Friday, November 20, 2015

" கள் " என்ற இரு எழுத்துக்கள் தீர்ப்பில் இடம்பெற்றதால் விடுதலையான குற்றவாளி !




பாலியல் குற்றவாளிக்கு எதிராக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த தடுப்புக் காவல் உத்தரவில் 'வழக்கு' என்ற வார்த்தைக்கு பதிலாக 'வழக்குகள்' எனக் குறிப்பிடப்பட்டிருந்ததால் ஆட்சியர் உத்தரவையே ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும், இத்தீர்ப்பை ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டு தடுப்புக் காவல் உத்தரவுகளை பிறப்பிக்கும்போது மாவட்ட ஆட்சியர்களும், மாநகர போலீஸ் ஆணையர்களும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொடைக்கானலில் 14 வயது தலித் சிறுமியை எச்.சிவா என்ற சொக்கநாதனும் அவரது நண்பரும் பல முறை பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இந்தப் புகாரின் பேரில் சிவா கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி அவர் திண்டுக்கல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு கடந்த ஜூன் 7-ம் தேதியன்று நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த ஜூன் 7-ல் பிறப்பித்த உத்தரவில் சிவாவை தடுப்புக் காவலில் கைது செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், சிவாவின் தாயார் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் பி.ஆர்.சிவகுமார், வி.எஸ்.ரவி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

திண்டுக்கல் ஆட்சியர் பிறப்பித்த தடுப்புக் காவல் உத்தரவை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், "எஸ்.சிவா என்ற சொக்கநாதன் (28), மீது கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலையத்துல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2012-ன் கீழும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 1989-ன் கீழும் வழக்கு பதிவாகியிருக்கிறது என சரியாக சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இருப்பினும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த தடுப்புக் காவல் உத்தரவில், சிவா மீதான பாலியல் வழக்கு பற்றி குறிப்பிடும்போது வழக்கு என்ற வார்த்தைக்கு பதிலாக வழக்குகள் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். இதன்மூலம் சிவா ஜாமீன் பெறுவதற்கான வாய்ப்புகளை அவர் முடக்கியிருக்கிறார்.

குற்றவாளியின் மீது ஒரே ஒரு வழக்கு இருக்கும் போது அதை வழக்குகள் எனக் குறிப்பிட்டுள்ளார். தடுப்புக் காவல் உத்தரவை பிறப்பிக்கும்போது முழுக் கவனம் செலுத்தாமல் இயந்திரத்தனமாக செயல்பட்டதால் மாவட்ட ஆட்சியர் உத்தரவை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது" என்றனர்.

Keywords: மதுரை உயர் நீதிமன்றம், தடுப்புக் காவல் உத்தரவு, பாலியல் குற்றவாளி

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.