Wednesday, October 26, 2016

அளவுக்கு மிஞ்சினால் தண்ணீரும் நஞ்சு!





தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிங்க; பறந்துவிடும் பல நோய்கள் என்று பலர் அக்கறையோடு சொல்வார்கள். அதெல்லாம் அவசியம் இல்லை என்கிறது ஆஸ்திரேலியாவில் விஞ்ஞானிகள் செய்த ஆய்வு.

உடற்பயிற்சி செய்கிற 20 பேரிடம் இந்த ஆய்வு செய்யப்பட்டது. சிலர் தாகத்துக்கு ஏற்பத் தண்ணீர் குடித்தனர். சிலர் அளவுக்கு அதிகமான தண்ணீர் குடித்தனர். அவர்களது உடல்களின் மாற்றங்கள் சோதிக்கப்பட்டன. அளவுக்கு அதிகமான தண்ணீர் குடித்தவரின் மூளை செயல்படும் விதமும் நவீன வருடிகளால் (ஸ்கேன்) ஆய்வு செய்யப்பட்டது.

தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற பொதுவான விதி எல்லோருக்கும் பொருந்தாது என்கிறது இந்த ஆய்வு. அவரவர் தாகத்துக்கு ஏற்ப தண்ணீரைக் குடித்துக்கொள்ள வேண்டும். சிலருக்கு அதிகம் தேவைப்படுகிறது. சிலருக்குக் குறைவாகத் தேவைப்படுகிறது. அது மட்டுமல்லாமல், நாம் சாப்பிடுகிற உணவிலும் பலவற்றில் தண் ணீர் கலந்துதான் இருக்கிறது. சில வகை உணவுகளில் அதிகமாகவே தண்ணீர் இருக்கிறது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

அளவுக்கு மீறித் தண்ணீர் குடித்தால், அந்தத் தண்ணீரை ஒழுங்குபடுத்தும் வகையில் நமது உடலில் ஒரு அமைப்பு செயல்படுவதையும் இந்த ஆய்வு முதன் முறையாகக் கண்டுபிடித்துள்ளது.

உடலின் முன்னெச்சரிக்கையையும் மீறி ஏராளமான தண்ணீரை நாம் ஒரே நேரத்தில் குடித்தால் எதிர்பாராத மாற்றங்கள் உடலில் ஏற்படுகின்றன. ரத்தத்தில் உள்ள சோடியத்தின் அளவு அசாதாரணமான அளவுக்குக் குறைகிறது. இதன் விளைவாக மந்தமும் வாந்தி எடுக்கும் உணர்வும் ஏற்படுகிறது. மிக அதிகமான அளவு தண்ணீர் குடிக்கும் ஒருவருக்கு வலிப்புகளும் ஏற்படலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டுக் கோமா நிலைக்குச் செல்லும் அபாயங்களும் உள்ளன. அதன் தொடர்ச்சியாக மரணமும் ஏற்படும் என்கின்றன சமீபத்த்திய ஆய்வுகள்.

அளவுக்கு மிஞ்சினால் தண்ணீரும் நஞ்சுதான் என்கிறார் ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழத்தின் பேராசிரியர் மைக்கேல் ஃபார்ரெல்.

http://tamil.thehindu.com/

0 comments:

Post a Comment

Kindly post a comment.