Wednesday, November 4, 2015

கடந்த வாரம் கேட்கப்பட்ட "மத்திய அரசின் குரூப்-டி, சி,பி பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்வது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

Image result for தினமணி

வாசகர் அரங்கம்
குறைந்தபட்சம்..

மத்திய அரசின் குரூப் டி, சி, பி ஆகிய பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்தது தவறு. கல்வித் தகுதி மட்டும் போதும் அல்லது தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலே போதுமானது. அவர் பணியில் சேர்ந்து விடலாம் என்றால், முறையான உடல் தகுதி மற்றும் நடைமுறைச் சிக்கல்களை சமாளிக்கும் தகுதி பெற்றவரா என்பதை நேர்காணல் மூலம்தான் அறிய முடியும். குறைந்தபட்சம் ஒரு நேர்காணல் இல்லையென்றால் ஊழல்தான் தலைவிரித்து ஆடும்.
கே. சீனிவாசன், திருவையாறு.
காலதாமதம் தவிர்க்கலாம்

நேர்முகத் தேர்வு ரத்து செய்திருப்பது சரியான முடிவு. இதனால் போட்டித் தேர்வுகளுக்கு கடினமாக தயார் செய்து பங்கேற்கும் கிராமப்புற இளைஞர்கள் பயன்பெறுவர். நேர்முகத் தேர்வுகளில் நடைபெறும் ஊழல் தடுக்கப்படும். மேலும் இதனால் தேவையற்ற காலதாமதத்தைத் தவிர்க்கலாம்.

டி. மாணிக்கவேல், திருச்சி.
பிடி அவல்!
நேர்முகத் தேர்வை ரத்து செய்தது முற்றிலும் தவறு. இதற்கு அரசு கூறும் காரணம், இடைத் தரகர்களையும், முறைகேடுகளையும் ஒழிப்பது என்பதே. இது தேர்வில் காப்பி அடிப்பதால் தேர்வையே ரத்து செய்வது மாதிரிதான். தகுதி இல்லாதவர் ஆட்சிக்கு வரும்போது அதிகாரிகளாலோ, அரசினாலோ மக்களுக்கு என்ன பயன்? தகுதித் தேர்வைக்கூட தகுதியில்லாததாகச் செய்யும் நம் அரசியல்வாதிகளுக்கு இது ஒரு பிடி அவல் மாதிரி.

டி. சந்திரன், ஈரோடு.
இழப்பு!

தற்போதைய நேர்முகத் தேர்வில் அரசியல், அதிகாரிகளின் குறுக்கீடு, லஞ்ச லாவண்யம் ஆட்சி புரிகின்றது. உடலை வருத்தி, மூளையைக் கசக்கி, படித்துத் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்றும்கூட, மேற்கூறிய குறைகளினால் நல்ல வாய்ப்பை இழக்கின்றனர். மேல் நிலை மற்றும் தொழில்நுட்பப் பணிகளுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தலாம்.

ச. பத்ம பிரபா, திருநின்றவூர்.
நேர்மையாக...

நேர்முகத் தேர்வின் நோக்கமே திறமையானவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதே. ஊழல் நடக்கிறது என்பதற்காக ரத்து செய்வது நமது முன்னேற்றத்தைப் பாதிக்கும். வேறு வகையில் ஊழல் புகுந்துவிடும். தேர்வை வெளிப்படையாக நடத்தினால் ஊழலை தடுக்கலாம். இப்போது உள்ள அதிநவீன அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்தி நேர்மையான அதிகாரிகள் மூலம் சிறப்பான நேர்முகத் தேர்வை நடத்த வேண்டுமே தவிர, ரத்து செய்வது இயலாமையைக் காட்டுகிறது.

சி.கா. சிதம்பரம், கோவில்பட்டி.
ஊழலின் ஊற்றுக்கண்

எவ்வளவு திறமை, அறிவு இருந்தாலும், தேர்வின் அனைத்து கட்டங்களையும் தாண்டிவிட்டாலும், நேர்முகத் தேர்வு என்ற அசுரனுடன் மோதி வென்றால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலையை மாற்றியது மிகச் சரியே. லஞ்சம் பெறுவதற்கான வஜ்ராயுதமாக நேர்முகத் தேர்வு விளங்குகிறது. ஊழலின் ஊற்றுக்கண் அடைபட்டது அனைவருக்கும் நிம்மதியே.

வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்.
சரியல்ல!

ஒருவர் எழுத்துத் தேர்வை எப்படியாகிலும் எழுதி விடலாம். ஆனால், பணியில் சேரும்போது அந்த நபரின் அறிவுத்திறன், அணுகுமுறை இவற்றை அறிய நேர்முகத் தேர்வு நிச்சயம் தேவையான ஒன்றாகிறது. எனவே குரூப் டி, சி, பி பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்வது சரியல்ல.

கோ. ராஜேஷ் கோபால், அருவங்காடு.
கட்டுக்குள் வரும்

மத்திய அரசின் குரூப் டி, சி, பி பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்வது சரியே. தேர்வு எழுத தேர்வர்களால் சமர்ப்பிக்கப்படும் கல்விச் சான்றாவணங்களே தெரிவு செய்யப்படுபவரின் சரித்திரத்தைக் காட்டிவிடும். எனவே, நேர்முகத் தேர்வினால் ஏற்படும் கால, பொருளாதார விரயங்கள் கட்டுக்குள் வந்துவிடுவதுடன் ஊழல் நடப்பதும் தவிர்க்கப்படும்.

கோ. பாஸ்கர், இளங்கார்குடி.
நஷ்டம் அரசுக்கு..

இந்தத் தேர்வுகளில் சில புத்தகப் புழுக்கள் தேர்ச்சி அடைந்தாலும், அவர்களுக்கு புத்தக அறிவு மட்டும் இருக்குமே தவிர, வெளி உலக அறிவு இருக்காது. ஆகவே, இம்மாதிரியான நபர்கள் நேர்முகத் தேர்வில் தேறுவது சிரமம். நேர்முகத் தேர்வு மூலம் நடக்கும் தேர்வில் கையூட்டுப் பிரச்னை பலமாகவே எழுகிறது. தகுதியற்ற நபர் வேலை பெற்றாலும் நஷ்டம் அரசிற்கு. பணம் கொடுத்து வேலை பெறுபவர்களால் நஷ்டம் மக்களுக்கு.

டி. சேகரன், மதுரை.
பதிவு மூப்பு

இது தேவையற்றது. அரசு கடைநிலைப் பணிகளுக்குக்கூட வசூல் வேட்டை நடைபெறும் இன்றைய காலகட்டத்தில், இந்தப் பிரிவுகளில் உள்ள பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்துவது மேலும் மேலும் ஊழலுக்குத்தான் வழி வகுக்கும். எனவே, எழுத்துத் தேர்வின் அடிப்படையிலும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலும் இப்பணியிடங்களுக்கு நியமனம் செய்வதே சாலச் சிறந்தது.

மீனா. கண்ணன், கோட்டையூர்.
தவறான நடவடிக்கை!

தேர்வு நடத்தி பணியாளர்களை நியமனம் செய்யும் முறையில் மதிப்பெண் ஒரு பக்கம் இருந்தாலும், நேர்முகத் தேர்வே வெற்றியைத் தீர்மானிக்கும் இடத்தில் உள்ளது. புத்தகப் புழுவாய் படித்து வெற்றி பெற்றவர்கள்கூட நேர்முகத் தேர்வில் வெற்றி பெறாமல் போவதுண்டு. காரணம், நேர்முகத் தேர்வு என்பது உண்மையான திறன் மிக்கவர்களை தேர்ந்தெடுக்கும் நல்லதொரு தேர்வு முறை. ஆகவே, ரத்து செய்வது தவறான நடவடிக்கை.

ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், 
வேம்பார்.
களப் பணி

ரத்தும் கூடாது, அப்படியே விடுவதும் கூடாது, மேம்படுத்துவதே சரி. அதற்கு களப் பணியை தேர்வர்களுக்கு திட்டமாக்கி விதிக்கலாம். தேர்வர்கள், தேர்வு செய்யப்பட்ட அலுவலகத்துக்கு வரும்போது மக்களுக்கு அந்த அலுவலக நடைமுறைகளை கற்பித்து வழி நடத்தல், பொதுமக்கள் மனு மீது அலுவலகம் எடுத்துள்ள நடவடிக்கைகளை மக்கள் 100 பேருக்கு தெரிவித்து அவர்களிடமிருந்து சான்று பெறுதல், அலுவலக நடைமுறைகளை மேம்படுத்த தமது கருத்துகளை நேர்முகத் தேர்வில் சமர்ப்பித்தல் என நிலையை மாற்றினால் நன்றாக இருக்கும்.

டி.வி. கோவிந்தன், சென்னை.
கால, பண விரயம்

நேர்முகத் தேர்வை ரத்து செய்வது சரியே. பள்ளி, கல்லூரிகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வயது மூப்பின் அடிப்படையில் நியமனம் தரலாம். நேர்முகத் தேர்வில் ஒருசில மணித்துளிகளில் ஒருவரது திறன், செயல்பாடு, குணாதிசயம், கணித்தல் தவறாகலாம். இம்முறையால் பலரது காலமும் பணமும் விரயமாக வாய்ப்புண்டு. ஆனால், உயர்ந்த பதவிகளுக்கு நியமனம் செய்யும்போது நேர்முகத் தேர்வை கட்டாயமாக்கலாம்.

வி.எஸ். கணேசன், சென்னை.
அவசியமான ஒன்று

அரசுப் பணி என்பது மக்களுடன் தொடர்புடைய பணி என்பதால், அரசு ஊழியரின் பேச்சுத் திறனும் சிறப்பானதாக இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வை துல்லியமான முறையில் மதிப்பீடு செய்வது சிரமமானது. அரசுப் பணியாளர்களை தேர்வு செய்வதில் நேர்முகத் தேர்வு அவசியமானதென்றாலும், நடைமுறையில் அது பெருமளவு தவறாகப் பயன்படுத்தப்பட்டு ஊழலுக்கு வழிவகுப்பதால் மத்திய அரசின் இந்த முடிவு சரியானதே.
டி. பஷீருத்தீன், பேரணாம்பட்டு.
திறந்த மனதுடன்..

நேர்முகத் தேர்வு தேவையில்லை என்ற அரசின் அறிவிப்பு பாராட்டத்தக்கது. அத்தகைய தேர்வுக்கு எழுத்துத் தேர்வு மட்டுமே போதுமானது. எப்போதும் நேர்முகத் தேர்வை நடத்துபவர்கள் நேர்மையாக இருப்பார்கள் என நம்ப முடியாது. பணம், பதவி, ஜாதி போன்ற கூறுகள் அங்கே தலைகாட்டலாம். இது இல்லாதவர்கள் பல நேரங்களில் திறமை இருந்தும் வேலை கிடைக்காத நிலைதான் இருந்து வருகிறது. ஆகவே, இந்த அறிவிப்பு ஏராளமான இளைஞர்களுக்கு நன்மை பயக்கும்.

ஞானமகன், ஆரப்பள்ளம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.