Tuesday, November 17, 2015

சித்தூர் மேயர் அனுராதா சுட்டுக் கொலை; கணவர் படுகாயம்

படுகொலை செய்யப்பட்ட சித்தூர் மேயர் அனுராதா | கோப்புப் படம்

சித்தூர் மேயர் கட்டாரி அனுராதா மற்றும் அவரது கணவர் கட்டாரி மோகன் ஆகியோரை மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தியதில் மேயர் அனுராதா கொல்லப்பட்டார்.

அனுராதாவின் கணவர் கட்டாரி மோகன் படுகாயத்துடன் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை பலனளித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆந்திர மாநிலம் சித்தூர் நகராட்சி மேயர் அனுராதா. இவரது கணவர் கட்டாரி மோகன் தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்தவர். இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மேயர் அனுராதா அலுவலகத்தில் நுழைந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அனுராதா மற்றும் அவரது கணவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு கத்தியாலும் குத்திவிட்டுத் தப்பிச் சென்றனர். 

இதில் தலையில் பலத்த காயமடைந்த மேயர் அனுராதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவர் கட்டாரி மோகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முதலில் சித்தூர் பொதுமருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர், இதில் அனுராதா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கணவர் மோகன் கட்டாரியின் நிலை மோசமடைய அவரை வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பலனளித்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, "முதற்கட்ட தகவலின்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் சித்தூர் நகராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் மூவர் அனுராதாவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். கத்தியாலும் குத்தியுள்ளனர். இதில் அனுராதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

பின்னர் அவரது கணவர் கட்டாரி மோகனையும் கத்தியால் குத்தியுள்ளனர். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

சம்பவ இடத்திலிருந்து குற்றவாளிகள் தப்பினர். சிறிது நேரத்துக்குப் பின்னர் சித்தூர் ஐ டவுன் போலீஸில் இருவர் சரணடைந்தனர். ஆனால், அவர்கள் இருவரும் கொலையாளிகளா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை சம்பவம் நடந்ததா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். 

பதற்றமான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். படுகொலையில் ஈடுபட்டவர்களில் இருவர் பர்தா அணிந்திருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்" என்றனர். 

கொலை முயற்சி வழக்கு:

கொல்லப்பட்ட மேயர் அனுராதாவின் கணவர், சித்தூர் முன்னாள் எம்.எல்.ஏ சி.கே.ஜெயச்சந்திர ரெட்டியை கொலை செய்ய நடந்த முயற்சி தொடர்பான வழக்கில் பிரதான குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கொலை முயற்சி சம்பவத்திலிருந்து சி.கே.பாபு தப்பித்தபோதும் அவரது மெய்க்காப்பாளர்கள் இருவர் பலியாகினர். 

இந்நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் சித்தூர் தொகுதியில் தெலுங்கு தேச வேட்பாளராக களமிறங்கிய கட்டாரி மோகன் தோல்வியடைந்தார். ஆனால், அவரது மனைவி அனுராதா மாநகராட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மேயரானார். 

கர்நாடகா கூலிப்படையா?

அனுராதாவை கொலை செய்த கும்பல் கர்நாடகத்தைச் சேர்ந்த கூலிப்படையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மொத்த 7 பேர் கொண்ட கும்பல் மேயர் அலுவலகத்துக்கு வந்துள்ளது. அதில் பர்தா அணிந்த இருவர் உட்பட மூவர் மட்டும் மேயர் அறைக்குள் செல்ல மற்ற 4 பேர் வெளியில் காத்திருந்துள்ளனர். அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

குற்றவாளிகள் தப்பிச் செல்லாமல் இருக்க கர்நாடகா, தமிழக எல்லையில் சித்தூர் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.