Friday, November 20, 2015

நம்ம உயிரு மறந்துபோயிரும்!




வெள்ளம் கடலூரைத் தத்தளிக்கவிட்டிருந்த நாட்களில் பாலச்சந்திரனைத் தேடிச் சென்றிருந்தேன். விருத்தாசலம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் தலைமைத் தீயணைப்போனாக இருக்கிறார் பாலச்சந்திரன். இந்த வெள்ளத்தில் விருத்தாசலத்துக்குப் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால், கூப்பிடு தொலைவில் இருக்கும் நெய்வேலி தொடங்கி வடலூர் வரைக்கும் சுற்றுவட்டப் பகுதிகள் யாவற்றையும் வெள்ளம் பிய்த்துப்போட்டிருக்கிறது. இது போன்ற நாட்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தூக்கமே இருப்பதில்லை.

அன்றிரவு பாலச்சந்திரனைச் சந்தித்தபோது மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது. வந்த வேகத்தில், “சார், ஒரு டீயைப் போட்டுட்டு வந்துடட்டுமா, ரொம்பப் பசியா இருக்கு’’ என்றவாறு ஓடியவர், அடுத்த ஐந்து நிமிடங்களில் நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். “இன்னையோட பத்து நாள் ஆச்சு சார், நாங்க வீட்டுக்குப் போய். தீபாவளியோட வீட்டைவிட்டு வந்தவங்கதான். உத்தரவு வந்துடுச்சு. ‘படை திரட்டும் பணி உத்தரவு’னு இதை நாங்க சொல்வோம். இந்த உத்தரவு வந்துடுச்சுன்னா, மறு உத்தரவு வர்ற வரைக்கும் யாரும் வீட்டுக்குப் போகக் கூடாது. 24 மணி நேர வேலை. வீடு திரும்ப இன்னும் எத்தனை நாள் ஆகும்னு தெரியலை. வருண பகவான் கருணை காட்டணும்.” கையை மேலே காட்டுகிறார்.

“விரும்பித்தான் இந்த வேலைக்கு வந்தீங்களா?”

“உண்மையைச் சொல்லணும்னா, இந்த வேலை கிடைச்சுது… வந்துட்டேன். பள்ளிக்கூட நாட்கள்லயே நான் நல்ல விளையாட்டுக்காரன். தீயணைப்புப் படையில ஆள் எடுக்குறாங்கன்னு தெரிஞ்ச உடனே வந்தேன். ஓட்டத்துல மொத ஆளா வந்தேன். தேறிட்டேன். ஆனா, இங்கெ வந்ததுக்கு அப்புறம் இந்த வேலை மேல ஒரு ஈடுபாடு வந்துடுச்சு. நல்லா வரைவேன். ஓவிய வாத்தியாராப் போகணும்கிற எண்ணம்கூட ஒருகாலத்துல இருந்துச்சு. இங்கெ வந்தப்புறம் எல்லாம் மாறிடுச்சு.

ராணுவம் மாரி இது ஒரு உலகம். நீச்சல், உயரம் ஏறுறது, பள்ளத்துல இறங்குறது, தீக்குள்ள ஓடுறது, பாம்பு புடிக்குறதுன்னு எல்லாத்தையும் கத்துக்கணும். எல்லாமே கூட்டுமுயற்சிதான். எந்நேரமும் மனசு முழிச்சுக்கிட்டே இருக்கும். ஒரு தீயணைப்பு வண்டில குறைச்சலா 8 பேர் இருப்போம். நிலைய அதிகாரி, உதவி அதிகாரி, தலைமைத் தீயணைப்போன், வண்டியோட்டி, தவிர நாலு தீயணைப்போன்கள்னு கணக்கு. விபத்து பெரிசா இருக்கும்னு தெரிஞ்சா, கூடுதலா ஆளைச் சேர்த்துப்போம். இதுல தலைமைத் தீயணைப்போனா இருக்குற ஆள்தான் வெளிலேர்ந்து வர்ற அழைப்புகளைக் கேட்குறது.

ஒரு இடத்துல விபத்துன்னு போன் வந்துச்சுன்னா, பேசுறவர் பேரு, சம்பவம் நடந்த ஊரு பேரு, தெரு பேரு, வண்டி வர வேண்டிய பாதை இந்த விவரங்களை மட்டும்தான் கேட்போம். இதுக்கு எடையிலேயே மணியை அழுத்திடுவோம். இங்கெ வெளியே இருக்குது பாத்தீங்களா, அந்த மணி அடிக்கும். அடுத்த 16 நொடில இந்த வண்டி கெளம்பிருக்கணும். மணி அடிச்சா எங்கே போறோம், என்ன பிரச்சினைங்கிறதுகூட மத்த யாருக்கும் தெரியாது. மணி அடிச்ச வேகத்துல சரசரன்னு வண்டில ஆளுங்க ஏறியிருக்கும். ரோடு எப்படியிருந்தாலும் சரி, நிமிஷத்துக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தையாவது வண்டி கடந்துருக்கணும். இப்படியெல்லாம் வேகமா போனாக்கூட பல சமயம் நெருப்பு கொஞ்சமாச்சும் தன் வேலையைக் காட்டிரும்.

எங்க வண்டி தோராயமா அஞ்சாயிரம் லிட்டர் தண்ணி கொள்ளும். வண்டில மொத்தம் 16 ஓஸ் இருக்கும். அம்பது அடி நீளம், நூறு அடி நீளம்னு ஒவ்வொண்ணும் ஒவ்வொரு நீளத்துல இருக்கும். ஒரே ஓஸை வெச்சு தண்ணியை அடிச்சா ஒரு மணி நேரம் அடிக்கலாம். ரெண்டு ஓஸ்னா அரை மணி நேரம், நாலு ஓஸ்னா கால் மணி நேரம்னு தோராயக் கணக்கு. தீப் பிடிச்சுருக்குற எடத்தைப் பொருத்துப் பயன்படுத்துவோம். வண்டியோட்டி, சம்பவ எடத்துக்குப் போய் வண்டியை நிறுத்தினதும் அவரு தண்ணிக் கண்காணிப்பாளரா மாறிடுவாரு. ‘அண்ணே, இன்னும் அரைத் தொட்டித் தண்ணிதான் இருக்கு. கால் மணி நேரத்துக்குத்தான் வரும்’னு அவர் கொடுக்குற குரலை வெச்சுதான் நெலமைக்கேத்தவாறு தண்ணியை அடிப்போம்.”

“ஒருவேளை, முழுத் தண்ணி தீர்ந்தும் தீ அணையலைன்னா என்ன செய்வீங்க?”

“கொஞ்சம் முன்கூட்டியே பக்கத்துல இருக்குற நிலையத்துக்குத் தகவல் கொடுத்துருவோம். நாங்க முடிக்கவும் அவங்க வரவும் சரியா இருக்கும். சில சமயம் எதிர்பார்த்ததைவிடத் தீ பெரிசா இருக்கும். அப்போ ஒண்ணுக்கு மூணு ஓஸைப் பயன்படுத்தித் தண்ணியை அடிப்போம். தண்ணி சீக்கிரம் தீர்ந்திரும். பதறிக்கிட்டு அடுத்த நடைக்கு வண்டியைக் கெளப்புவோம். என்ன கொடுமைன்னா, அப்போதான் கூடி நிக்கிற கூட்டத்துல யாராச்சும் ஒருத்தர் கெளப்பிவிடுவார்.

‘தண்ணியைக் கொஞ்சமா எடுத்துக்கிட்டு வந்துட்டானுக’ன்னு. ஒட்டுமொத்தக் கூட்டமும் அடிக்க வரும். தலையிலயே அடிச்சுக்கிட்டு, ‘வழி விடுங்கய்யா’ன்னு கெஞ்சி கெளம்புவோம்.

தீயைப் பார்க்குறப்பதான்னு இல்ல; வெள்ளத்தைப் பார்க்குறப்ப; பள்ளத்துல வுழுந்து கதறுற ஆடுமாடுங்களைப் பார்க்குறப்ப, வீட்டுக்குள்ள புகுந்து நிக்குற பாம்பைப் பாக்குறப்ப உடம்புக்குள்ள எதோ ஒரு சக்தி தானா புகுந்துக்கும். ‘அய்யா, ஓடி வாங்கய்யா, காப்பாதுங்க’ன்னு குரல் கேட்குறப்போலாம் ஒடம்பு சிலிர்த்துக்கும். அப்போ நம்ம உயிரு மறந்துபோயிரும். எத்தனையோ தடவை சுத்திலும் கொழுந்துவிட்டு எரியுற தீக்கு நடுவுல நின்னுருக்கேன். அடிச்சிக்கிட்டு வர்ற தண்ணிக்கு மத்தில நின்னுருக்கேன். வீடு போய்ச் சேருவோமானு தெரியாத சூழல்லகூட வீட்டு நெனைப்பு வராது; மீட்ட உயிர் முழுசா தேறணுமேன்னுதான் மனசு அடிச்சிக்கும். இப்போ மூணு நாளைக்கு முன்னாடி, வடக்கு வெள்ளூர் போனப்போ எங்க வண்டியே வெள்ளத்துல முக்காவாசி மூழ்கிப்போச்சு. நாளெல்லாம் கிடந்து அறுபது பேரைக் காப்பாத்திக் கரை சேர்த்தோம். திரும்பும்போது மனசு தெம்பா இருந்துச்சு. ஆனா, ஒரு உயிரைக் கண்ணுக்கு முன்னாடி விட்டுட்டோம்னா, பத்து நாளைக்குச் சோறு, தூக்கம் போயிரும்.”

“மனசளவுல உங்களுக்குப் பெரிய கஷ்டம் தரக் கூடியது எது?”

“தீயில ஆளுங்களைக் காப்பாத்திட்டாலும்கூடப் பல சமயங்கள்ல அவங்களோட உடமை எல்லாமே நாச மாயிடும். அதுவும் இல்லாதப்பட்டதுங்க அடிச்சிக்கிட்டு அழற அழுகை இருக்கே, சகிக்காது. அதே மாரி சின்னப் புள்ளைங்களோட சாவு சகிச்சுக்கவே முடியாதது.”

“உங்க வீட்டுல இருக்குறவங்க இந்த ஆபத்தை எல்லாம் எப்படிப் பார்ப்பாங்க?”

“அதை ஏன் கேட்குறீங்க, மொதல்ல எங்களுக்குப் பொண்ணு கொடுக்கவே ரொம்பத் தயங்குவாங்க. ஏதோ துணிஞ்சு வர்ற பொண்ணுங்கதான் எங்களுக்கு வாழ்க்கை தர்றாங்கன்னு சொல்லுணும். அப்புறம் இந்த ஞாயித்துக்கிழமை விடுமுறை, பண்டிகை விடுமுறைன்னு மத்த அரசாங்க வேலையோட சவுரியம்லாமும் எங்க உத்யோகத்துல கெடையாது. வாரத்துக்கு ஒரு நாள் சுழற்சியில விடுமுறை கெடைக்கும், வருஷத்துக்கு 35 நாள் விடுப்பு உண்டுன்னாலும், ஆள் பற்றாக்குறையால எடுக்க முடியாது. அப்புறம் நல்ல நாள், கெட்ட நாள் போக முடியாது. எங்க மாமனார் சாவுக்கே என்னால போக முடியலை. வீட்டுல என்ன கோபம் பொங்கியிருக்கும்னு சொல்லணுமா? ஆனாலும் பழகிட்டாங்க.

வெளிநாடுகள்ல நல்ல சம்பளத்தோடு, நிறையப் பணிப் பாதுகாப்புச் சூழலும் இந்த வேலைல உண்டு. இங்கே பெரிய சம்பளம் இந்த வேலைல கெடையாது. நான் வேலைக்குச் சேர்ந்தப்போ வாத்தியார் உத்தியோகத்தைவிட இதுல சம்பளம் ஜாஸ்தி. இன்னைக்குத் தலைகீழ. இன்னும் ஆறு மாசத்துல எனக்குப் பணி ஓய்வு வந்துடும். ஆனா, 32 வருஷத்துல இப்பதான் முப்பதாயிரத்தைப் பாக்குறேன். இதுவரைக்கும் ஒரே ஒரு தடவதான் பணி உயர்வு கெடைச்சிருக்கு. இதெல்லாம் இந்தத் துறையோட சாபக்கேடு. இப்பம்கூட திருவண்ணாமல மாவட்டத்துல சதீஷ்னு ஒரு வீரர் தலையில பலத்த அடிபட்டு, ஆஸ்பத்திரியில சேத்துருக்காங்க. 15 லட்சம் ஆகுமாம் காப்பாத்த. நாங்க ஆளுக்கு ஆயிரம் ரெண்டாயிரம்னு போட்டு அனுப்பிருக்கோம். இந்தத் தியாகங்களெல்லாம் உலகத்துக்குத் தெரியாது. ஆனா, எல்லாத்தையும் தாண்டி சாவுகிட்டேயிருந்து உயிர இழுத்துக் காப்பாத்துற வேலைல கெடைக்குற திருப்தி இருக்கே, அது எதுல கெடைக்கும்?”

அவர் கைகளைப் பிடித்துக் கும்பிட்டுவிட்டுப் புறப்பட்டேன்.

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

Keywords: மனிதர்கள், தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணிகள்

நன்றி : தி  இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.