Saturday, November 7, 2015

வரிச்சலுகை அளித்தால் தங்கமான வாய்ப்பு



ந்தியா ஏழை நாடு என்று யாரால் சொல்ல முடியும்?, நம் நாட்டில் ஆபரணங்களாகவும், பெட்டிகளில் பூட்டியும் வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் அளவு என்ன தெரியுமா?, 20 ஆயிரம் டன்கள் அதாவது, 52 லட்சம் கோடி ரூபாய்க்குமேல் நாட்டின் பொருளாதாரத்துக்கு எந்த பயனும் இல்லாமல் தூங்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால், தங்கம் இந்தியாவில் கிடைப்பதில்லை. வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப் படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் வெளிநாடுகளில் இருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல்–செப்டம்பர் மாதங்களில் மட்டும் ரூ.1 லட்சம் கோடியே 12 லட்சம் மதிப்புள்ள தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 

இப்படி மக்களிடம் குவிந்து இருக்கும் தங்கம் அவர்களுக்கும், நாட்டுக்கும் பயன் அளிக்கவேண்டும் என்ற நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி, இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி மந்திரியை 3 தங்கமான தங்க  திட்டங்களை அறிவிக்கச்செய்தார். தற்போது உள்ள தங்க டெபாசிட் மற்றும் கடன் திட்டங்களுக்கு மாற்றாக, தங்கத்தை பணமாக்கும் திட்டம், தங்க பத்திரதிட்டம், அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணய விற்பனை திட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புகளை நிறைவேற்றும் வகையில், 3 திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின்கீழ் இதற்காக குறிப்பிடப்படும் வங்கிகளில், தங்கள் வசம் உள்ள தங்கத்தை பொதுமக்கள் டெபாசிட் செய்யலாம். 30 கிராம் முதல் எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதற்கு 2.25 சதவீதம் முதல் 2.50 சதவீதம் வரை வட்டி அளிக்கப்படும். நாம் கொடுக்கும் தங்கம் உருக்கப்பட்டு தங்க கட்டிகளாக மாறிவிடும். திரும்ப வாங்கும் நேரத்தில் தங்க கட்டியாகவும் வாங்கிக்கொள்ளலாம், பணமாகவும் வாங்கிக் கொள்ளலாம். அடுத்து தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும்போது தங்கமாக வாங்காமல், அதன் மதிப்பிலான பத்திரமாக வாங்கிக்கொள்ள முடியும். 8 ஆண்டுகால பத்திரம் இது. ஆனால், 5 ஆண்டுகளிலேயே பத்திரத்தை கொடுத்து பணம் வாங்கிக்கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்கு முன்பே பணம் பெறுவதற்காக இந்த பத்திரங்களை பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வதற்கு வசதி செய்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பத்திரத்தை வைத்து கடனும் வாங்கிக்கொள்ளலாம். முதிர்ச்சி அடைந்தவுடன் அப்போது தங்கம் இருக்கும் விலையில் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இதுபோல, அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட 5 கிராம், 10 கிராம் தங்க நாணயங்களை வாங்கிக்கொள்ளமுடியும். விரைவில் 20 கிராம் தங்க கட்டிகள் விற்பனைக்கு வர இருக்கிறது.

இந்த 3 திட்டங்களிலும் பல வரவேற்புக்குரிய அம்சங்கள் இருந்தாலும், தங்கத்தை பணமாக்கும் திட்டத்தில் மட்டும் வருமானவரி கிடையாது, சொத்துவரி கிடையாது, மூலதன ஆதாய வரி கிடையாது என்பதுபோல, மற்ற இரு திட்டங்களுக்கும் வரிச்சலுகை அளிக்கவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மற்ற திட்டங் களைப்போல, வயதானவர்களுக்கு கூடுதல் வட்டி கொடுக்கவேண்டும். தங்கத்தை பணமாக்கும் திட்டத்தில் கொடுக்கும் நகை கல் இல்லாத நகையாக இருக்க வேண்டும் என்கிறார்கள். கல் இல்லாத நகை ரொம்ப கொஞ்சமாகத்தான் இருக்கும். மேலும், இந்த திட்டங் களுக்காக கேட்கும் விவரங்களைப்பார்த்தால், வருமான வரித்துறையை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது போல இருக்கிறது. இப்படிப் பல நடைமுறைச்சிக்கல்களை போக்கி, வரிச்சலுகைகள் அளித்தால் இந்த திட்டங்களை தங்கமான வாய்ப்பு என்று கூறலாம்.



நன்றி :-தினத்தந்தி

0 comments:

Post a Comment

Kindly post a comment.