Wednesday, November 11, 2015

சோனாகாச்சி பாலியல் தொழிலாளர்களுக்கு எய்ட்ஸ் தடுப்பு மருந்து திட்டம் அறிமுகம்

படம்: விவேக் பேந்த்ரே


படம்: விவேக் பேந்த்ரே


எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட நபர்களோடு, பாலியல் ரீதியான தொடர்பில் இருக்கும் எச்.ஐ.வி இல்லாத பாலியல் தொழிலாளர்களுக்கு எய்ட்ஸ் பரவாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நோய்த் தடுப்பு மருந்து தொடர்ந்து வழங்கப்படும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய சிவப்பு விளக்குப் பகுதிகளில் ஒன்றான கல்கத்தாவின் சோனாகாச்சி மாவட்டத்தில்தான் இத்திட்டம் சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே முதல்முறையாக எச்.ஐ.வி க்கான முன்னெச்சரிக்கை மருந்து, சோனாகாச்சி மாவட்டத்தில் அடுத்த மாதத்தில் இருந்து வழங்கப்பட உள்ளது.

தேசிய எய்ட்ஸ் நோய்த் தடுப்பு அமைப்பு மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ள இந்த செயலாக்கத் திட்டம் டிசம்பரில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலியல் தொழிலாளர்களின் நலத்துக்கான சமூக நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த அலுவலர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

தொண்டு நிறுவனமான சோனாகாச்சி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 1,30,000 பாலியல் தொழிலாளர்களைக் கொண்ட தர்பார் மகிளா சமன்வாயா குழுவில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்நிறுவன முதல்வர் சமர்ஜித் ஜானா இத்திட்டம் குறித்து, "எச்.ஐ.வி தொற்றில் இருந்து பாலியல் தொழிலாளர்களை பாதுகாக்கவே இம்மருந்து தயாரிக்கப்பட்டிருக்கிறது. சோனாகாச்சியில் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், எச்.ஐ.வி இல்லாத தொழிலாளர்களுக்கும் ஆய்வைத் தொடங்கிவிட்டோம். இது டிசம்பரில் தொடங்கப்படும் என்று நம்புகிறோம்.

பொதுவாக எச்.ஐ.வி தொற்றிலிருந்து பாதுகாக்க ஆணுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் வாடிக்கையாளர்கள் அடிக்கடி அதைப் பயன்படுத்துவதில்லை. சில நேரங்களில் முறையற்ற ஆணுறைகளால் வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை தடுப்பு மருந்துகளை தினமும் எடுத்துக்கொள்வதன் மூலம், எச்.ஐ.வி தொற்றிலிருந்து முற்றிலுமாகத் தப்பிக்க முடியும். இச்செயல்திட்டம் இரண்டு வருடத்துக்கு ஒரு முறை செயல்படுத்தப்படும்" என்றார்.

மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை, இந்த செயல்திட்டத்துக்கு நிதி உதவி செய்யும். இத்திட்டத்தில் பணிபுரியும் மருத்துவர் பிரோதிம் ரெட்டி, ஏற்கனவே பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.

இந்த மருந்தின் மூலம் 60 முதல் 70 சதவீத அபாயம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய எய்ட்ஸ் நிறுவனத்தின் முதல்வர் ஐஎஸ் கிலடா இது குறித்து பேசும்போது, "இச்செயல்திட்டம், அதிகளவில் எய்ட்ஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பவர்களுக்கு நிச்சயம் உதவும். அரசு ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்கிறது. இத்திட்டம், எய்ட்ஸை தடுக்கும் வகையில், விரைவில் சட்டமாக இயற்றப்படும். எய்ட்ஸ் நோய்க்கான முன்னெச்சரிக்கைக் தடுப்பு மருந்து குறைந்த விலையில் கிடைக்கவும் வழிவகை செய்யப்படும்.

சோனாகாச்சியில் 20,000 பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர், இதில் எச்.ஐ.வியால் பாதிக்கப்படாத 1000 தொழிலாளர்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம். எய்ட்ஸ் நோய்க்கான முன்னெச்சரிக்கைத் தடுப்பு மருந்தின் பலனை எடுத்துச் சொல்வதற்காக, ஆலோசனை வகுப்புகள் எடுக்கப்படும். இப்பொழுது விழிப்புணர்வுப் பேரணி நடந்து கொண்டிருக்கிறது.

வெளிநாடுகளில் வெற்றிகரமாக இயங்கும் ஆணுறைகளோடு வழங்கப்படும் முன்னெச்சரிக்கை மருந்துத் திட்டத்தை இந்திய சமுதாயத்தினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம்" என்றார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்களின் ரத்த மாதிரிகள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதிக்கப்பட்டு, அவர்களின் எச்.ஐ.வி நிலை கண்டறியப்படும். பரிசோதனை முடிவுகள் தொகுக்கப்பட்டு, இரண்டாம் வருடத்தின் முடிவில் அறிக்கை வெளியிடப்படும்.

Keywords: கொல்கத்தா, பாலியல் தொழிலாளர், எய்ட்ஸ், முன்னெச்சரிக்கை, நோய்த் தடுப்பு மருந்து

செய்தி :- தி இந்து









0 comments:

Post a Comment

Kindly post a comment.