Saturday, November 12, 2016

அஞ்சல் அட்டையில் 'அணு' சிற்றிதழ்: 25 ஆண்டாக தொடரும் சிவகங்கை ஓவியரின் சாதனை!



செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2016 11:37 கலீல் பாகவீ

அரிய தகவல்களை அறியும் வகையில் இதழில் இடம்பெறும் அனைத்து தகவல்களையும் அஞ்சல் அட்டைக்குள் அடக்கி ‘அணு’ எனத் தொடங்கும் சிற்றிதழை 25 ஆண்டுகளாக தனது வாசகர்களுக்கு அனுப்பி வருகிறார் சிவகங்கை ஓவியர் நா.முத்துக்கிருஷ்ணன்.

தொலைதொடர்பு வசதியால் தற்போது கடிதம் மூலம் நலம் விசாரிப்பது பெரிதும் குறைந்துவிட்டது. அரசாங்க ஆதாரத் துக்கு மட்டுமே அஞ்சல் வழி தொடர்பு நீடிக்கிறது. ஆனால், சிவகங்கை பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த ஓவியர் நா.முத்துக்கிருஷ்ணன்(59), அஞ்சல் அட்டையில் ‘அணுவைத் துளைத்தெழு கடலைப் புகட்டி’ என்னும் சிற்றிதழை நடத்தி வருகிறார்.

இது குறித்து அவர் `தி இந்து’ விடம் கூறியதாவது:

எனது தந்தை சிவகங்கையில் ஆசிரியராக வேலைபார்த்தார். பரமக்குடி அருகே உள்ள கிராமத் தில் எனது தாத்தா குமரையா வசித்து வந்தார். அவர் விவசாய வேலைகளை கவனித்து ஆறு மாத வரவு, செலவு கணக்குகளை ஓர் அஞ்சல் அட்டையில் நுணுக்கி எழுதி என் தந்தைக்கு அனுப்பி வைப்பார்.

ஆறு மாத நிகழ்வுகளை ஓர் அஞ்சல் அட்டைக்குள் அடக்கி விடலாமா? என படிக்கும்போது ஆச்சரியம் ஏற்பட்டது. இதேபோல் அஞ்சல் அட்டை மூலம் அரிய தகவல்களை அறியும் வகையில் சிற்றிதழ் நடத்தலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது.

உடனடியாக அணு எனும் தலைப்பில் பதிவு செய்தபோது அனுமதி கிடைக்கவில்லை. எனவே, ‘அணுவைத் துளைத் தெழு கடலைப் புகட்டி’ எனப் பதிவு செய்து 1991 ஜனவரி முதல் அஞ்சல் அட்டையில் சிற்றிதழ் நடத்தத் தொடங்கினேன்.

அரிய தகவல்களை அறியவும், அறிந்தும் அறியாதது, தெரிந்தும் தெரியாதது போன்ற விஷயங்களை சொல்வதற்கு அணுவை பயன்படுத்தினேன். ஒரு வார இதழில் இடம் பெறும் அம்சங்களான சிந்தனை, சிரிப்பு, சிறுகதை, கவிதை, பழமொழி, பரிசுப் போட்டி, வாசகர் கேள்வி-பதில், விமர்சனம், விளம்பரம் என அனைத்தும் இடம் பெறும் வகை யில் வடிவமைத்து ‘அணு’வை அஞ்சலில் அனுப்பினேன்.

ஒரு அஞ்சல் அட்டையில் 111 தகவல்கள் வரை இடம் பெற்றதால் 1992-ல் லிம்கா விருது பெற்றது. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, அந்தமான் பகுதி வாசகர்களுக்கு அனுப்பி வைத் தேன். சிங்கப்பூர், மலேசியாவுக்கு கடல் கடந்தும் சென்றது.

ஆரம்பத்தில் அஞ்சல் அட்டை 15 பைசா இருந்தபோது சிற்றிதழை தொடங்கினேன். பின்னர் 25 பைசா, 50 பைசா என உயர்ந்தது. அஞ்சல் அட்டையில் பிரிண்ட் செய்து அனுப்பினால் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என உத்தரவு வந்தது. தற்போது அஞ்சல் அட்டையில் அச்சுப்பதித்து அதை தனி உறையில் வைத்து ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பி வருகிறேன்.

சிற்றிதழ் சிறப்பாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டின் மாடியில் நூலகம் வைத்துள்ளேன். 1991-ல் தொடங்கியபோது கையில் எழுத்து கோர்க்கும் முறையில் பிரிண்ட் செய்து அனுப்பினேன். தற்போது கணினியில் வடிவமைத்து அதை பிரிண்ட் செய்து அனுப்புகிறேன்.

காலத்துக்கேற்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அட்டை யில் இடம்பெறச் செய்ததால், அணுவை வாசகர்கள் எதிர் பார்த்து படித்தனர். சில நாட்கள் தாமதமானாலும் உடனே தொலை பேசியில் தொடர்பு கொண்டு கேட்பார்கள்.

ஆங்கில வருடப் பிறப்பின் போது அஞ்சல் அட்டையுடன் சின்னஞ்சிறிய காலண்டர் இணைப்பு வழங்கினேன். இரண்டு இஞ்ச் அளவில் சிற்றிதழை சுருக்கி அதை படிப்பதற்கு லென்ஸ் வழங்கினேன். மூலிகை மருத்துவச் சிறப்பிதழ் வெளியிட்டபோது, அந்தந்த மூலிகைகளையும் ஒட்டி அனுப்பினேன்.

என்னுடைய அனுபவத்தையே சிறுகதையாகவும், கவிதை யாகவும், நகைச்சுவை ஆகவும் எழுதி வருகிறேன். தற்போது, இணையதளத்தில் முகநூல், வாட்ஸ் அப், குறுஞ்செய்தி என கைகளில் தவழும் தொலை தொடர்பு சாதனங்களால் கடிதங் களை விரும்பிப் படிப்பது குறைந்து விட்டது. இதனால், சிற்றிதழ் வாசகர்களின் எண்ணிக் கையும் படிப்படியாக குறைந்து விட்டது. அஞ்சலில் அனுப்பிய சிற்றிதழை காலத்திற்கேற்றவாறு மின்னஞ்சலிலும், வாட்ஸ் அப் மூலமும் அனுப்பி வருகிறேன் என்றார்.

நன்றி 

 சுப.ஜனநாயகச்செல்வம் / தி இந்து

http://www.mypno.com/

அணுவைத்துளைத்தெழுகடலைப்புகட்டி
அஞ்சலட்டையில் கடிதம் எழுதலாம். இதழ் நடத்த முடியுமா..? கடந்த 21 வருடங்களாக அப்படியொரு அஞ்சலட்டை இதழை நடத்தி வருகிறார் சிவகங்கை ஓவியர் முத்துக்கிருஷ்ணன். அறிவியல் செய்திகள், படங்கள், கவிதை, கடிதங்கள், கேள்வி-பதில், நகைச்சுவை, துளிக்கதைகள், மருத்துவக் குறிப்புகள், சமையல் குறிப்புகள், பழமொழி, விளம்பரம் என இந்த தம்மாத்துண்டு இதழின் உள்ளடக்கங்கள் வியக்க வைக்கின்றன. இதழோடு சேர்த்து குட்டி காலண்டர், மீன்பொம்மை என சீசனுக்கேற்ற இலவச இணைப்புகளும் வழங்கப்படுகிறது. லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த இதழை, கண்ணை உருத்தாத எழுத்து வடிவமும், படைப்புகளுக்கேற்ற குட்டி, குட்டி படங்களும் அழகூட்டுகின்றன. 

(ஆண்டு சந்தா: ரூ.100/- ஓவியர் முத்துக்கிருஷ்ணன், 31, பிள்ளையார் கோவில்தெரு, சிவகங்கை-630561. அலைபேசி: 9865522933.)

0 comments:

Post a Comment

Kindly post a comment.