Thursday, September 1, 2016

சிறையில் சுற்றுலாப் பயணிகள் நாளொன்றுக்கு ரூ.500 செலுத்தித் தங்கலாம் !



தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் உள்ள ஒரு முன்னாள் சிறைச் சாலை, சுற்றுலாப் பயணிகளுக்கு சிறைவாசம் என்றால் எப்படி இருக்கும் என்ற அனுபவத்தைத் தர காத்திருக்கிறது. ரூ. 500 செலுத்தினால், ஒரு நாள் முழுவதும் இங்கு தங்கி சிறைவாசத்தை அனுபவிக்கலாம்!

கடந்த 2012-இல் அருங்காட்சியகமாக மாற்றம் செய்யப்பட்ட சங்கரெட்டி மத்தியச் சிறைச் சாலையில்தான் இந்த வித்தியாசமான வசதியை அந்த மாநிலச் சிறைத் துறை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. சங்கரெட்டி மத்தியச் சிறை 220 ஆண்டுகள் பழைமையானதாகும்.

ஹைதராபாதில் நிஜாம் ஆட்சியின் கீழ் தலைமை அமைச்சராக இருந்த முதலாவது சாலார் ஜங் என்பவரால், கடந்த 1796-ஆம் ஆண்டு, சங்கரெட்டியில் இந்த மத்தியச் சிறைச்சாலை கட்டப்பட்டது. இந்தச் சிறைச்சாலைக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், 1 ஏக்கர் முழுவதும் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

கடந்த 2012-ஆம் ஆண்டில், சங்கரெட்டி அருகில் உள்ள பகுதியில் புதிய சிறைச்சாலை கட்டப்பட்டு, இங்கிருந்த கைதிகள் அங்கு மாற்றப்பட்டனர். பிறகு, சங்கரெட்டி சிறை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், "சிறைச்சாலை அனுபவத்தை உணர்வோம்' என்ற பெயரில் புதிய சுற்றுலாத் திட்டத்தை தெலங்கானா மாநில சிறைத் துறை அண்மையில் அறிமுகப்படுத்தியது. அதன்படி, சங்கரெட்டி சிறையில் சுற்றுலாப் பயணிகள் நாளொன்றுக்கு ரூ.500 செலுத்தி தங்கிச் செல்லாம். அவ்வாறு தங்க விரும்புபவர்களுக்கு கதர் ஆடை, அலுமினியத் தட்டு, டம்ளர், சோப் என கைதிகளுக்கு அளிக்கப்படும் அனைத்தும் வழங்கப்படும்.

அத்துடன், மின்விசிறி, சாப்பாடு, தேநீர் உள்ளிட்டவையும் வழங்கப்படும்.

இதுகுறித்து அந்த மாநில சிறைத் துறை துணைக் கண்காணிப்பாளர் லஷ்மி நரசிம்மா கூறுகையில், "சங்கரெட்டி சிறையில் எந்தவொரு சுற்றுலாப் பயணியும் இதுவரை இத்திட்டதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. சிறையில் தங்க விரும்புபவர்கள் முன்கூட்டியே எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான், அவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்ய முடியும்' என்றார்.

நன்றி :- தினமணி




0 comments:

Post a Comment

Kindly post a comment.