Wednesday, November 11, 2015

சினிமாவை வெறுக்க வேண்டாம்! -குங்குமத்திற்காக வேல. ராமமூர்த்தி




கோடம்பாக்கத்தைச் சுற்றி ஆளாளுக்கு வாய்ப்புக்காக அலை பாயும்போது, எழுத்தாளர் வேல ராமமூர்த்திக்கு கிடைத்திருக்கிறது சினிமா அட்மிஷன்! ‘குற்றப் பரம்பரை’, ‘பட்டத்து யானை’ என இரண்டு புகழ்பெற்ற நாவல்களும், ‘ஆதி ஆயுதம்’, ‘வேட்டை’, ‘வேல ராமமூர்த்தி கதைகள்’, ‘மீளும் றெக்கை’ என நீளும் சிறுகதைத் தொகுப்புப் பட்டியலும் வேல ராமமூர்த்தியின் பெயர் சொல்லும். அலாதியான மிடுக்கும், லேசாக முறுக்கிய மீசையுமாக இருக்கும் ராமமூர்த்தியிடம் பேசினால் கிடைக்கிறது நீண்ட வரலாறு! 

‘‘என் சொந்த ஊர், ராமநாத புரத்தின் தென்கோடி கிராமம், பெருநாழி. முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட கிராமம். எந்த வளமும் இல்லாத பகுதி. ஆதிக்க சாதிகள் வேரூன்றியிருக்கும். நானே நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தவன்தான். என் குடும்பத்திலிருந்து அந்நியப்பட்டு பிற சாதியினரோடு நெருக்கமாகவே இருந்தேன். கிளை நூலகம்தான் என் போதி மரம். செகாவ், புஷ்கின், மாப்பசான், கேசவ்தேவ், தகழின்னு பலரையும் படிச்சு வளர்ந்தவன். கொஞ்ச வருஷம் மிலிட்டரியில் சேர்ந்து உழைத்த பிறகு கிராமத்திற்கே திரும்பிட்டேன். அப்புறம் வீதி நாடகங்கள். நானே ‘கருவக்காட்டு கலைக்குழு’ என நாடகக் குழு நடத்தினேன்.

அடக்கி அடக்கி வைக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவானது எனது எழுத்து. என் இனத்திற்கு எதிரான கதையைக்கூட என்னால் எழுத முடிந்தது. என்னுடைய எழுத்தை வெறும் கலைநயத்தோடு சொல்லி வெளியேறாமல், தீர்வுகளையும் முன்வைத்தேன். சினிமாவிற்கும் எனக்கும் தொடர்பே இல்லை. ஆனால், கவனித்தபடி இருந்தேன். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தயாரிக்கும், ‘மதயானை கூட்ட’த்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் என் கதைகளின் மிகப்பெரிய ரசிகராக இருந்திருக்கிறார். தனது படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தை விளக்கி, ‘நீங்கள் அதற்கு உயிர்தர இயலும்’ என்றார். அவர் விருப்பத்திற்கு ஒரு கட்டத்தில் தலை சாய்த்தேன்.

சினிமா விளையாட்டில்லை. அது வேறு ஒரு உலகம். டப்பிங் பேசும்போது சினிமா மீடியத்தின் பெரும் வீரியம் தெரிந்தது. சினிமா வெறுத்து ஒதுக்க வேண்டிய பகுதியில்லை. எல்லோரையும் அரவணைக்கக் காத்திருக்கிறது சினிமா. படம் முழுக்க என் மேல் தாங்கி நிற்கிறது. அங்கே தெரிந்தது வேல ராமமூர்த்தி அல்ல. வீரத்தேவன்!



‘இந்த வயதில் நடிக்கப் போகணுமா?’ என வீட்டில் கேட்கிறார்கள். அவர்களுக்கு என் படம் பதில் சொல்லட்டும் என தட்டிக் கொடுத்துவிட்டு ஷூட்டிங் புறப்படுகிறேன். மகள் ராதிகாவும் மகன்கள் ராஜ்மோகனும், நாகராஜனும் ‘எப்படியப்பா கேரக்டர்?’ எனக் கேட்கிறார்கள். ‘கொஞ்சம் பொறுங்கள்’ எனப் புன்னகைக்கிறேன். என் மனைவி காளியம்மாளுக்கு கொஞ்சம் பயமாகக் கூட இருக்கிறது. 60 வயதுக்குப் பிறகாவது ஆற அமர நம் பக்கம் இருப்பார் என்று நினைத்தவளுக்கு, நான் ஷூட்டிங் போவது ஆச்சரியம். நான் நடித்த பகுதிகளை போட்டுக் காண்பித்தார்கள். ரொம்ப நாளைக்குப் பிறகு மனசுக்குப் பிடித்த மனுஷனைப் பார்த்தா காரணமில்லாம அழுகை வர்ற மாதிரி... ஒரு பரவசம் வந்தது. சினிமா இப்போ எல்லோருக்கும் கதவு திறந்து விட்டிருக்கிறது.

என் நடிப்பைக் கேள்விப்பட்டு நடிகர் விஜய்சேதுபதி அவரோட ‘சங்குத்தேவன்’ல முக்கிய வேடத்திற்கு அழைத்திருக்கிறார். ஒப்புக்கொண்டு இருக்கிறேன். ஒரு கலைஞனா என்னோட ஏக்கம், எப்பவும் மனுஷத்தன்மை போயிடக்கூடாது. ரசனை கெட்டுப் போய்விடக் கூடாது. அவ்வளவுதான்’’ - கம்பீரம் தெறிக்கும் பேச்சில் விடை தருகிறார் வேல ராமமூர்த்தி.
- நா.கதிர்வேலன்

0 comments:

Post a Comment

Kindly post a comment.