Monday, November 7, 2016

எழுத்து சோறு போடாதா? -பிரபஞ்சன்




எழுத்தையே நம்பிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதைப் பெரும் பிழையாகக் கருதுவதாகப் பேட்டி கொடுத்திருக்கிறார் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான பிரபஞ்சன். தமிழ்ச் சூழலில் எழுத்தை மட்டுமே ஒருவர் நம்பி வாழ்வது பெரும் துயரகரமானது என்பதைப் பல ஆண்டுகளாகவே பல எழுத்தாளர்களும் எழுதியும் பேசியும் வருகின்றனர். சாரு நிவேதிதா இதுகுறித்துத் தொடர்ந்து எழுதிவருகிறார்.

கேரளம், வங்கம் போன்ற மாநிலங்களில் ஒரு எழுத்தாளர் நன்றாக விற்கக் கூடிய ஒருசில புத்தகங்களை எழுதினால் போதும். அவற்றிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டு தன் வாழ்க்கை முழுவதையும் அவர் ஓட்டிவிட முடியும். இதுதவிர, அந்தச் சமூகங்கள் அவருக்குக் காட்டும் மரியாதை, விருதுத் தொகைகள் போன்றவற்றால் கண்ணியமான ஒரு வாழ்க்கையை ஒரு எழுத்தாளரால் நடத்திவிட முடியும். ஆனால், தமிழகத்தின் நிலைமை அப்படி அல்ல. ஒரு எழுத்தாளர் வாழ்க்கைப்பாட்டுக்கு ஏதோ ஒரு தொழிலைத் தனியே வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் கடுமையான உடல்நலப் பாதிப்புக்கு உள்ளானார். நிராதரவான நிலை! சக எழுத்தாளர்களும் நண்பர்களும் சேர்ந்தே அவரை மீட்டெடுத்தார்கள். பிரபலப் பத்திரிகையாளர் ஞாநி உடல்நலன் குன்றியபோதும் நண்பர்களே உடனடியாக அவருடைய உதவிக்கு ஓடிவந்தனர். பல மூத்த எழுத்தாளர்கள் இதுகுறித்துப் பேசத் தயங்குகிறார்களே தவிர, மோசமான நிலையிலேயே இருக்கின்றனர்.

ஒரு எழுத்தாளர் தன் சமூகத்துக்கு எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறாரோ அதே அளவுக்கு அவருக்கும் சமூகம் கடமைப்பட்டிருக்கிறது. எழுத்தாளர்களுக்குச் செய்யும் உதவிகள் தானம் அல்ல; மாறாக அரசின், சமூகத்தின் தார்மிகக் கடமைகளில் ஒன்று அது. ஆனால், எழுத்தாளர்களைத் துச்சமெனவே கருதுகிறோம். இத்தனைக்கும், ராஜாஜியில் தொடங்கி அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா வரை நம் முதல்வர்களில் பலரும் எழுத்தாளர்களாகவும் புகழ்பெற்றவர்கள்.

பாரதி, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி என்று யாரையெல்லாம் தமிழின் கவுரவங்களாகப் பெருமை கொண்டாடுகிறோமோ அவர்கள் யாவரும் வாழும் காலத்தில் வறுமையில் வதைபடும் கலாச்சாரத்துக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறோம்? இந்த நிலை தொடரலாகாது. நாட்டின் முன்னோடி மாநிலத்தில் எழுத்தாளர்கள் தாம் வாழும் காலத்தில் வதைபடுகிறார்கள் என்பது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்துக்குமே அவமானம். இதை முடிவுக்குக் கொண்டுவர எழுத்தாளர்களுடன் கலந்து பேசி தமிழக அரசு இது தொடர்பில் ஒரு செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும்.

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.