Tuesday, November 17, 2015

பாரீஸ் தாக்குதல்: பயங்கரவாதியின் அடையாளம் தெரிந்தது


பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட 7 பேரில் ஒருவரின் அடையாளம் தெரிந்ததாக அந்நாட்டு காவல் துறையினர் தெரிவித்தனர்.
 தேசிய கால்பந்து மைதானம், பிரபல இசையரங்கு, பல்வேறு உணவு விடுதிகள் என 6 இடங்களில் வெள்ளிக்கிழமை பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
 இந்தத் தொடர் தற்கொலைத் தாக்குதலில் 129 பேர் உயிரிழந்தனர்.
 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதில் 99 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
 தாக்குதலில் ஈடுபட்ட 7 பயங்கரவாதிகளும் பலியாகினர்.
 இத்தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
 இந்த நிலையில், இசையரங்கில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த ஒரு பயங்கரவாதியின் விரலைக் கொண்டு அவரது அடையாளத்தை போலீஸார் உறுதி செய்தனர்.
 பாரீஸ் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த அவரது பெயர் உமர் இஸ்மாயில் முஸ்தஃபாய் (29). அவருக்கு 3 சகோதரர்களும், இரு சகோதரிகளும் உள்ளனர்.
 தனது தீவிரவாத சிந்தனைகளுக்காக, 2010-ஆம் ஆண்டு போலீஸாரின் கவனத்தை ஈர்த்த இவர், எந்த பயங்கரவாதக் குழுவுடனும் தொடர்பு வைத்திருந்ததாகத் தெரியவில்லை.
 எனினும், சிறு குற்றங்களில் ஈடுபட்டதாக, உமர் இஸ்மாயில் முஸ்தஃபாய்க்கு எதிராக 8 வழக்குகள் நடைபெற்றன. எந்த வழக்கிலும் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படவில்லை.
 அவரது அடையாளம் தெரிய வந்ததைத் தொடர்ந்து, அவருடைய தந்தையும் சகோதரர் ஒருவரும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
 தாக்குதலில் ஈடுபட்டவர்களில் தனது சகோதரனும் ஒருவன் என்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக, முஸ்தஃபாயின் சகோதரர் போலீஸாரிடம் கூறினார்.
 பல ஆண்டுகளாக அவர்கள் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.
 தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்திய மற்றொரு பயங்கரவாதியின் உடல் அருகிலிருந்து சிரியா பாஸ்போர்ட் கண்டெடுக்கப்பட்டது.
 இதையடுத்து, சிரியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு அகதியாக வந்த நபர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல் துறையினர் கருதுகின்றனர்.
 அந்த பாஸ்போர்ட் வைத்திருந்த நபர், கடந்த அக்.3-ஆம் தேதி கிரேக்கத் தீவான லெரோஸ் வந்தார். அங்கு அகதியாகத் தன்னைப் பதிவு செய்து கொண்டார் என்று பிரான்ஸ் போலீஸார் தெரிவித்தனர்.

ஏ.கே.47 துப்பாக்கிகள் பறிமுதல்

 பாரீஸ் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்தியதாகத் தெரிய வந்துள்ள ஒரு காரிலிருந்து ஏராளமான துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
 புறநகர்ப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்த காரை போலீஸார் சோதனையிட்டனர்.
 அப்போது, அந்த காரில் ஏராளமான ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்புப் பணியில் பிரான்ஸ் ராணுவம்

 பிரான்ஸ் நாடு முழுவதும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் பாரீஸ் வீதிகளில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 தலைநகருக்குள் வரும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.
 போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் எதுவும் கொண்டு வரப்படவில்லை. உலகப் புகழ் பெற்ற ஈஃபில் கோபுரம் காலவரையறையின்றி மூடப்பட்டது. அந்தப் பகுதி முழுவதும் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

ஐரோப்பா முழுவதும் உஷார் நிலை

 ரோம், நவ. 15: பிரான்ஸில் நிகழ்த்தப்பட்ட தொடர் பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலியாக, ஐரோப்பா முழுவதும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
 பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்த்தினர். இதில் 129 பேர் பலியாகினர்.
 இந்த திடீர் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, ஐரோப்பா முழுவதும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
 இத்தாலி தலைநகர் ரோமின் முக்கிய இடங்களில் ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 வாடிகனின் புனித பீட்டர் தேவாலய சதுக்கத்தில் தானியங்கித் துப்பாக்கிகளை ஏந்திய ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். புராதன கொலிஸீயம் அரங்கிலும் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரிட்டனின் இரண்டாவது பெரிய விமான நிலையமான காட்விக்கில், கைத் துப்பாக்கி போன்ற சாதனத்தை வைத்திருந்த நபரை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
 தன்னிடம் கைத் துப்பாக்கி வடிவத்தில் வைத்திருந்த மர்மப் பொருளை அந்த நபர் குப்பைத் தொட்டியில் வீசினார். இதைக் கண்ட விமான நிலையக் காவலர்கள் அவரைக் கைது செய்தனர்.
 அந்த இடத்துக்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள், குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட அந்தப் பொருளைப் பாதுகாப்பாக வெடிக்க வைத்து செயலிழக்கச் செய்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து, பல மணி நேரத்துக்கு அந்த விமான நிலையம் மூடப்பட்டது.
 விமான நிலையத்துக்குள் இருந்த அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. விமான நிலையம் மீண்டும் திறக்கும் வரை கொட்டும் மழையில் பயணிகள் காத்திருந்தனர்.

பெல்ஜியத்தில் மூவர் கைது

 பாரீஸ் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பெல்ஜியம் நாட்டில் பலர் கைது செய்யப்பட்டதாக பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மிஷெல் சனிக்கிழமை தெரிவித்தார். எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்பதை அவர் வெளியிடாதபோதிலும், பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 செய்தியாளர்களிடம் பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மிஷெல் கூறியதாவது: பாரீஸ் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரமாக்கும் பொருட்டு நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த பலர் கைது செய்யப்பட்டனர்.
 இவர்களில் ஒருவர் பிரான்ஸ் தாக்குதல் நடைபெற்றபோது பாரீஸில் இருந்ததாக ஒப்புக் கொண்டார்.
 அவரிடம் பயங்கரவாத தடுப்புப் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று பிரதமர் சார்லஸ் மிஷெல் கூறினார்.
 பாரீஸ் இசையரங்கில் நடைபெற்ற தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பெல்ஜியம் நாட்டு எண் பொருத்திய வாகனத்தில் வந்ததாகத் தெரிய வந்துள்ளது.
 இசையரங்குக்கு வெளியே கைவிடப்பட்ட பெல்ஜியம் எண் கொண்ட காரை பிரான்ஸ் போலீஸார் கைப்பற்றினர். அதில் ஏராளமான ஏ.கே.47 ரகத் துப்பாக்கிகள் இருந்தன. இதைத் தொடர்ந்து பெல்ஜியம் முழுவதும் உஷார் நிலை  அறிவிக்கப்பட்டுள்ளது.

"பாரீஸ் சம்பவம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது'

 மியூனிக், நவ.15: ஐரோப்பாவுக்குள் எந்தக் கட்டுப்பாடும் கண்காணிப்பும் இல்லாத அகதிகள் நுழைவு இனி இருக்க முடியாது என்று ஜெர்மனியின் பவேரியா மாகாண அமைச்சர் மார்க்கஸ் úஸாடர் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
 அவர் கூறியதாவது: ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிடையேயான எல்லைப்புறச் சாலைகளில், சோதனை எதுவுமின்றி, ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டுக்குள் செல்லலாம் என்ற நிலை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
 ஆனால் இது போன்ற கண்காணிப்பற்ற போக்குவரத்து இனி தொடர முடியாது. பாரீஸ் தாக்குதல்கள் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.
 எல்லைப் பாதுகாப்பில் ஜெர்மனியின் மத்திய அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், எல்லைப்புற மாகாணமான பவேரியா தானாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை வரும் என்றார் அவர்.
 கையெறி வெடிகுண்டுகள், டி.என்.டி. உள்ளிட்ட பயங்கர வெடிபொருள்களை காரில் கொண்டு சென்ற நபர், ஜெர்மனி- ஆஸ்திரியா எல்லைப் பகுதியில் கடந்த வாரம் பிடிபட்டார். அந்த வெடிபொருள்களை அவர் பிரான்ஸுக்கு எடுத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தார் என்று கருத இடமிருக்கிறது.

சீனாவில்...

 சீனாவில் தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கும்படி, அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
 நாடு முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பயங்கரவாத எதிர்ப்புப் படையுடன் ஒருங்கிûணைந்து, அனைத்து மாகாணங்களும், பயங்கரவாதத்துக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தினமணி


0 comments:

Post a Comment

Kindly post a comment.