Tuesday, November 17, 2015

"நேபாளத்துடனான போக்குவரத்து தடையை இந்தியா உடனே நீக்க வேண்டும்'

Image result for காட்மாண்டு


நேபாளத்தில் மருந்து, சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைக் கருத்தில்கொண்டு, தங்கள் நாட்டுடனான போக்குவரத்து தடையை இந்தியா உடனடியாக நீக்க வேண்டும் நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 நேபாளப் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் ஞாயிற்றுக்கிழமை, முதல் முறையாக அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
 பஞ்சசீலக் கொள்கையின் அடிப்படையில் அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேண நேபாளம் விரும்புகிறது. அதேசமயம், நேபாளத்தின் இறையாண்மைக்கும், பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும் பிற நாடுகள் மதிப்பளிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
 ஆனால், நேபாளத்தின் புதிய அரசியல் சாசனத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தைக் காரணம்காட்டி, எங்கள் நாட்டுடனான போக்குவரத்துக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இந்தியா இவ்வாறு நடந்து கொள்ளும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. 
 இந்தியாவின் அறிவிக்கப்படாத இந்தப் போக்குவரத்து தடையால், உயிர் காக்கும் மருந்துகள், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு நாடு முழுவதும் தொடர்ந்து பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இது, போர்க்காலச் சூழலைவிட மிகவும் மோசமானதாக உள்ளது.
 இந்த இக்கட்டான நிலையிலிருந்து நேபாளம் விடுபட, கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் எங்கள் நாடு உருகுலைந்தபோது, மறுசீரமைப்புப் பணிகளுக்கு இந்தியா உதவியதைப் போன்று, தற்போதும் உதவ வேண்டுமென எதிர்பார்க்கிறோம். எனவே, மனிதாபிமான அடிப்படையில், நேபாளத்துடனான போக்குவரத்து தடையை இந்தியா உடனடியாக நீக்க வேண்டும்.
 பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை சமாளிக்கும் நோக்கில்தான், அவற்றை இறக்குமதி செய்வது தொடர்பாக சீனாவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளதே தவிர, இந்த நடவடிக்கை எந்த நாட்டுக்கும் எதிரானதல்ல என்று நேபாளப் பிரதமர் சர்மா ஒலி பேசினார்.
தினமணி
 
 

0 comments:

Post a Comment

Kindly post a comment.