Monday, November 23, 2015

புலம்பெயர் அமைப்புகள் மீதான 'தடை நீக்கம்': நல்லிணக்க செய்தியா?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின்போது தடைசெய்யப்பட்டிருந்த பல புலம்பெயர் தமிழர் அமைப்புகளையும் பல தனிநபர்களையும், புதிய அரசாங்கம் தடைப் பட்டியலிலிருந்து நீக்குவதாக வெள்ளியன்று இரவு அறிவித்திருந்தது.
'8 அமைப்புகளுக்கும் 267 நபர்களுக்கும்' எதிரான தடையை நியாயப்படுத்தக்கூடிய ஆதாரங்களோ புலனாய்வுத் தகவல்களோ இல்லை என்று தமது ஆய்வுகளுக்குப் பின்னர் முடிவு செய்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்திருந்தது.
ஆனால், மேலும் 8 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அடங்கலாக பிரிவினைவாதத்தை ஆதரிக்கின்ற குழுக்களும் 157 தனிநபர்களும் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டிருப்பார்கள் என்றும் இலங்கை அரசாங்கம் கூறுகின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உள்ளிட்ட அமைப்புகளே தொடர்ந்தும் இலங்கை அரசின் தடைப்பட்டியலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை விரைவுபடுத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளுக்கு, புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மீதான தடைப் பட்டியலை மீள் பரிசீலனை செய்வது முக்கியமானது என்று வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இப்போது தடை நீக்கப்பட்டுள்ள அமைப்புகளின் பட்டியலில் உலகத் தமிழர் பேரவையும் உள்ளது.
புலம்பெயர் தமிழர் அமைப்புகளை தடைசெய்யும் கடந்த அரசாங்கத்தின் பட்டியலும் இப்போதைய புதிய அரசாங்கத்தின் பட்டியலும், அமைப்புகளையும் தனிநபர்களையும் தடைசெய்வது தொடர்பான ஐநா பிரேரணையின் நிபந்தனைகளுக்கு அமைவாக அமையவில்லை என்று உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
தமது அமைப்பின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதை நல்லதொரு முன்னேற்றம் என்றும் சுரேந்திரன் கூறினார்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் தமிழர்களின் உதவிகளை அளிப்பதற்கு இந்த தடைநீக்கம் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
சுரேன் சுரேந்திரன் அளித்த செவ்வியின் முழுமையான ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.