Thursday, December 17, 2009

உணவே உயிராகும்- வி.கே.டீ.பாலன்-உண்மை நிகழ்வு-:




1981-ஆம் ஆண்டு! ஒரு நிறுவனத்தில் நானொரு ஆபீஸ் பையன். அலுவலக வளர்ச்சியைக் கூட்டிப் பெருக்க பெரிய பொறுப்புக்களில் பலர் இருந்தனர். அலுவலகத்தின் குப்பை கூளங்களைக் கூட்டிப் பெருக்குவதுதான் எனது முதன்மைப் பணி. அத்துடன், மதிய வேளையில் டிபன் கேரியரை எடுத்துக் கொண்டுபோய் சாப்பாடு வாங்கி வந்து கொடுப்பதும் என் வேலைதான். இரண்டு முதலாளிகள், அவர்களின் இரண்டு மகன்கள், ஒரு முதலாளியின் மைத்துனர் உட்பட 5 பேர். அவர்கள் சாப்பிட்டு முடித்தபிறகு எது மிச்சமோ அதுதான் எனக்கு. ஒரு கேரியர் சாப்பாட்டை 5 பேர் சாப்பிட்ட பிறகு என்ன மிச்சமிருக்கும்?

சில சோற்றுப் பருக்கைகள், கொஞ்சம் கூட்டு, கொஞ்சம் கீரை, துளியூண்டு ரசம் இவை எல்லாம் சேர்ந்த கலவைதான் கிடைக்கும். பாதி மென்றும், பாதி உறிஞ்சியும் சாப்பிட்டு முடிப்பேன். அதுவே அப்போதைய என் வாழ்வுக்கும் அதற்குரிய பசிக்கும் முழுமையாக இருந்ததை இன்றும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். அந்த உணவே எனக்கு உயிரானது. காலச் சக்கரம் சுழன்ற போது, நானும் முதலாளியானேன். நான் தூக்கித் திரிந்த அந்த டிபன் கேரியர் அடிக்கடி என் நினைவுக்கு வந்து போகும்.

ஒரு நாள் என் ஊழியர் ஒருவரை அழைத்து "டிபன் கேரியரிலேயே மிகப் பெரிய டிபன் கேரியர் ஒன்றையும் ஊழியர்களின் எண்ணிக்கக்குத் தகுந்தபடி தட்டுக்களையும் வாங்கி வா" என்றேன். அவர் வாங்கி வந்து என் முன்னால் வைத்த டிபன் கேரியரைப் பார்த்து நானே மலைத்துப் போனேன் . நான்கடி உயரம் கொண்ட, நிமிர்ந்த பைசா கோபுரம் போல் இருந்தது. ஏதோ ஒரு ஆசையில் பிறந்த எண்ணம்தான் அது. ஆனால், அந்த பெரிய கேரியர் எனக்கு கிடைத்த விருது போன்ற நெகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்தியது.

அந்த பெரிய கேரியரில் நாள்தோறும் மதியத்தில் அலுவலகத்திற்கு உணவு வரும். என் வரையிலும் ஒன்றாய் வரிசையாய் அமர்ந்து உணவினை அருந்துவோம். தட்டுகள் நாளுக்கு நாள் மாறி, மாறி யார் யார் கைக்கோ வரும். ஒரே மாதிரி சாப்பாடு. ஒரே மாதிரி தட்டுகள். ஒரே மாதிரியான மனித உணர்வை மீட்டுத் தரும் என்று நான் உணர்கிறேன். சாதி, மதம் கடந்த நல்லிணக்க உணர்வாக அந்த உணவு எங்களுக்கு உயிராக இருக்கிறது.

மனிதம் பேணுவது மாத்திரமே வெற்றிக்கான முதல் அடையாளம். "சோறு போடாத மதம் இருப்பதைவிட, இல்லாமற் போகட்டும்" என்று சொன்னவர் விவேகானந்தர். சிலர் பசி என்றாலே என்னவேன்று தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் ஓர் உண்மை.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பது தமிழ் மூதுரை. உணவே உயிராகும். உணவு கொடுப்பவன் உயிரைக் கொடுக்கிறான். உணவு கொடுத்தவனுக்காக, அதனைப் பெற்றுக் கொண்டவர்கள் உயிரையே கொடுப்பார்கள். செஞ்ச்சோற்றுக்கடன் என்று அதனைக் குறிப்பிடுகிறது நம் பழந்தமிழ். பசித்தவனுக்கு உணவு கொடுப்பதென்பது வசதியுள்ளவர்களுக்கு சாதாரண செயல்தான். அற்பமாகக் கூட இருக்கலாம். ஆனால் சின்ன சின்ன சங்கதிகள்தான் உங்களைச் சிகரத்தில் ஏற்றும்.

முடிந்த அளவு கொடுங்கள். முடியும்வரை கொடுங்கள். உங்கள் சொத்தைப் பங்கு போட்டுக் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால், மற்றவர்களின் பசியைப் பங்கு போட்டுக் கொடுங்கள். அடுத்தவரின் பசியை உணர்ந்து அதைப் போக்குகிறவன் வாழும் தெய்வமாகிறான்.

கலைமாமணி வீ.கே.டி.பாலன் எழுதிய, "சொல்லத் துடிக்குது மனசு" புத்தகத்திலிருந்து, "உணவே உயிராகும்" என்ற கட்டுரையின் ஒரு பகுதி இது! முழுவதும் அல்ல.

இதைப் படித்துவிட்டு அந்தப் புத்தகத்தை விலைக்கு வாங்கிப் படிக்க விரும்புபவர்கள் செல்ல வேண்டிய முகவரி. மதுரா வெளியீடு, காந்தி இர்வின் ரோடு,கென்னட் லேன், எழும்பூர்,சென்னை-600008. 94440 78671.

இந்தப் பகுதியை நகலேடுத்துச் சென்று அணுகுவீர்களாயின் புத்தகத்தின் பாதி விலையை நான் ஏற்றுக் கொள்வேன். அங்கிருந்து 9445423256 -எண்ணை அணுகினால் ஏற்பாடு செய்வேன். ஒருவருக்கு ஒன்று என்பதே சாத்தியம்!-நன்றியுடன், சீராசை சேது பாலா.

1 comments:

Kindly post a comment.