Thursday, January 14, 2010

நாளைய வரலாற்றுக்கு ஒரு குறிப்பு- பிரபஞ்சன்!


குச்சி குச்சியாய்க் கோடுகள் கிழித்து
குருவி முட்டை போல்
வட்டங்கள் போட்டு
இது என் அம்மா
இது என் அப்பா
இது என் சினேகிதி சங்கரி என்று
மூன்றாம் வகுப்பு யாழினி எழுதிய
சித்திரம் இங்குதான்
இடிந்து விழுந்த சுவரில்
காணக் கிடைத்தது.

2006 தைத் திங்கள் ஒட்டிய
இளநரையோடிய அந்திக்கு முன்னால்
கிழிநொச்சிக் காட்டில்
இழுத்துச் செல்லப்பட்ட சுந்தரவதனியின்
இரும்புப் பெட்டிக்குள் இருந்தவை
நாலு சேலைகள் சட்டைகள்
ஓரம் கிழிந்த மூன்று பாவாடைகள்
மற்றும் மடித்துப் போட்ட தாளுக்குக் கீழே
கடவுச் சீட்டுப் புகைப்படம் ஒன்று
வெழுத்த வேட்டி போல் சிரித்தபடி ஒருவன்
புகைப்படத்தின் பின்
என் நேசத்திற்குரியவளுக்கு
என்று மட்டுமே எழுதியிருந்தது.

சிறகு உதிர்த்த பறவைகள் சிலதும்
பசியில் மயங்கிய நாய்கள் சிலதும்
முறிந்த பனைகளும்
சாம்பல் பகலுமே
பார்க்கக் கிடைத்தன
மாமிச வாசனை வீசும் வெளியில்
யாருக்காகவோ பூத்துக் கிடந்தது
பாதையோரத்துக்
காட்டுச் செடியொன்று.

பிரபஞ்சன் எழுதிய கவிதை :
அரைக் கம்பத்தில் தொப்புள் கொடி - என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்ட்டது.

தொகுப்பாசிரியர் : அறிவுமதி.

சாரல் வெளியீடு, 189 அபிபுல்லா சாலை, சென்னை-600017.

0 comments:

Post a Comment

Kindly post a comment.