Saturday, November 12, 2016

சுட்டிபுரம் அம்மனின் ஓடாத தேரும், யாழ் ஆதிக்க சாதியின் அடங்காத திமிரும் !


சுட்டிபுரம் அம்மனின் ஓடாத தேரும், யாழ் ஆதிக்க சாதியின் அடங்காத திமிரும்


வரணி சுட்டிபுரம் அம்மன் ஆலயம் 

யாழ்ப்பாண‌த்தில் சாதிப் பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ 20 வ‌ருட‌ங்க‌ளாக‌ நிறுத்தி வைக்க‌ப் ப‌ட்ட‌ தேர்த் திருவிழா!

யாழ் குடாநாட்டில், தென்மராட்சிப் பிரதேசமான வ‌ர‌ணியில் உள்ள‌து சுட்டிபுர‌ம் அம்ம‌ன் கோயில். வழமை போல கோயில் நிர்வாக‌ம் உய‌ர்த்த‌ப் ப‌ட்ட‌ சாதி ஒன்றின் ஆதிக்க‌த்தின் கீழ் இருந்த‌து. அறுபதுகளில் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் நகர்ப்புறக் கோயில்கள் திறந்து விடப்பட்டன. இருப்பினும், தொண்ணூறுகளின் தொட‌க்க‌த்திலும் கிராம‌ப் புற‌ கோயில்க‌ள் அனைத்து சாதியின‌ருக்கும் திற‌க்க‌ப் ப‌டாம‌ல் இருந்த‌ன‌.

யாழ் குடாநாடு முன்ன‌ர் புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டில் இருந்த‌ கால‌த்தில், தாழ்த்த‌ப் ப‌ட்ட‌ சாதியின‌ர் த‌ன்னெழுச்சியாக‌ கோயில்க‌ளுக்குள் நுழைந்து வ‌ந்த‌ன‌ர். புலிக‌ளும் அதை அங்கீக‌ரித்த‌ ப‌டியால் பிர‌ச்சினை இல்லாம‌ல் திற‌ந்து விட‌ப் ப‌ட்ட‌ன‌. 

அந்தக் காலகட்டத்தில், வரணியை அண்டிய வடமராட்சியை சேர்ந்த செங்கதிர், புலிகளின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக இருந்தார். தாழ்த்தப் பட்ட சாதியை சேர்ந்த அவரது நேரடி தலையீட்டின் பின்னரே பல கோயில்கள் திறந்து விடப் பட்டிருந்தன.

சில வருடங்களின் பின்னர் தளபதி செங்கதிர், புலிகளின் கட்டுபாட்டுப் பிரதேசம் முடிவடையும் எல்லைப் பிரதேசமான வவுனியாவில் நடந்த ஒரு தாக்குதலில் கொல்லப் பட்டதாக அறிவிக்கப் பட்டது. இருப்பினும், அந்தத் தகவல்கள் தெளிவில்லாமல் இருந்ததால், செங்கதிரின் மரணம் பற்றிய மர்மம் நீடித்தது. புலிகள் இயக்கத்திற்குள் நிலவிய சாதிய முரண்பாட்டின் விளைவாக கொல்லப் பட்டதாகவும் மக்கள் பேசிக் கொண்டனர். அது வேறு கதை.

1992 அல்ல‌து 1993 ம் ஆண்டள‌வில், சுட்டிபுர‌ம் அம்ம‌ன் ஆல‌ய‌ தேர்த் திருவிழா ந‌ட‌ந்த‌து. எதற்கும் புலிக‌ள் இருக்கிறார்க‌ள் தைரியத்துடன் திருவிழாவுக்கு சென்றிருந்த தாழ்த்த‌ப் ப‌ட்ட‌ சாதியின‌ர் தேர் வ‌ட‌ம் பிடித்திழுத்த‌ன‌ர். அத‌னால் அங்கு சாதி மோத‌ல் ஏற்ப‌ட்ட‌து.

அப்போது புலிக‌ள் அத‌னை சாதி மோத‌லாக‌ப் பார்க்கவில்லை அல்லது வன்கொடுமை குற்றமாக பதிவு செய்யவில்லை. கோஷ்டி வ‌ன்முறை என்ற‌ குற்ற‌ச்சாட்டில் சில‌ரை பிடித்துச் சென்று அடைத்து வைத்தன‌ர். இருப்பினும், கோயில் நிர்வாக‌ம் தாழ்த்த‌ப் ப‌ட்ட‌ சாதியினரை தேரிழுக்க‌ அனும‌திக்க‌வில்லை. அது தொடர்பாக புலிகளும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. பிரச்சினையை அப்படியே விட்டு விட்டார்கள்.

இருப்பினும், இந்த‌ விவ‌கார‌ம் மீண்டும் விஸ்வ‌ரூப‌ம் எடுக்குமென கோயில் நிர்வாக‌த்தின‌ர் அஞ்சினார்கள். அதற்காக ஒரு அதிர‌டி ந‌ட‌வ‌டிக்கை எடுத்த‌ன‌ர். "த‌விர்க்க‌ முடியாத‌ கார‌ண‌ங்க‌ளினால் இனிமேல் தேர்த்திருவிழா ந‌டைபெறாது." என்று அறிவித்த‌ன‌ர். தேர்முட்டிக் கதவை இழுத்து மூடினார்கள். அப்போது நிறுத்த‌ப் ப‌ட்டிருந்த‌ தேர்த் திருவிழா போர் முடியும் வ‌ரையில் ந‌ட‌க்க‌வில்லை.

மீண்டும் 2012 ம் ஆண்டு தொட‌ங்க‌ப் ப‌ட்ட‌து. அப்போது வ‌ட‌ மாகாண‌ ஆளுந‌ர் ச‌ந்திர‌சிறியும் க‌ல‌ந்து கொண்டார். அது ம‌ட்டும‌ல்ல‌ சிறில‌ங்கா விமான‌ப் ப‌டை ஹெலிகாப்ட‌ர் வானில் இருந்து ம‌ல‌ர் தூவிய‌து. 2012ம் ஆண்டு பெரும் பொருட்செல‌வில் ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ தேர்த்திருவிழா, சாதிவெறிய‌ர்க‌ளின் வெற்றிக் கொண்டாட்ட‌மாக‌ ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌து. யாழ்ப்பாண‌த்தில், சாதிவெறிய‌ர்க‌ளுக்கும், சிங்க‌ள‌ அர‌சுக்கும் இடையிலான,‌ க‌ள்ள‌ உற‌வுக்கு அது சாட்சிய‌மாக‌ விள‌ங்கிய‌து.

உண்மையில், தேர்த்திருவிழா மட்டும் பிரச்சினைக்கு காரணம் அல்ல.  சாதிய முரண்பாடுகள் எல்லாக் காலங்களிலும் நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்துள்ளது. பேச்சுவார்த்தைக் காலத்தில் (2002 - 2006), சாதிய பிரச்சினை இன்னொரு பரிணாமத்தை அடைந்தது. 

அன்று நடந்த சாதி மோதல், அனைத்து ஊடகங்களிலும் இருட்டடிப்பு செய்யப் பட்டது. அதற்குப் பதிலாக "இரண்டு கிராமங்களுக்கு இடையிலான மோதலாக" சித்தரித்தார்கள்.  மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது அது கிராமங்களின் மோதலாகத் தோன்றும். 

யாழ் குடாநாட்டின் பிரதான வீதியான A9 கண்டி வீதிக்கு வடக்குப் புறத்தில் வரணி உள்ளது. அதன் தெற்குப் புறத்தில் தவசிக்குளம் என்ற கிராமம் உள்ளது. வரணியில் உயர்த்தப் பட்ட சாதியினரும், தவசிக் குளத்தில் தாழ்த்தப் பட்ட சாதியினரும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். 

ஏதோ ஒரு பிரச்சினையில் தமது ஊர்க்காரர்களை அடித்து விட்டார்கள் என்ற கொந்தளிப்பில் மோதல்கள் ஆரம்பமாகின. இரண்டு தரப்பினரும் எதிராளியின் கிராமத்திற்குள் புகுந்து வெட்டுக்குத்துகளை நடத்தி உள்ளனர். இந்த மோதல்களில் ஓரிருவர் பலியாகி இருக்கலாம். 

வரணிக்கும், தவசிக்குளத்திற்கும் நடுவில் கொடிகாமம் என்ற சிறிய நகரம் உள்ளது. இரண்டு ஊரவர்களும் அல்லது சாதியினரும், கொடிகாமம் நகரத்தில் அகப்பட்டவர்களையும் தாக்கினார்கள். இதனால் மக்கள் சந்தைக்கு கூட செல்ல அஞ்சினார்கள். 

அப்போது யாழ்குடாநாடு முழுவதும் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும், சமாதானப் பேச்சுவார்த்தை காரணமாக மறைமுகமான புலிகளின் நிர்வாகமும் நடந்தது. வரணி - தவசிக்குளம் கிராமங்களுக்கு இடையிலான சண்டையை தீர்த்து வைக்கும் பொறுப்பையும் புலிகளே ஏற்றுக் கொண்டிருந்தனர். இனிமேல் மோதல்களில் ஈடுபடுபவர்களை சுடுவோம் என்று எச்சரித்ததுடன், மோதல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை வன்னிக்கு வருமாறு அழைத்தனர்.

இரண்டு கிராமங்களிலும் இருந்து அழைக்கப் பட்ட குற்றவாளிகள் வன்னியில் சிறை வைக்கப் பட்டிருந்தனர். இருப்பினும், ஒரு சிலர் வன்னிக்கு செல்லாமல் ஒளித்து இருந்தனர். இறுதிப்போர் முடிந்து சில மாதங்களுக்குள், வன்னிக்கு செல்லாமல் ஒளித்தவர்கள் இனந்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப் பட்டனர். இரண்டு கிராமங்களிலும் நடந்த கொலைகளை யார் எதற்காக செய்தார்கள் என்ற மர்மம் இன்னமும் துலங்காமல் உள்ளது. 



இதனுடன் தொடர்பான முன்னைய பதிவுகள்: 
    


More Recent Articles




0 comments:

Post a Comment

Kindly post a comment.