Saturday, November 7, 2015

பாலியல் தொந்தரவு அளித்ததாக அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் கைது

ஓமலூர் அருகே பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.




ஓமலூர் அருகேயுள்ள எம்.செட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியராக ஓமலூரைச் சேர்ந்த என்.சுப்பிரமணியன் (57) பணியாற்றி வருகிறார். இவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, அந்தப் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள், கிராம மக்கள் வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியர் சுப்பிரமணியனை சந்தித்து விவரம் கேட்டனர். அதற்கு அவர் சரியான பதிலளிக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரை பள்ளியில் உள்ள தனி அறையில் பாதுகாப்பாக வைத்துவிட்டு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பள்ளி முன் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுவதாகக் கூறி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் கத்தியால் கழுத்தில் காயம் ஏற்படுத்தி தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி.சுப்புலட்சுமி, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் தங்கராஜ் ஆகியோர் பொதுமக்களைச் சமாதானப்படுத்தினர். தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் பணியிடை இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டவுடன் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, தொளசம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமணன், பள்ளி சிறுமிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் சுப்பிரமணியனைக் கைது செய்தார்.

நன்றி :-தினமணி

1 comments:

  1. இரண்டாம் பெற்றோர் ஆசிரியர் என இருக்கையில் இந்த மிருகத்திற்கு தரும் தண்டனை ஒரு பாடமாக இருக்கட்டும்..

    ReplyDelete

Kindly post a comment.