Friday, December 18, 2009

சிறை- கலை மாமணி வீ,கே,டி.பாலன்








1979-ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பணி நியமன நிரந்தர ஆணை கேட்டு, போராட்டம் நடத்திய பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் சிறைச்சாலையில் வைக்கப் பட்டார்கள். அந்தப் பேராசிரியர்களில் ஒருவர் நம்முடைய நகைச்சுவைப் பட்டிமன்றத் தலைவர் சாலமன் பாப்பையா. மதுரைப் பேராசிரியர்களில் அருட்தந்தை நோவா என்பவரும் முக்கியமானவர்.

சிறைச்சாலைகளில் நடக்கும் கொடுமைகளையும் அப்பாவிகளின் ஆதங்கங்களையும் புரிந்து கொண்டார், பேராசிரியர் நோவா.தமிழக அரசை நாடுகின்றார். சிறப்பு அரசாணை பெறுகின்றார். அனைத்து சிறைச் சாலைகளுக்கும் சென்று கடந்த 28 ஆண்டுகளாக, கைதிகளுக்குக் கல்வி அளிக்கும் புனிதப் பணியை மேற்கொண்டு வருகிறார்.

ஒரு சாதிக் கலவரத்தின்போது, ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குள் கோபத்துடன் வந்த ஆட்கள், சிலரைக் கொன்று விட்டுப் போய்விடுகிறார்கள்.இதில் தன் மனைவியைப் பறி கொடுத்த ஒருவன் கோபம் கொண்டு, தன் உறவினர்களை அழைத்துக் கொண்டு, தன் சாதியினரைக் கொன்றவர்களின் கிராமத்திற்குள் சென்று, அங்குள்ளவர்களைக் கொன்று குவிக்கத் தொடங்குகின்றான்.அப்போது அவனது அரிவாளுக்கு முன்னால் ஒருவன் பயந்து போய் நிற்கிறான்.அவன் மனைவி ஓடி வருகிறாள்."அய்யா.. அவரை மன்னித்து விடு" என்று அழுது புலம்புகிறாள்.ஆனால், அவளது அழுகையால் கூட அவனது இதயத்தில் ஈரத்தைச் சுரக்கச் செய்ய முடியவில்லை.அவளைப் பிடித்து தள்ளிவிட்டு, அவள் கணவனை வெட்டிச் சாய்க்கிறான். அதற்காக அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் படுகின்றது.

அவனைப் பார்க்க வந்த ஊர்க்காரர்கள் மூலம், அவன் வெட்டிச் சாய்த்த அப்பாவியின் மனைவி, தனது 4 பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளப் போகும் தகவல் கிடைக்கிறது.அருட் தந்தை நோவா இதில் தலையிடுகின்றார்.

"சாதிவெறி இப்படி ஆக்கிவிட்டது. வேதனையுடன் கண்ணீர் வடிக்கின்றான். எனக்கு 2 ஏக்கர் காணி இருக்கு. அதை அந்த அம்மாவுக்கே கொடுத்திடுறேன். அதை வைத்து 4 புள்ளைகளையும் கரையேத்தட்டும்" என்று கதறுகிறான்.அவ்வாறே நிகழ்கின்றது.

காலம் செல்கின்றது. ஆயுள் கைதி விடுதலையாகி வெளியே வருகின்றான். அவனது மன நிலையை உணர்ந்த அருட் தந்தை நோவா அந்தப் பெண்மணியிடம் பேசுகிறார். "என் கணவனைக் கொன்றவனையா மணந்து கொள்ளச் சொல்கிறீர்கள் " சீறுகின்றாள் அந்தப் பெண்மணி."இல்லை; உனக்கும் உன் குழந்தைகளுக்கும் வாழ்வு கொடுத்தவன்" என்று அருட் தந்தை சொல்ல, சிறிது நேர யோசனைக்குப்பின் ஒத்துக் கொள்கிறாள். "ஐந்தாவதாக ஒரு குழந்தை பெற்று எனக்கு அவள் தர வெண்டும் என்பதற்காக நான் திருமணம் செய்யவில்லை.அவளுக்கும் ஒரு பாதுகாப்பு தேவை. அவள் குழந்தைகளுக்கும் ஒரு தந்தை தேவை. எனக்கும் உறவுகள் தேவை. அதற்காகத்தான் இந்தத் திருமணம்" என்றான். நோவா முன்னிலையில் மதுரை கலெக்டரின் தலைமையில் திருமணம் இனிதே நடந்தது.

இப்படி ஆயிரமாயிரம் சோகக் கதைகளச் சுமந்தபடி இருக்கின்றன, சிறைச்சாலைகள். வெளியெ நடமாடும் பயங்கரக் குற்றவாளிகளைவிட, உள்ளே பல நல்ல மனித்ர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். திருந்தாத குற்றவாளிகளுக்கு மேலும் மேலும் தண்டனை அளித்து அத்தகைய குற்றங்களே இல்லாமல் செயவேண்டும்.

அதே வேளையில் சிறையில் இருக்கும் அப்பாவிகளை அடையாளங்கண்டு அவர்களுக்கு ஒரு வாழ்க்கையை உருவாக்கி அவர்கள் மீது இந்தச் சமூகம் அன்பச் செலுத்தும் வாய்ப்பையும் உருவாக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு மரணம் அடைந்த ஆட்டோ சங்கரின் இரண்டு பிள்ளைகள் நன்கு படிக்க வைக்கப்பட்டு இன்று இஞ்ஜினியர்களாகியிருக்கிறார்கள்.

ஆகவே, வாய்ப்பும், வாழ்க்கையும் எவருக்கும் மறுக்கப் படக் கூடாது. வாய்ப்பும் வாழ்க்கையும் அப்பாவிக் குற்றவாளிகளாக உள்ள பலருக்கும் தவறாமல் கிடைக்கட்டும்.

அழுக்குத் துணிகளை உள்வாங்கி, தும்பைப் பூ போன்ற தூய்மையுடன் அவற்றை வெளியே அனுப்பும் சலவை இயந்திரங்கள் போல, குற்றவாளிகளை உள்வாங்கும் சிறைச்சாலைகள், அவர்களை வெள்ளை உள்ளங்களாக வெளியே அனுப்பட்டும்.வானமெங்கும் வெண்புறாக்கள் பறக்கட்டும்.

இதைப் படித்துவிட்டு அந்தப் புத்தகத்தை விலைக்கு வாங்கிப் படிக்க விரும்புபவர்கள் செல்ல வேண்டிய முகவரி. மதுரா வெளியீடு, காந்தி இர்வின் ரோடு,கென்னட் லேன், எழும்பூர்,சென்னை-600008. 94440 78671. இந்தப் பகுதியை நகலேடுத்துச் சென்று அணுகுவீர்களாயின் புத்தகத்தின் பாதி விலையை நான் ஏற்றுக் கொள்வேன். அங்கிருந்து 9445423256 -எண்ணை அணுகினால் ஏற்பாடு செய்வேன். ஒருவருக்கு ஒன்று என்பதே சாத்தியம்!-நன்றியுடன், சீராசை சேது பாலா.

1 comments:

Kindly post a comment.