Friday, November 11, 2016

யாளி உயிருடன் உள்ளதென்று கூறும் நாவல் !


செந்தமிழ் நாட்டுத் திருக்கோவில்களில் எல்லாம் கலை வண்ணம் நிறைந்த சிலைகள் பலவற்றைக் கண்டு ரசிக்கலாம். அவற்றுள் யாளியும் ஒன்று.

யாளியின் வாயில் முட்டை வடிவில் ஒரு கல் உருண்டை இருக்கும். அதனைக் கையை விட்டுச் சுழற்றலாம். ஆனால் வெளியே எடுக்க முடியாது. யாளி சிலைகளைக் காண்போர் பார்த்து ரசித்து விட்டுத் திரும்பிவிடுவர். ஆனால், மணி தணிகைகுமார் என்னும் இளைஞருக்குக் கற்பனை சிறகடித்துப் பறந்தது. பிறந்தது, யாளி என்னும் புதுவகையான நாவல்.

இத்தகைய கருப்பொருளுடன் கூடிய புதினம் தமிழில் இதுவரை வந்ததில்லை என்று துணிச்சலுடன் சொல்லலாம். ஏனெனில், நூற்றாண்டுக்காலமாகக் கோவில்களும் இருந்துவருகின்றன. யாளி சிலைகளும் இருந்துள்ளன. இவருக்கு ஏற்பட்ட தாக்கம் வேறு எந்தப் படைப்பாளிக்கும் ஏற்படவில்லை என்பதே இவரது சிறப்பு. மேலும், இதனைப் படிக்கும்பொழுது கூடவே பயணிக்கும் உணர்வையும் தன் எழுத்துவன்மையால் ஏற்படுத்திவிடுகின்றார், நூலாசிரியர். படித்து முடித்தபின், சில் நாட்கள் இரவில் யாளிகள் என் கனவில் தொடர்ந்து வந்தவண்ணமாகவே இருந்தன.

சென்ற நூற்றாண்டின் இறுதியில்தான், மானுட இனம், தனக்கும் ஐந்தாறு கோடி ஆண்டுகளுக்கு முன் இந்தப்பூமியில் வாழ்ந்த ராட்சத விலங்குகளான டைனோசர் பற்றிய தகவல்களை உறுதி செய்தது. டைனோசரைக் கதாநாயகனாகக் கொண்டு பல திரைப்படங்கள் வெளியாயின. உலகம் வியப்பு எய்தியது. டைனோசர் ஆய்வுகள் இன்றும் தொடர்கின்றன. அதைப் போன்று யாளியும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால் இன்னும் பல உண்மைகள் தெரியவரும் என்பதே கதாசிரியரின் எதிர்பார்ப்பு.

இலண்டனைச் சேர்ந்த கோடீஸ்வர ஆங்கிலேயர் ஒருவர் தன் கொள்ளுத்தாத்தாவின் டைரியினைப் படிக்கும் வாய்ப்பு நேரிடுகின்றது. அதில் யாளியைப் பற்றிய தகவல் கிடைக்கின்றது. இந்தியாவில் யாளி உயிருடன் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது என்று டைரி சொல்கின்றது. இந்த ரகசியத்தை வெளியிடக்கூடாது என்பது முப்பாட்டனார் கோவில் நிர்வாகிகளிடம் சத்தியம் செய்து கொடுத்துள்ளதாகவும் எழுதப் பட்டிருந்தது. டைரியில் யாளியின் படங்களும் இருந்தன. படங்களைப் பார்த்த அவரது ஆர்வம் அதிகரிக்கின்றது. யாளி இந்தியாவில் இருக்குமிடம் எது என்று டைரியில் குறிபிடப் படவில்லை. இந்தியாவில் உள்ளது என்பது மட்டும்தான் டைரி தரும் தகவலாக இருந்தது. கோடிஸ்வரருக்கு இந்தியாவைப் பற்றிய கேள்வி அறிவு மட்டுமே உண்டு. வேறொன்றும் தெரியாது.

ஆனால், முப்பாட்டனாரின் டைரி சொல்லும் உண்மையினைக் கண்டறிந்து விட வேண்டும் என்ற வேட்கையின் உந்துதலால், நண்பர் ஒருவர் மூலம் புத்திசாலியான இந்திய இளஞன் ஒருவனின் அறிமுகத்தைப் பெறுகின்றார். அவன் தமிழகத்தைச் சார்ந்தவன் என்பது சிறப்பு. கணிசமான சம்பளத்திற்கு அவனுடன் உடன்படிக்கை செய்துகொண்டு அவனுடன் இந்தியாவிற்குப் பயணிக்கின்றார்.

அவர்களது இந்தியப் பயணத்தில் திருக்கோவில்கள்தோறும் செல்வது, கொள்ளுத்தாத்தா வைத்திருந்த யாளி படத்துடன் ஒத்துப்போகும் யாளி சிலை எஙுகுள்ளது என்பதைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் கதை. யாளிகள் உயிரோடு பாதுகாக்கப்பட்டு வருவதைக் கண்களால்ப் பார்த்து விடுகின்றனர், யாளிகள் உல்ளதாகக் குறிப்பிடும் இடம், செல்லும் வழி, நீர்வழிக்கால்வாய் அமைக்கப்பட்டுள்ள நவீனத் தொழில் நுட்பம் குறித்த விவரிப்பும், வெள்ளையரும் இந்திய இளைஞனும். யாளியால் தூக்கி எறியப்படுவதும், அந்தத் தாகுதலினின்றும் தப்பிக்கும் காட்சிகளும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

யாளி என்றொரு உயிரினம் இருந்திருந்தாலும், டைனசோர்போல் அழிந்திருக்கக் கூடுமே தவிர உயிருடன் இருபதற்குச் சாத்தியமில்லை என்ற கேள்வியைச் சிலர் எழுப்பக்கூடும்

சீனாவில், பாண்டா கரடி, இத்தாலியில் வெள்ளைப்புலி இபடிச் சில விலங்கினங்கள் அழியாமல் இப்போதும் பாதுகாப்பதுபோல், யாளியையும் நமது முன்னோர்கள் பாதுகாத்து வந்துள்ளனர். யாளிகள் காப்பகம் மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவில் இன்றும் உள்ளது என்று கதை முடிகின்றது. இறந்துபோன கொள்ளுத்தாத்தாவும் , கோவில் நிர்வாகிகளும் யாளிகள் குறித்த ரகசியத்தைத் தொடர்ந்து காப்பாற்றி வரும் பாதையினையே தானும் பின்பற்ற முடிவு செய்தார், வெள்ளையர்.

முப்பாட்டனார் டைரியில் எழுதிவைத்துள்ள ரகசியத்தின் உண்மையை உள்ளபடித் தெரிந்துகொண்ட மகிழ்ச்சியுடனும், இந்தப் பயணத்தில் இந்தியாவின் பரிசாகக் கிடைத்த அருமைக் காதல் மனையாளோடும் இலண்டன் மாநகருக்குப் பய்ணிக்கின்றார், கதாநாயகன்.

பல நூறாண்டுகள் பூட்டிய அறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் வெளிப்பட்டதுபோல், காலம் நேரம் வரும்பொழுது ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டுவரும் யாளிகளும் உயிருடன் வெளிவரும் என்ற நம்பிக்கையை விதைக்கின்றது இந்த நாவல்.

கற்பனை, அறிவியல், வரலாறு, சமூகம் கலந்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. திகிலுக்கும் பஞ்சமில்லை இந்த நாவலில். சாகசக் கதைகளை விரும்பிப் படிக்கும் இளைஞர்களுக்கும் இந்தப் புதினம் ஒரு நல் விருந்து.

25அத்தியாயங்கள்,330பக்கங்கள்,25க்கும் மேற்பட்டவண்ணப்படங்கள், விலை உயர்ந்த தாள்களில் அச்சிடப்பட்டுள்ளன. அனுபவக் குறைவால் இவர் வைத்துள்ள விலைரூபாய்150/-தான்.

தமிழ்வழியில் அறிவியல் கல்வி கற்று, ஆங்கில வழியில் தொழிற்பயிற்சி (பி.இ) பெற்ற மாணவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கின்றார்.இவர் படைப்பான இந்த ஒரு புத்தகமே இவர் பெயரைக் காலத்திற்கும் எடுத்துச் சொல்லும்.

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உரியவர் பார்வையில் பட்டால், டைனோசர், அனகொண்டா போன்றதொரு திரைப்படமாகக் கூட யாளி வெளிவரக்கூடும். இந்தக் குறையினையும் நீக்கிவிட்டார் படைப்பாளியின் நண்பர், எஸ்.டி.பாலயோகேஷ்! ஆம்! எட்டு பக்கங்களில் ஆங்கிலத்தில் கதையினைச் சுவை குன்றாமல் மொழிபெயர்த்துள்ளார். அது இந்த நாவலின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

குறை என்று சொல்லப்போனால், யாளிகளை ரகசியமாகப் பாதுகாக்கும் கோவில் குடும்பத்தைச் சார்ந்த பெண், கதாநாயகனான வெள்ளைக்காரரைக் காதலிப்பது வலியத் திணிக்கப்பட்டுள்ளது போல் தோன்றுகின்றது.

சென்ற பிப்ரவரியில் தமிழகத்தி கடைக்கோடியில் உள்ள மார்த்தாண்டத்தில் ஓர் திருமணத்திற்குச் செல்லும் வழியில் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் ஒட்டப் பட்டிருந்த சுவரொட்டிதான் யாளியை என்க்கு அறிமுகப்படுத்தியது. ஏப்ரலில் படித்த்துமுடித்த் நினைவுகளோடு இன்றுதான் எழுத முடிந்தது. கதை நெஞ்சில் பதிந்துவிட்ட காரணத்தால் எழுதுவதற்கு எளிதாகவே இருந்தது.

புத்தகம் கிடைக்குமிடம்

KARPAGA INDUSTRIES

41-45, SVANNATHANILAIYAM

PALKINATHAN VILAI

EATHAMOZHY

KANYAKUMARI DIST.

629 501

CONTACT NO: 9443177764

emai address 

 tomanithanigai@gmail.com


0 comments:

Post a Comment

Kindly post a comment.