Thursday, November 19, 2015

நதிநீர் இணைப்பு :- எல்லாம் பேச்சிலும் எழுத்திலும் தானே தொடர்கின்றது ?

நீர்வழிப் பாதைகள் மூலம் நதிகளை இணைக்கலாம்: பேராசிரியர் ஏ.சி.காமராஜ் கருத்து

நீர்வழிப் பாதைகளை உருவாக்குவதன் மூலம் நதிகளை எளிதாக இணைக்கலாம் என்கிறார் ‘நவாட் டெக்’ என்ற அமைப்பின் தலைவரான பேராசிரியர் ஏ.சி.காமராஜ். நதிகள் இணைப்புக்கான இந்திய அரசின் உயர் மட்டக் குழுவிலும் இவர் உறுப்பினராக உள்ளார். நீர் வழிப் பாதைகளை உருவாக்குவது தொடர்பான திட்ட அறிக்கையை ‘நவாட் டெக்’ உருவாக்கியுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’வுக்கு காமராஜ் அளித்த சிறப்புப் பேட்டி:

நீர்வழிப் பாதை என்றால் என்ன?

பொதுவாக மேடான பகுதியில் இருந்து பள்ளத்தை நோக்கியே தண்ணீர் செல்லும். அதற்கேற்பவே கால்வாய்களும் உள்ளன. அப்படி இல்லாமல், தரைப்பகுதி ஒரே கிடைமட்டமாக இருக்கும்படி கால் வாய் அமைத்தால் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு தண்ணீரை கொண்டு செல்லலாம். இதை சமவெளி கால்வாய் என்று அழைக்கிறோம்.

கடல் மட்டத்திலிருந்து கால்வாய் நெடுகிலும் சம உயரத்தில் இருக்கும். ஏற்ற, இறக்கங்கள் இல்லாத சம உயரத்தைக் கொண்டதாக அதன் நீர் மட்டம் அமைந்திருக்கும். ஆகவே, சமவெளிக் கால்வாயின் ஏதேனும் ஓரிடத்தில் தண்ணீரின் அளவு அதிகரித்தால், மட்டம் குறை வாக உள்ள மற்ற பகுதிக்கு தண் ணீரை மிக எளிதாக எடுத்துச் செல் லலாம். அதாவது கோதாவரியில் வெள்ளம் ஏற்பட்டால் சமவெளிக் கால்வாய் மூலம் காவிரிக்கு அந்த வெள்ள நீரைக் கொண்டு வரலாம். காவிரியில் வெள்ளம் ஏற்பட்டால் கோதாவரிக்கும் கொண்டு செல்ல முடியும்.

நீர்வழிப் பாதை திட்டத்துக்கு மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முடியுமா?

நிச்சயமாக முடியும். ஏனெனில் நீர்வழிப் பாதையால் எல்லா மாநிலங்களுக்கும் பயன் கிடைக்கும். பருவமழை காலத்தில் வெள்ளம் ஏற்பட்டு, கடலை நோக்கிச் செல்லும் தண்ணீரை மட்டும்தான் நீர்வழிப் பாதை திட்டத்துக்கு பயன்படுத்தப் போகிறோம். இதனால் யாருக்கும் இழப்பு எதுவும் இல்லை.

கோதாவரி ஆற்றிலிருந்து மட் டுமே ஆண்டுக்கு 3 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் கடலுக்கு செல்கிறது. கோதாவரி வெள்ள நீரை மட்டுமே முறையாகப் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் ஆந்திரம், தெலங் கானா, தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங் களின் நீர்த் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும்.

இந்தியாவில் எவ்வாறு நீர்வழிச் சாலை அமைக்கப்பட வேண்டும்?

கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் அவற்றின் கிளை நதிகளை பிணைத்து 4,500 கி.மீ. நீளத்துக்கு இமயமலை நீர்வழிச் சாலையை உருவாக்க முடியும். இது கடல் மட்டத்தில் இருந்து 500 மீட்டர் உயரத்தில் அமையும்.

தெற்கு கங்கை, மகாநதி, நர்மதை, தபதி மற்றும் அவற்றின் கிளை நதிகளை பிணைத்து 5,750 கி.மீ. தொலைவுக்கு மத்திய நீர்வழிச் சாலை அமைக்கலாம். இது கடல் மட்டத்திலிருந்து 250 மீட்டர் உயரத்தில் சமச்சீர் கால்வாயாக இருக்கும்.

அதேபோல கோதாவரி, கிருஷ்ணா, காவிரி உள்ளிட்ட தென்னக நதிகளை இணைத்து தெற்கு நீர்வழிச்சாலையை 4,650 கி.மீ. தொலைவுக்கு உருவாக்கலாம். இது கடல் மட்டத்தில் இருந்து 250 மீட்டர் உயரத்தில் அமையும்.

தமிழகத்தில் நீர்வழிப் பாதையில் எந்தெந்த நதிகளை இணைக்க வாய்ப்புள்ளது?

பாலாறு, செய்யாறு, பொன் னையாறு, காவிரி, மேல் ஓடை, அமராவதி, சண்முக நதி, பாம்பாறு, வரட்டாறு, நல்லதங்கல் ஓடை, குடகனாறு, வைகை, காயுண்டன், குண்டாறு, அர்ஜூனா, தாமிரபரணி, சித்தாறு ஆகிய 17 நதிகளை நீர்வழிப் பாதை மூலம் இணைக்க முடியும்.

மேலும், கோதாவரி உள்ளிட்ட வடபகுதி ஆறுகளில் ஏற்படும் வெள்ள நீரையும் இங்கு கொண்டு வர முடியும் என்பதால் தமிழகம் முழுமைக்கும் பெரும் பயன் உண்டாகும்.

இந்தத் திட்டத்தால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன?

நீர்வழிப் பாதையால் வெள்ள சேதங்கள் குறையும். அனைத்து மக்களுக்கும் ஆண்டு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும். நாடு முழுவதும் 15 கோடி ஏக்கர் நிலம் கூடுதல் பாசன வசதியை பெறும்.

நீர்வழிப் பாதையில் நிர்மாணிக் கப்படும் நீர் மின் திட்டங் களால் 60 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய் யலாம். சுமார் 20 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்தத் திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகளின் ஆதரவு எப்படி உள்ளது?

இந்தத் திட்டம் தொடர்பான அறிக் கையை மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் சமர்ப்பித்துள்ளோம். திட்டத்தை மத்திய அரசு விரைவில் எடுத்துக் கொள்ளும் என அவர் உறுதியளித்துள்ளார். அதேபோல தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து பேசி யுள்ளோம்.

தமிழகம், ஆந்திரம், தெலங்கானா போன்ற மாநிலங்கள் கொள்கை அளவில் இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.

இவ்வாறு காமராஜ் தெரிவித்தார்.

Keywords: நதிநீர் இணைப்பு, மழை நீர் சேமிப்பு, கடல் நீர் கலப்பு, மேற்கு தொடர்ச்சி மலை நீர், ஏ.சி.காமராஜ்

நன்றி : தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.