செஞ்சொற் கவிஞன் / காலனை வென்று / சிரிப்பதியற்கையடா!
Monday, March 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.