Wednesday, November 18, 2015

சென்னையின் 4 குடிநீர் ஏரிகள்: கொள்ளளவில் 75% நிரம்பின






பலத்த மழை காரணமாக, சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவில் 75 சதவீதமே நிரம்பியுள்ளது.

தொடர் மழையின் காரணமாக அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. 

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 1,106 கோடி கன அடியாகும். பலத்த மழை காரணமாக, இவற்றில் செவ்வாய்க்கிழமை (நவ.17) நிலவரப்படி மொத்தம் 873 கோடி கன அடி நீர் நிரம்பியுள்ளது.

படிப்படியாக உயர்வு: செம்பரம்பாக்கம், பூண்டி ஆகிய ஏரிகள் ஏற்கெனவே அவற்றின் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. இதைத் தொடர்ந்து, சோழவரம், புழல் ஆகிய ஏரிகளிலும் நீரின் அளவு படிப்படியாக உயர்ந்து வருகிறது.

பூண்டியில்..: பூண்டி ஏரியில் மொத்த நீர் கொள்ளளவு 323 கோடி கன அடியில் தற்போது 282 கோடி கன அடி நீர் உள்ளது. ஏரியிலிருந்து விநாடிக்கு 28,000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து 19,000 ஆயிரம் கன அடி நீர் ஏரியிலிருந்து வெளியேற்றப்படுகிறது. கடந்த ஆண்டின் இதே நாளில் ஏரியில் 40 கோடி அடி நீர் மட்டுமே இருந்தது.

சோழவரத்தில்..: சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 88 கோடி கன அடியாகும். இதில் 69 கோடி கன அடி நீர் உள்ளது. விநாடிக்கு 1,414 கன அடி தண்ணீர் வருகிறது. 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் 61 கோடி கன அடி தண்ணீர் இருந்தது.

செம்பரம்பாக்கத்தில்..: செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 364 கோடி கன அடியாகும். இப்போது 319 கோடி கனஅடி நீர் உள்ளது. விநாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் விநாடிக்கு 7,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 

புழல் ஏரி நிரம்பாதது ஏன்? மேற்கண்ட 3 ஏரிகளும் ஏறத்தாழ முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், பெரியதாக உள்ள புழல் ஏரி இன்னும் நிரம்பாத நிலையில் உள்ளது.

இதன் மொத்த கொள்ளளவு 330 கோடி கன அடியில், 201 கோடி கன அடி நீர் உள்ளது. கடந்த ஆண்டின் இதே நாளில் புழல் ஏரியில் 123 கோடி கன அடி தண்ணீர் மட்டுமே இருந்தது.

பிற ஏரிகளுக்கு விநாடிக்கு 15,000 கன அடி முதல் 28,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், புழல் ஏரிக்கு 4,000 கன அடி மட்டுமே தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. புழல் ஏரிக்கு வரும் கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படாதால் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.