Friday, November 6, 2015

புதிய தொழில்நுட்பத்தை அறிந்துக்கொள்ள 40 விவசாயிகளை சீனா, இஸ்ரேலுக்கு அனுப்பும் தமிழக அரசு


 புதிய தொழில்நுட்பத்தை அறிந்துக்கொள்ள 40 விவசாயிகளை சீனா, இஸ்ரேலுக்கு அனுப்பும் தமிழக அரசு




சென்னை,நவ.05 (டி.என்.எஸ்) விவசாயத் துறையினை முன்னேற்றம் அடைய வைக்கும் நோக்கத்தில், விவசாயத் துறையில் புதிய மற்றும் நவீன தொழில்நுட்பட்த்துடன், முன்னோடி நாடுகளாக விளங்கும் சீனா மற்றும் இஸ்ரேலுக்கு, 40 விவசாயிகளை தமிழக அரசு அனுப்புகிறது.

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், 110-வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா, இதற்கான அறிவிபை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் தோட்டக்கலை மற்றும் விவசாயத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள 40 பேர் தேர்வு செய்யப்பட்டு, அரசு செலவில் சீனா மற்றும் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட உள்ளார்கள்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சீனா காய்கறி சாகுபடியில் தமிழ்நாட்டை விட உற்பத்தியிலும், உற்பத்தி திறனிலும் நிறைவிலும் மிக அதிகமாக இருக்கிறது. எந்த காலத்திலும் எல்லா பழங்கள், காய்கறிகள் மகசூல் அதிகமாக கிடைக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

அவர்கள் என்ன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, எந்த முறையில் சாகுபடி செய்கிறார்கள்? என்பதை அறிந்து வர தமிழகம் முழுவதும் இருந்து காய்கறி விவசாயத்தில் தீவிரமாக ஈடுபடுபவர்களையும், அதிலும் குறிப்பாக படித்துவிட்டு இந்த விவசாயத்தில் ஈடுபடுபவர்களாக 20 விவசாயிகளை தேர்ந்தெடுத்து அரசு செலவில் சீனாவுக்கு அனுப்ப முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தண்ணீர் வளம் இல்லாத நாடு இஸ்ரேல். இங்கு கடல்நீரை குடிநீராக்கி தான் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறார்கள். ஒரு லிட்டர் தண்ணீர் இந்திய மதிப்பின்படி ரூ.252 என்றாலும், தண்ணீரை சொட்டுநீர் பாசன முறை மூலம் சிக்கனமாக பயன்படுத்தி நம்மை விட மிக உயரிய தொழில்நுட்பத்தின் மூலம் சாகுபடி முறைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஒரு புறம் பாசன நீர் சிக்கனம், மற்றொருபுறம் விளைபொருள் தரம் உயர்வு, உயரிய அறிவியல் தொழில்நுட்பத்தை விவசாயத்தில் பின்பற்றுதல் என்று மிக உயரிய நிலையில் விவசாயத்தில் உலகிற்கே ‘ரோல் மாடலாக’ திகழ்கிறார்கள்.

ஒரு ஏக்கர் நிலத்தில் தமிழ்நாட்டில் 40 மாமரங்கள் சாகுபடி செய்யப்படுகிறது என்றால், இஸ்ரேலில் 647 மாமரங்கள் வளர்கின்றன. இதுபோல நாம் 6 ஏக்கர் நிலத்துக்கு பயன்படுத்தும் தண்ணீரை இஸ்ரேலில் 10 ஏக்கர் நிலத்துக்கு சொட்டுநீர் பாசனமாக பயன்படுத்துகிறார்கள். அவர்களுடைய தொழில்நுட்பத்தை அறிந்து வருவதற்காக மேலும் 20 விவசாயிகளை அரசு செலவில் இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்ப முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த 40 விவசாயிகளும் எல்லா மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். விவசாயத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர்களாக இருக்க வேண்டும். படித்தவர்களாக இருந்தால் மிகவும் நல்லது. இவர்கள் சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் தொழில்நுட்பத்தை அறிந்து கொண்டு, தங்கள் விளைநிலங்களில் பயன்படுத்த வேண்டும். 
தங்களுடைய நிலத்தை மாதிரி பண்ணையாக அமைத்து மற்றவர்களை தெரிந்து கொள்ள செய்ய வேண்டும், தாங்கள் கற்ற தொழில்நுட்பத்தை மற்ற விவசாயிகளுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது தான் தமிழக அரசின் நோக்கமாக உள்ளது.

தேர்வு பணிகள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் மிக தீவிரமாக நடந்து வருகிறது. இதில், பாரபட்சம் இருக்கக்கூடாது. தகுதியானவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் தேர்வுகள் நடக்கிறது.

அநேகமாக ஜனவரி மாதம் இந்த 40 விவசாயிகளையும் சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு முதல்வர் ஜெயலலிதா அனுப்பி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி :-http://tamil.chennaionline.com/

0 comments:

Post a Comment

Kindly post a comment.