Saturday, November 12, 2016

வாழ்வு இனிது: ‘புத்தகங்களே என் குழந்தைகள்’ - தி.மா.சரவணன்அஞ்சல் அட்டை இதழ் | தி.மா.சரவணன்


ரோட்டோரக் கடையில் வேர்க்கடலை மடித்துத் தரும் காகிதத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அது ஏதோ ஒரு பத்திரிகையின் சாதாரணப் பக்கமாக இருக்கும், அதில் ஆரம்பமும் முடிவும்கூட இருக்காது. ஆனால் அது தரும் சுவாரஸ்யத்துக்கு ஈடு இணையே கிடையாது. சில ஆண்டுகள் முன்னால் வெளிவந்த இதழின் பக்கமே இத்தனை சந்தோஷம் தந்தால், பழமையான தமிழ் இதழ்கள் ஆயிரக்கணக்கில் கையில் கிடைத்தால் எப்படி இருக்கும்?

திருச்சி கே.கே. நகரில் உள்ள கலைநிலா இதழகம்தான் உங்களை இப்படி ஆச்சரியப் படவைக்கிறது. இங்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்த பழமையான தமிழ் இதழ் உள்ளிட்ட ஆயிரக் கணக்கான இதழ்களின் பிரதிகள் உள்ளன.

கலைநிலா இதழகத்தை நடத்திவருபவர் தி.மா.சரவணன் (53). புக் பைண்டிங் தொழில் செய்பவரான அவருடைய வீட்டின் உள்ளே நுழைந்ததும் புத்தகங் களின் வாசனை நம்மை வரவேற்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக இவர் ஆர்வத்துடன் இதழ்களையும் புத்தகங்களையும் சேகரித்து வருகிறார். 1883-ல் வெளியான ஜநவிநோதிநி இதழின் பிரதி ஒன்று சரவணனிடம் இருக்கிறது. இவரின் சேகரத்திலேயே மிகவும் பழமையான இதழ் இது.

மகாகவி பாரதியார் ஆசிரியராக இருந்த சக்ரவர்த்தினி, பெரியாரின் குடியரசு, அண்ணாவின் காஞ்சி, கண்ணதாசனின் தென்றல், முல்லை, பாரதிதாசனின் குயில் உட்பட ஆறாயிரம் வகை இதழ்களும் அவற்றின் பிரதிகளும் என 50 ஆயிரத்துக்கும் அதிகமான இதழ்களை அலமாரிகளில் வகைவகையாக அடுக்கிவைத் திருக்கிறார்.

அரசியல், சமயம், சாதி, பெண்ணியம், தொழில், சினிமா, மருத்துவம், அறிவியல், வேளாண்மை, ஜோதிடம், சிறுவர் இதழ், விளையாட்டு, விளம்பரம், கையெழுத்து இதழ்கள் என அநேக வகைப்பட்ட புத்தகங்களை அடுக்கிவைத்துள்ளார். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, லண்டன், பிரான்ஸ், நார்வே உள்ளிட்ட நாடுகளில் வெளிவரும் இதழ்களையும் சேகரித்துள்ளார்.

பழைய இதழ்கள் எங்கேயாவது கிடைக்கின்றன என்று தெரிந்தால் போதும்; செலவைப் பற்றிக் கவலைப்படாமல் கிளம்பி அந்த இதழ்களைக் கொண்டுவந்துவிட்டுதான் மறு வேலை பார்க்கிறார். 19-ம் நூற்றாண்டில் வெளிவந்த 500 இதழ்களில் 30 மட்டுமே இந்தியாவில் இருக்கின்றனவாம்.

மற்றவையெல்லாம் வாடிகன், லண்டன் நூலகங்களில் உள்ளது என்று கூறும் சரவணனிடம், 20-ம் நூற்றாண்டு தொடக்கம் முதல் கடந்த 2000-ம் ஆண்டு வரை வெளியான பத்தாயிரம் தமிழ் இதழ்களில் ஆறாயிரம் இதழ்கள் இருக்கின்றன.

10-ம் வகுப்பு வரை படித்த இவருக்கு 20 வயதில் பழைய புத்தகக் கடையில் வேலை கிடைத்திருக்கிறது. அங்கேதான் வாசிப்புப் பழக்கம் இவருக்குக் கூடிவந்திருக்கிறது. அந்த வாசிப்புப் பழக்கம்தான், தன் வாழ்க்கை முறையை அடியோடு மாற்றிவிட்டது என்று கூறுகிறார் சரவணன்.

முக்கியமான இதழ்கள், புத்தகங்கள் எல்லாம் எடைக்கு வரும், அதையெல்லாம் படிக்கும்போது, அடுத்த தலைமுறையினருக்கு இவையெல்லாம் தேடினாலும் கிடைக்காதே என்று தன் மனதில் ஓடிய எண்ணமே தன்னை இதழ்களைச் சேகரிக்கத் தூண்டியது என்கிறார் இவர்.

புத்தகங்களைச் சேகரிக்கும் பழக்கத்தாலேயே பைண்டிங் தொழிலைக் கற்றுக்கொண்டு அதன் மூலம் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறார் சரவணன். வருமானத்தில் ஒரு பகுதியைப் பழைய இதழ்களைச் சேகரிப்பதற்காகச் செலவிடுகிறார். தன் வீட்டையே கலைநிலா எனும் பெயரில் இதழகமாக மாற்றிவிட்டதாகச் சந்தோஷத்துடன் சொல்கிறார்

சரவணன். “எனக்குக் குழந்த குட்டிங்க இல்ல. இந்தப் புத்தகங்கதான் என்னோட குழந்தைகள் ஏங்காலத்துக்குப் பெறகு என்னோட இதழகத்தை அரசின் ஆவணக் காப்பகத்துக்குக் கொடுத்துரலாம்னு இருக்கேன்” என்று புத்தகங்களைப் பார்த்தபடியே சொல்லும் சரவணனின் தொனியில் நெகிழ்ச்சி தெறிக்கிறது.

நன்றி 
ஜி.ஞானவேல்முருகன்
 தி இந்து
Published: June 26, 2015 
0 comments:

Post a Comment

Kindly post a comment.