Sunday, August 28, 2016

காற்றிலிருந்து நீர் புத்தம் புது கண்டுபிடிப்பு


ஆராய்ச்சியில் ஏற்படும் பல விபத்துகள், பெரும்பாலும் மற்றொரு நன்மையாகவே மாறும் வாய்ப்பு கொண்டவை. இன்று நாம் பயன்படுத்தும் பல பொருட்களும், என்ன பொருளுக்காக ஆராய்ச்சி செய்தார்களோ, அதைத் தாண்டி அம்முயற்சியின்போது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டவைதான். ‘விபத்து நல்லது’ என நாம் கூறும் கருத்தை சரிதான் என்று தங்கள் கண்டுபிடிப்பை பார்த்துக்கொண்டே ஆமோதிக்கின்றனர் இந்த விஞ்ஞானிகள்.

பசிபிக் வடமேற்கு தேசிய ஆய்வக (PNNL) விஞ்ஞானிகள், நானோ வடிவ காந்தச்சுருள்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போதுதான் காற்றிலிருந்து நீர் பெற முடியும் என்பதைக் கண்டறிந்திருக்கின்றனர்.

தோல்வியடைந்த தங்கள் சோதனையின் ஆவியாக்கும் கருவியினை நுண்ணோக்கியில் வைத்து ஆராய்ந்தபோது இந்த உண்மை வெளிப்பட்டது. கார்பன் தன்மை கொண்ட நானோராட்ஸ் (ஒரு பரிமாணம் கொண்ட மூலக்கூறுகள்) காற்றிலுள்ள ஈரப்பதத்தை 50-80 சதவிகிதம் உள்ளிழுத்துக்கொண்டது. இந்த முறையில் நானோராட்ஸ் குறைந்த ஈரப்பதம் கொண்ட காற்றை உள்ளிழுத்து, அதிக ஈரப்பதம் கொண்டதாக மாற்றியது.

இக்கண்டுபிடிப்பு, நீரினை சேமித்து வைப்பது, நீரினை தூய்மைப்படுத்துவது, அதிக வெப்பநிலையில் வேலை செய்பவர்கள் உடல் நீரிழப்பைத் தடுப்பது (எ.கா: உடற்பயிற்சி) உள்ளிட்ட பல செயல்பாடுகளிலும் பயன்பட வாய்ப்புள்ளது.‘‘எங்களுடைய கருவி ஒரு ஸ்பான்ஜ் போல செயல்பட்டு தன்னுள் நீரைத் தேக்கி வைக்கிறது என்பது ஆச்சரியமாக உள்ளது’’ என்கிறார், இக்கருவியை உருவாக்கியவரும் பிஎன்என்எல் அமைப்பின் ஆராய்ச்சி உதவியாளருமான  டேவிட் லாவோ.

நானோராட்களின் அளவு மற்றும் அமைப்பு ஆகியவற்றைக் கண்டறிவதன் வழியே, இவை இப்படி நீரினைத் தேக்கும் தன்மை பெற என்ன காரணம் என்பதை அறியும் ஆராய்ச்சியில் இப்போது இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.