Friday, November 6, 2015

ஆம் ஆத்மி விமானம்


னிதகுலத்தின் வாழ்க்கையில் ஆதிகாலம் முதல் போக்குவரத்து என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கை யிலும் பின்னிப்பிணைந்ததாக உள்ளது. கால்நடையாகவே எங்கும் சென்றுவந்த மனிதன், தொடர்ந்து மாட்டுவண்டி, குதிரை வண்டியில் சென்று, பின்பு ரெயில், பஸ் என்று 
தன் பயணத்துக்கு பயன்படுத்தி வந்தான். இதுபோல, கடலைத் தாண்டுவதற்கு கப்பலை கண்டுபிடித்தான். எந்த பயணத்தை மேற்கொண்டாலும் வேகம் வேகம் மேஜிக் ஜர்னி என்பதையே குறிக்கோளாக கொண்டவர்களுக்கு, விமானம் கைகொடுத்து வந்தது. ஆனால், விமானக்கட்டணம் என்பது பணக்காரர்களுக்குத்தான் முடியும், சாதாரண ஏழை–எளிய, நடுத்தர மக்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத எட்டாக்கனியாகவே இருந்தது. வானத்தில் பறக்கும் விமானத்தை பார்க்கத்தான் முடியும், அல்லது உல்லாச பயணமாக நகர்ப்புறங்களுக்கு வரும்போது பார்க்கும் ஒரு இடம் விமான நிலையமாக இருக்கும் பட்சத்தில், அங்கு போய் பார்த்துக்கொள்ளலாம் என்ற நிலைதான் இருந்தது. இப்போது குறைந்த விமான கட்டணம் வந்தபிறகு, நடுத்தர மக்களும் வழக்கமான பயணங்களுக்கு என்று இல்லாமல், ஆத்திர அவசரத்துக்கு பயன்படுத்தும் வாகனமாக விமானப்பயணம் மாறிவிட்டது. 

பா.ஜ.க. அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதில் இருந்து, பிரதமர் மோடி ‘ஆம் ஆத்மி’ என்று சொல்லப்படும் ஏழை மக்களைச் சுற்றியே திட்டங்கள் செல்லவேண்டும் என்று கூறிவருகிறார். இப்போது ‘ஆம் ஆத்மி’க்களும் விமானப்பயணத்தை மேற்கொள்ளும் வகையில், விமானக் கொள்கையை மத்திய அரசாங்கம் உருவாக்குகிறது. புதிதாக அறிவிக்கப்பட இருக்கும் விமானக் கொள்கைக்காக 15 அம்சங்கள் கொண்ட நகல் கொள்கை அனைவருடைய கருத்துக்களையும் கேட்டு, இறுதியாக்கப்படுவதற்காக வெளியிடப்பட்டுள்ளது. இதில் முக்கிய அம்சம் சாதாரண மக்களுக்கும் விமான கட்டணம் எட்டும் தூரத்தில் இருக்கவேண்டும் என்பதுதான். சிறிய நகரங்களையும் விமானம் மூலம் இணைக்கவேண்டும், அதற்காக மிகக்குறைந்த அளவு தேவையான வசதிகளை மட்டும் கொண்ட விமான நிலையங்களை ஒவ்வொன்றும் ரூ.50 கோடி செலவில் உருவாக்கவேண்டும். ஒரு மணி நேரம் மட்டும் ஆகும் விமானப்பயணங்களின் கட்டணம் அதிகபட்சமாக ரூ.2,500 ஆக மட்டும் இருக்கவேண்டும், சிறிய நகரங்களை இணைக்கும் இந்த டிக்கெட்டுகளுக்கு சேவைவரி வசூலிக்கக்கூடாது என்று வரையறுக்கப் பட்டுள்ளது. இதுபோல, வசதி படைத்தவர்களும், 
சுற்றுலா பயணிகளும் ஹெலிகாப்டர் சேவையைப் பயன்படுத்த 5 ஆயிரம் அடிக்குகீழாக பறப்பதற்கு ‘ஏர் டிராபிக் கண்ட்ரோல்’ அதாவது, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் அனுமதி வாங்கவேண்டியது இல்லை, தங்கள் பயணத்திட்டத்தை தெரிவித்தால் போதும். இப்படி பல அம்சங்கள் இந்த நகல் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. அடுத்த 3 வாரங்களுக்குள் இது குறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.  

இதில் எல்லா அம்சங்களும் வரவேற்கப்படத்தக்கது என்றாலும், ஒரு மணி நேர பயணத்துக்கான கட்டணத்தை 2,500 ரூபாயில் இருந்து இன்னும் குறைக்க பரிந்துரைக்கலாம். ஏனெனில், இப்போதே சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, கோயம்புத்தூர், பெங்களூரு போன்ற பல இடங்களுக்கு குறைந்த கட்டண விமானங்களில் சிறிது நாட்களுக்கு முன்போ, கூட்டம் இல்லாத நேரங்களிலோ  டிக்கெட்டு பதிவு செய்தால் சில டிக்கெட்டுகள் மட்டும் ரூ.2 ஆயிரத்துக்கு கிடைக்கிறது. ஆனால், இந்த டிக்கெட்டு கட்டணம் தீபாவளி போன்ற நேரங்களில் மதுரைக்கு ரூ.8 ஆயிரம் வரை போய்விடுகிறது. அந்த வகையில் பார்த்தால், இந்த ரூ.2,500 அதிகபட்ச கட்டணம்தான் என்றாலும், ‘ஆம் ஆத்மி’க்கு பயன்தர இன்னும் கொஞ்சம் குறைக்கலாம். இதுபோல, சுகாதாரத்துறையும், காவல்துறையும், ஏர் ஆம்புலன்சு ஹெலிகாப்டர்களை அவசர நேரத்தில் பயன்படுத்த பரிசீலிக்கவேண்டும்.

நன்றி :- தினத்தந்தி

0 comments:

Post a Comment

Kindly post a comment.