Wednesday, August 31, 2016

கபடியே தெய்வம்.. மைதானமே கோயில்..! - எஸ். மோகன், இந்து தமிழ் நாளிதழ்




கபடி விளையாட்டே தெய்வம்.. மைதானமே கோயில்... கபடி என்ற உச்சரிப்பே மந்திரம்...’ என்ற கொள்கையுடன் பயணிக்கிறது அளத்தங்கரை கபடி குழு. கடந்த 27 ஆண்டுகளாக ஏழை சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து, இலவசமாக கபடி பயிற்சி அளித்து, அரசுப் பணிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது இக்குழு.

கன்னியாகுமரி மாவட்டம், அளத் தங்கரை கிராமத்தில், இயற்கை எழில் சூழ்ந்த மைதானத்தில் 150-க் கும் மேற்பட்ட இளைஞர்கள் தினமும் அதிகாலை 4.30 மணிக்கே கபடி களத்தில் கடும் பயிற்சி மேற்கொள்கின்றனர். தொடர்ந்து 3 மணி நேர பயிற்சிக்குப் பின், பள்ளி, கல்லூரிக்குச் செல்கின்றனர். மீண்டும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சி செய்கின்றனர்.

விளையாட்டு இட ஒதுக்கீடு

இங்கு பயிற்சியில் சேர்வதற்கு, புகைபிடித்தல், மது பழக்கம் இல் லாமல் இருப்பதும், விளையாட்டு ஆர்வமும், பெற்றோரை மதிக்கும் பண்புமே முதல் தகுதி. விளைவு, இலவசமாக பயிற்சி பெற்ற ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் 1989-ம் ஆண்டில் இருந்து, பல்வேறு மாநிலங்களில் விளையாட்டு இட ஒதுக்கீட்டில் அரசுப் பணி யில் உள்ளனர். சிறந்த உடல் தகுதியால் ராணுவம், காவல்துறை யில் தேர்வாகி பணிக்குச் சென்று விடுகின்றனர்.

ஆட்டோ ஓட்டுநர், பனை தொழிலாளர், காய்கறி வியாபாரி, விவசாயத் தொழிலாளர், கட்டிடத் தொழிலாளர், ஆடு, மாடு மேய்ப்ப வர் போன்றவர்களின் மகன்கள் அதிகமானோர் உள்ளனர். குமரி மாவட்ட கல்லூரிகளில் படிக்கும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும், அளத்தங்கரை கபடி குழுவில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

பிரதிபலன் எதுவும் பாராமல் இளைஞர்களை நல்வழி நடத்தி வரும் இந்த கபடி குழுவை நிர்வ கித்து வரும் மின்வாரிய அலுவலர் ஆர்.ரவிச்சந்திரன் கூறியதாவது:

தேசிய கபடி அணிக்காக விளை யாடினேன். இதனால் 1987-ம் ஆண்டில் எனக்கு மின்வாரியத்தில் வேலை கிடைத்தது. விளையாட் டால் நல்ல எதிர்காலம் இருப்பதால், பின்தங்கிக் கிடந்த எங்கள் கிராமத்தில் உள்ள மாணவர்கள் பலரை முன்னேற்ற வேண்டும் என்ற ஆர்வம் உருவானது. இதன் விளைவாகவே ஊர் பெயரிலேயே கபடி குழுவை உருவாக்கினோம்.

கபடி வீரர்கள் என்றாலே முரட் டுக் குணம், மூர்க்கமான செயல் பாடுடன் இருப்பார்கள் என்ற நிலையே தொடக்கத்தில் இருந்து வந்தது. ஆனால், இங்கு தியானம், நேர்மை, ஒழுக்கம், வீரம், ஆன்மிகம் போன்றவற்றை கற்பித்து இளைஞர் களைப் பக்குவப்படுத்தினோம். பயிற்சி மைதானத்தின் அருகிலேயே வீடு எடுத்து அவர்களைத் தங்க வைத்து வருகிறோம். பள்ளி, கல் லூரியில் கல்விச் செலவு, உணவு போன்றவற்றைக் கபடி குழுவே ஏற்கிறது. இக்குழுவில் இருக்கும் சிறந்த வீரர்கள் ஆசிய போட்டி வரை சென்று ரொக்கப் பரிசுகளை பெற்று வந்தாலும் அந்த நிதி கபடி குழுவுக்கு வழங்கப்படுகிறது. இதுவே எங்கள் நிதி ஆதாரம்.

இங்கு பயிற்சி பெறும் இளைஞர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதைப் பார்த்து, மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு சார்பில், கபடி உள் விளையாட்டரங்கம், மின்விளக்கு, பூங்கா உட்பட பல அடிப்படை வசதி களை ஏற்படுத்திக் கொடுத்துள்ள னர்.

இங்கு பயிற்சி பெறும் வீரர்கள் நாட்டுக்காகவும், மாநிலத்துக்காக வும், பல்கலைக்கழகம் மற்றும் மாவட்டத்துக்காகவும் விளையாடி வருகின்றனர். பெண்கள் கபடி அணிக்கும் கடந்த 10 ஆண்டுகளாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 10 மாணவியர் தமிழக காவல் துறையிலும், இன்னும் பலர் ரயில்வே மற்றும் விளையாட்டு இட ஒதுக்கீட்டில் அரசுப் பணியிலும் சேர்ந்துள்ளனர். 3 பெண்கள் இந்திய கபடி அணியிலும், நதியா என்ற வீராங்கனை ஆசிய இளையோர் போட்டியிலும் விளையாடி உள்ள னர்.

பயிற்சி போக பிற நேரங்களில் கிராமத்தின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைப்பது, மரம் நடுதல், இயற்கை வளங்களைக் காத்தல் போன்ற பணியில் கபடி வீரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இங்கு பயிற்சி பெறுபவர்களே பயிற்சி மையத்தைத் திறம்பட நிர்வகிக்கின்றனர் என்றார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.