Sunday, December 20, 2009

நபிகள் நாயகத்தின் புனிதப் பயணமும், ஹிஜிரி ஆண்டுத் துவக்கமும்!

18-12-2009- அன்று இஸ்லாமியப் புத்தாண்டு ஹிஜிரி 1431 ஆம் ஆண்டு துவங்குகின்றது.

வரலாற்று ஆய்வாளர்கள் அண்ணல் நபி முஹம்மது அவர்களுடைய வாழ்நாட்களை மூன்று கட்டங்களாகப் பிரித்துப் பார்க்கின்றனர்.

பிறப்பு, இளமை, திருமணம் முதலான 40ஆண்டுகள் முதற் காலக்கட்டம்!

இறைவனால் இறைத் தூதர் என்று அறிவிக்கப்பட்டபின், இறைவன் ஒருவனே என்று மெக்காவில் பிரசாரம் செய்த 12 ஆண்டுகள் 2-வது காலக் கட்டம்!

மெக்காவை விட்டு மெதினா செல்லப் புறப்பட்ட காலமே ஹிஜிரி என்ற புத்தாண்டின் துவக்கம். இதிலிருந்து 11 ஆண்டுகள் 3-வது காலக் கட்டம்!

ஹிஜ்ரத் என்ற வார்த்தையின் அடிப்படையிலிருந்தே ஹிஜிரி பிற்ந்தது. ஹிஜ்ரத் என்ற அரபிச் சொல்லுக்கு புனிதப் பயணம் என்று பொருள்.

ஆண்டின் முதல் மாதமே முஹர்ரம் ஆகும். இம்மாதத்தின் 10-ஆம் நாளை ஆஷுரா தினம் என்றும் முஹர்ரம் என்றும் கூறுவர். இநாளில் நோன்பு நோற்பதே சாலச் சிறந்தது. இஃது ஒரு நினைவு நாள் ஆகும். பெருநாளாகவோ அல்லது பண்டிகையாகவோ கொண்டாட வேண்டியது கிடையாது.

அண்ணல் நபிகள் மறைந்த பிறகு, கர்பலா என்ற போர்க்களத்தில் அவரது பேரர் ஹுஸைன் உயிர் நீத்ததும் இதே முஹர்ரம் 10-ஆம் நாளே ஆகும். இஸ்லாமிய மக்களாட்சியை ஏற்படுத்திடவே இந்தப் போர் நடந்தது. இதனால்தான் இந்நாள் சிறப்புப் பெறுகின்றது.

அண்ணல் நபி அவர்கள் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இதே முஹர்ரம் 10-ஆம் நாளில் அளவிறந்த அற்புதங்கள் நிகழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது.

முதல் மனிதர்-இறைத் தூதர் ஆதம் (அலை) அவர்களின் பாவ ம்ன்னிப்பை இறைவன் ஏற்று இவ்வுலகின் கண் அவறை நிலைப் படுத்தியதும் இதே முஹ்ர்ரம் 10-ஆம் நாளில் தான்!

இறைத் தூதர் நூஹ் (அலை) பல ஆண்டுகள் சத்திய அறிவுரைகளை எடுத்தோதுகின்றார். அதனைச் செவிமெடுக்க மறுக்கும் மக்களை அழித்தொழிப்பதற்காகப் பிரளயத்தைத் தோற்றுவிகின்றார். பிரளயத்திலிருந்து இறைத் தூதர் நூஹ் அவர்களைக் காப்பாற்றிய மரக்கலம் ஜூதி என்னும் மலையில் வந்து நின்ற நாளும் அதே முஹர்ரம் 10-ஆம் நாளில்தான்!

இறைத்தூதர் யூனூஸ் (அலை) அவர்களின் குற்றத்தை மன்னித்து மீனின் வயிற்றிலிருந்து விடுவித்த நாளும் இதே மொஹ்ர்ரம் 10-ஆம் நாளில்தான்!

பிர்ஹௌன் என்னும் கொடிய மன்னர் ஆட்சியிலிருந்து தப்பித்த இப்ராஹீம் (அலை) அவர்களும் அவரைப் பின்பற்றிய 5000-ம் மக்களும் நைல் நதியைக் கடந்ததும் இதே மொஹர்ரம் நாளில்தான்! மன்னனும் மக்களும் நைல் நதியில் மூழ்கடிக்கப் பட்டனர். இது நிகழ்ந்ததும் அதே மொஹர்ரம் மாதம் 10-ஆம் நாளில்தான் என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு பல நிகழ்வுகள் மொஹர்ரம் மாதம் 10-ஆம் நாளில்தான் நிகழ்ந்துள்ளன என்பதால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இதை முஸ்லீம்கள் நினைவு கூர்கின்றனர்.

நன்றி: செ.ஜ்ஃபர் அலி எழுதிய கட்டுரையின் அடிப்படையில், தினமணி, 18, டிசம்பர், 2009.

0 comments:

Post a Comment

Kindly post a comment.