Monday, November 7, 2016

நவம்பர் 7 அதிகாலை 1.25 மணி. உலகின் முதல் சோஷலிஸ்ட் புரட்சி தொடங்கியது
பெண்கள் தொடங்கிய பெரும் புரட்சி!

நவம்பர் 7 அதிகாலை 1.25 மணி. உலகின் முதல் சோஷலிஸ்ட் புரட்சி தொடங்கியது

நவம்பர் புரட்சியின் நூற்றாண்டுத் தொடக்கம் இன்று! உலகெங்கும் புரட்சி விதைகளைப் பரப்பி, ரஷ்யப் புரட்சி எந்தச் சூழலில், எப்படி நடந்தது? ஒரு நினைவுகூரல்!

முதல் உலகப் போர் 1914-ம் ஆண்டில் தொடங்கி, நான்கு ஆண்டுக் காலம் நடந்தது. ரஷ்யாவுக்கும், ஜெர்மனிக்கும் இடையில் அப்போது நடந்த போரில், ரஷ்யா தோல்வி அடைந்துகொண்டிருந்தது. 1914, 15, 16 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும் கொல்லப்பட்ட ரஷ்யப் படை வீரர்கள் 17 லட்சம். போர்க் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டோர் 20 லட்சம். காணாமல்போனவர்கள் 10 லட்சம்!

கொந்தளித்த ரஷ்யா

இவர்களைப் பறிகொடுத்த லட்சக்கணக்கான தாய்களும், மனைவிகளும் வேதனையில் துடித்தார்கள்; வாழ வழியின்றித் தவித்தார்கள். மறுபுறம் தொழிலாளர்கள் வேலை நேர அதிகரிப்பு, ஊதியப் பற்றாக்குறை, போர்க்காலக் கெடுபிடிகள், அடக்குமுறைகள். விலைவாசியோ உச்சத்தில் இருந்தது. இந்தச் சூழலுக்கு இடையில், “போரை நிறுத்த வேண்டும், மன்னராட்சி ஒழிய வேண்டும்” என்று குரல்கொடுத்துவந்தார்கள் லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சியினர்.

ரஷ்யா கொந்தளிக்கத் தொடங்கியது. மன்னராட்சியைத் தூக்கியெறிந்து, உலகின் முதல் சோஷலிஸ்ட் ஆட்சி அமைவதற்கு உண்மையில் கால்கோள் இடப்பட்ட பின்னாளில் மகளிர் நாளாக அறிவிக்கப்பட்ட - 1917, மார்ச் 8.

ஒரு ரொட்டித் துண்டுகூடக் கிடைக்காமல், தாமும் குழந்தைகளும் குடும்பத்தினரும் பசியால் துடிப்பதை இனியும் பொறுக்க முடியாது என்று பெண் தொழிலாளர்கள் கொதித்தெழுந்தார்கள், ரஷ்யத் தலைநகர் பெட்ரோகிராடில். தொழிற் சாலைகள் நிறைந்த வைபோர்க் பகுதியில் துணி ஆலைகளில் வேலை செய்த பெண் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறினார்கள். வேலைநிறுத்தத்தில் தாங்கள் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், அருகில் இருந்த தொழிற்சாலைகளுக்குச் சென்று, அங்கு வேலையில் இருந்த ஆயிரக்கணக்கான ஆண் தொழிலாளர்களையும் போராட அழைத்தார்கள். “அனைவரும் வெளியே வாருங்கள். நமக்கு உணவு வேண்டும். போர் நிறுத்தம் வேண்டும். சுதந்திரம் வேண்டும். தெருவில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. போராட வாருங்கள்” என்று பெண்கள் அறைகூவல் விடுத்தார்கள்.

ரத்த ஞாயிறு

இப்படி பெட்ரோகிராட் நகரின் முதன்மைச் சாலையான நெவ்ஸ்கி சாலையை நோக்கி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் பேரணி பிரம்மாண்டமாகப் புறப்பட்டது. பல இடங்களில் போலீஸாரோடு மோதல் ஏற்பட்டது. பெண்களே முன் நின்று சமாளித்தார்கள். அது மட்டுமல்ல; பல இடங்களில் காவல் நின்ற ராணுவத்தினரையும் தங்கள் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அன்போடும், கண்ணீர் விட்டும் அழைத்தார்கள். படை வீரர்களும் அவர்களைப் பரிவோடு அணுகத் தொடங்கினார்கள். இதனிடையே பேரணியின் ஆவேசத்தால் ஈர்க்கப்பட்ட மாணவர்களும் அலுவலக ஊழியர்களும் கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்தார்கள். சுமார் 1.28 லட்சம் பேர் திரண்ட இந்தப் பேரணி, மறுநாள் தொடர் போராட்டமாக நீள வழிவகுத்தது. மறுநாள் பேரணியில் பங்கேற்றோர் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியது. முதல் நாள் உணவு, விலைவாசி, தொழிலாளர் உரிமை என்று முழங்கிய கூட்டம், இப்போது புதிய முழக்கம் ஒன்றை மேலும் சேர்ந்துகொண்டது: “மன்னராட்சி ஒழிக!”

மார்ச் 10 இரவில் ராணுவத்துக்கு ஜார் மன்னர் உத்தரவு பிறப்பித்தார்: “போராட்டத்தை ஒடுக்கு!” மறுநாள் ஞாயிறு, மீண்டும் ஒரு ரத்த ஞாயிறு ஆனது. தலைவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். போராட்டக்காரர்கள் மீது மன்னரின் விசுவாசப் படையினர் நடத்திய சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் 169 பேர் கொல்லப்பட்டார்கள்; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள்.

வீழ்ந்தது முடியாட்சி

இந்தச் சம்பவம் எரிதழலில் ஊற்றப்பட்ட எண்ணெயானது. ராணுவத்திலும் புரட்சி வெடித்தது. ஒவ்வொரு பிரிவினராக ஆயுதங்களுடன் சென்று போராட்டக்காரர்களுடன் சேர்ந்தார்கள். மறுநாள் மாலைக்குள் 66 ஆயிரம் படை வீரர்கள், தலைநகரில் இருந்த மொத்தப் படை வீரர்களில் கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர், புரட்சியில் சேர்ந்துவிட்டார்கள். போர்க்குணம் மிக்க தொழிலாளர்களுக்கு ஆயுதங்களைப் படை வீரர்கள் வழங்கினார்கள். வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘பெட்ரோகிராட் தொழிலாளர்கள் மற்றும் படை வீரர்களின் சோவியத்’(குழு) அமைக்கப்பட்டது.

நாடாளுமன்றக் கட்டிடத்தின் ஒரு பகுதியிலிருந்து இந்த சோவியத் செயல்படத் தொடங்கியது. மறுபகுதியில் நாடாளுமன்றத்தின் முதலாளித்துவக் கட்சிகள் கூடி ‘நாடாளுமன்ற இடைக்காலக் குழு’வை அமைத்துச் செயல்பட்டன. மறுநாள், மார்ச் 15 அன்று, 10 அமைச்சர்களைக் கொண்ட ‘இடைக்கால அரசு’ நாடாளுமன்ற இடைக்காலக் குழுவால் அமைக்கப்பட்டது. அன்று இரவே, ஜார் மன்னர் பதவி துறப்பதாக அறிக்கை எழுதி, மறுநாள், மார்ச் 16 அன்று அதை இடைக்கால அரசாங்கத்திடம் அளித்தார். வீழ்ந்தது முடியாட்சி!

முடியாட்சி வீழ்ந்தது. குடியாட்சி என்ன செய்தது? புரட்சியின் மூல நோக்கங்களான உணவு, போர் நிறுத்தம் மற்றும் விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கையான உழுபவருக்கே நிலம் ஆகிய மூன்று மிக முக்கியக் கோரிக்கைகள் என்னவாயின?

எதுவும் நடக்கவில்லை. நாளுக்கு நாள் நிலைமை மோசமானது. மன்னர் கையிலிருந்து ஆட்சி மாறியதே தவிர, இடைக்கால அரசு அமைத்த முதலாளித்துவ சக்திகள், தமக்கே உரிய ஏமாற்று முகத்தை வெளிக்காட்டின.

நாடு கடத்தப்பட்டு வெளிநாடுகளிலிருந்து செயல்பட்டுவந்த லெனின், ஏப்ரலில் நாடு திரும்பினார். “இந்த அரசு முதலாளித்துவ அரசு. இந்த அரசைக் கலைக்க வேண்டும். தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள் கூடி சோவியத் குடியரசை அமைக்க வேண்டும். அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே!” என்று அறைகூவல் விடுத்தது லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி.

அடுத்தடுத்து தொடர் போராட்டங்கள். நூற்றுக் கணக்கான உயிர்த் தியாகங்கள். நாட்கள் ஓடின. கொந்தளித்துக்கொண்டிருந்தது ரஷ்யா. நவம்பர் 7 அதிகாலை 1.25 மணி. உலகின் முதல் சோஷலிஸ்ட் புரட்சி தொடங்கியது! ‘செங்காவலர்’கள் என்ற பெயரில் அமைப்பாக்கப்பட்ட ஆயுதம் ஏந்திய தொழிலாளர்களும், படை வீரர்களும் பெட்ரோகிராட் நகரைச் சுற்றி வளைத்தார்கள். இடைக்கால அரசின் அமைச்சர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். அரசின் முக்கிய நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்தும் செம்படையின் கீழ் வந்தன. மறுநாள் நவம்பர் 8 அதிகாலை 3.40 மணி. ரஷ்யா முழுவதிலுமிருந்தும் வந்திருந்த சோவியத் பிரதிநிதிகளின் மாநாட்டில் லெனினுடைய தீர்மானம் முன்வைக்கப்பட்டது. ‘‘அரசதிகாரத்தை இந்த மாநாடு ஏற்கிறது.” சோஷலிச ரஷ்யாவின் வெற்றிப் பயணம் தொடங்கியது!

பெண்ணுரிமைச் சாதனைகள்!

அன்றே (1917, நவம்பர் 8 அதிகாலை) புதிய அரசின் முதல் சட்டமாக, “போர் வேண்டாம். நியாயமான சமாதானத்துக்குத் தயார்” என்ற சட்டத்தை மாநாடு நிறைவேற்றியது. அடுத்து, இரண்டாவது சட்டமாக நிலப் பிரபுக்கள், மத நிறுவனங்கள் போன்றோரின் நிலங்களைக் கைப்பற்றி, உழவர்களுக்கு வழங்கும் வகையில், ‘அனைத்து நிலங்களும் அரசுக்கே சொந்தம்’ எனும் தீர்மானம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. மூன்றாவதாக, ‘தொழிலாளர்கள், விவசாயிகள் அரசாங்கமாக லெனின் தலைமையில் அமைச்சரவை அமைக்கப்படுகிறது’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த மூன்று நாட்களில், நவம்பர் 11 அன்று 8 மணி நேர வேலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

‘ஸ்ரீமான் லெனின் தலைமையில்… ரஷ்யாவில் இன்று நடைபெறுவது கம்யூனிஸம். இந்தத் தத்துவம் உலகளவில் வெற்றி பெறும்போது மக்களின் வாழ்க்கை நெறிகளும், உண்மையான நாகரிகமும் வெற்றி காண முடியும்’ என்று பாரதியார் 1917 நவம்பர் 27-ல் எழுதி வரவேற்றார்.

அடுத்த ஓராண்டு காலத்துக்குள் பெண்கள் மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக வரலாற்றுப் புகழ்பெற்ற அரசமைப்புச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் ரஷ்யாவில் நிறைவேற்றப்பட்டன. 18 வயது நிரம்பிய, வெளியில் வேலை செய்து அல்லது தனது வீட்டு வேலைகளைச் செய்து உழைத்து வாழ்கிற அல்லது வேலை செய்யும் சக்தியை இழந்த ஆண், பெண் அனைவருக்கும் வாக்குரிமையும், தேர்ந்தெடுக்கப்படும் உரிமை யும் அளிக்கப்பட்டது. பிறரை வேலைக்கு அமர்த்தி லாபம் சம்பாதிப்பவர்களுக்கும், வட்டி வருமானம், சொத்திலிருந்து வருமானம் பெற்று வாழ்பவர்களுக்கும், துறவிகள், மதத் தலைவர்களுக்கும் வாக்குரிமையும், தேர்ந்தெடுக்கப்படும் உரிமையும் மறுக்கப்பட்டது.

ஆண் - பெண் வேறுபாடு இல்லாமல் சம வேலைக்குச் சம ஊதியம், வேலை பெறும் உரிமை உள்ளிட்ட ஆண் - பெண் சமத்துவம் உறுதிசெய்யப் பட்டது. கருவுற்ற பெண் தொழிலாளர்களுக்கு மகப் பேறுக்கு முன்னர் இரு மாதங்கள், பின் இரு மாதமும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை, குழந்தைப் பிறப்புக்கு முன்னும், பின்னும் தனிச் சிறப்பான பராமரிப்புகள், வேலையின்போதும் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான இடைவேளை கள், பணியாற்றுமிடத்தில் ஓய்வறைகள், பண உதவி கள் உள்ளிட்ட உரிமைகள் சட்டமாக்கப்பட்டன.

உண்மையான கம்யூனிஸம்

திருமணம் - விவாகரத்து போன்றவற்றிலிருந்து மதம் விலக்கப்பட்டது. பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யப்படும் திருமணம் மட்டுமே சட்டப்படியான திருமணமாக அங்கீகரிக்கப்படும் என்றானது. கருக்கலைப்பு தண்டனைக்கு உரிய குற்றம் என்ற முந்தைய சட்டம் கடாசப்பட்டு, கருக்கலைப்பு சட்டபூர்வமானது. அரசு மருத்துவ மனைகளில் பாதுகாப்பான கருக்கலைப்புக்கான வசதிகள் தொடங்கப்பட்டன. மேலும் “யாருக்கும் காயம் ஏற்படுத்தாமலும், யாருடைய நலன்களையும் ஆக்கிரமிக்காமலும் உள்ள உடலுறவு விஷயத்தில் அரசோ, சமுதாயமோ தலையிடக் கூடாது” என்பது அரசின் கொள்கையானது.

நவம்பர் புரட்சி சாதித்தவை ஏராளம். ஆனால், லெனின் ஆண் - பெண் சமத்துவத்துக்கான நடவடிக்கைகளையே முதன்மைப் பெருமையெனக் கருதினார். லெனின் 1919-ல் எழுதுகிறார்: “பெண்களின் நிலைமையை எடுத்துக்கொள்வோம். நாம் அதிகாரத்துக்கு வந்த முதல் ஓர் ஆண்டுக்குள் செய்த சாதனையில் நூற்றில் ஒரு பங்கைக் கூட, உலகில் பல பத்தாண்டுகளில் எவரும் செய்யவில்லை. இந்தச் சாதனை பற்றிப் பெருமைகொள்ள நமக்கு ஆயிரம் மடங்கு உரிமை உள்ளது.” கூடவே, அவர் ஓர் எச்சரிக்கையும் விடுத்தார். “பெண்களைத் தாழ்வாக நடத்தும் இழிவான சட்டங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றை நொறுக்கித் தள்ளிவிட்டோம். ஆனால், கட்டிடம் கட்டுவதற்காக மனையைச் சுத்தப்படுத்தியிருக்கிறோமே தவிர, இன்னும் கட்டிடத்தைக் கட்டிவிடவில்லை என்பதும் நமக்குத் தெளிவாகவே தெரிகிறது!” மேலும் அவர் சொன்னார்: “உண்மையான பெண் விடுதலையிலிருந்தே உண்மையான கம்யூனிஸம் தொடங்குகிறது!”

- இரா.ஜவஹர், மார்க்ஸிய ஆய்வாளர், எழுத்தாளர், ‘கம்யூனிஸம்: நேற்று, இன்று, நாளை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: jawaharpdb@gmail.com

நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.