Thursday, November 5, 2015

இன்றைய தினமணியில் விளைநிலங்களில் நகரங்களா? வலைப்பதிவில் 2011-லேயே இச்சிந்தனை பதிவாகியுள்ளது.

 ஊரில் எனது வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு கரும்புத்
தோட்டம் இருந்தது. தைப்பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பு,
பொங்கலுக்காக கரும்பு எல்லாம் அறுத்து விட்டு, வயல்
முழுவதும் தீ வைத்துக் கொளுத்திவிட்டிருந்தார்கள். பின் அந்த
வயலை உழுது விட்டு, வேறு ஏதேனும் பயிர் போடுவார்கள்.
இதுதான் வருடம்தோறும் நான் பார்ப்பது. இந்த வருடமும்
அதேபோல, கரும்பு எல்லாம் அறுத்து முடித்து,வயலை சுத்தம்
செய்திருந்தார்கள். பின்னர் பொங்கல் முடிந்து, பத்து நாட்கள்
கழித்துப் பார்த்தால், அந்த வயல் இருந்த இடம் முழுவதும்
அளந்து, ஆங்காங்கே கற்களை ஊன்றி இருந்தார்கள்.
பற்றாக்குறைக்கு, "ஸ்ரீமான் நகர்- பிளாட்டுகள் விற்பனைக்கு"
என்று போர்டு வேறு மாட்டியிருந்தது .               எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில்,
சுற்றியுள்ள அந்த ஏரியா முழுவதிலும், இந்த ஒரு இடம்தான்
வயல்வெளியாக, பசுமையாக, பம்புசெட்டுடன் குளுமையாக
இருந்தது. மற்ற இடங்கள் எல்லாம் பிளாட்டுகளாக மாறிக்
கொண்டு இருந்தன. இப்போது இந்த வயல் இருந்த இடமும்
இன்று பிளாட்டாக மாறி விட்டது. இப்படியாக விளைநிலங்கள்
எல்லாமே இன்று கட்டிடங்களாகவும், பிளாட்டுகளாகவும்
மாறிவருகின்றன.
             இன்று ரியல் எஸ்டேட் தொழில்தான் கொடிகட்டிப்
பறக்கிறது. டிவி சேனல்களில் கூட, எந்த சேனல் வைத்தாலும்,
அதில் இங்கு பிளாட்டுகள் உள்ளன, என்று நடிகர், நடிகைகளை
வைத்து விளம்பரம்தான். விவசாயம் பண்ணவேண்டும் என
நினைத்தால் கூட, இந்த ரியல் எஸ்டேட்காரர்கள், மிரட்டி
நிலத்தை வாங்கிவிடுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும் இப்போதெல்லாம் விவசாயம் செய்ய ஆள்
கிடைப்பதில்லை. விவசாய நிலங்கள் அழிந்துவருகின்றன
என்று கூறுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் இப்படி
பிளாட்டுகளாக மாறுவதும், விவசாயம் செய்ய ஆள்
கிடைக்காததும்தான். களை எடுப்பதற்கு, பூச்சி மருந்து அடிக்க
என வயல் வேலைகளுக்கு எல்லாம் இப்போது ஆட்கள்
வருவது இல்லை. சம்பளம் அதிகமாக கிடைக்கும் என,
கிராமங்களில் உள்ளவர்கள் எல்லாம் நகரங்களுக்கு, வீடு
கட்டுவதற்கும், கடைகளில் வேலை செய்யவும் சென்று
விடுகின்றனர் அல்லது வெளிநாடுகளுக்கு சென்று
விடுகின்றனர். 

               மேலும் கஷ்டப்பட்டு விவசாயம் செய்யப்படும்
பயிர்களும் வியாபாரிகளால் குறைந்த விலைக்கே
வாங்கப்படுகின்றன. இதனால் விவசாயிகளுக்குத்தான்
பெரும் நஷ்டம். பெரும்பாலும் போட்ட காசு அவர்களுக்கு
கிடைப்பதில்லை. இதனாலும் விளைநிலங்கள் இன்று
விற்கப்படுகின்றன. இன்று அரசு இதற்காக பெருமுயற்சி
எடுத்து வந்தாலும், இந்நிலை மாறவில்லை. எனது பாட்டி
ஊரில், முன்பெல்லாம் நூற்றுக்கு மேற்பட்ட குளங்கள்
இருந்தனவாம். இன்று அவை எல்லாம்  கட்டடங்களாக மாறி
வருகின்றன. குளத்தில் கட்டடம் கட்டுவதால், மழைக்
காலங்களில் கட்டடங்களைச் சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கும். 
வீடுகளில் இருப்பவர்கள் எல்லாம் நீந்தி போகிற மாதிரி
நிலைமை இருக்கும். இப்படி இயற்கைக்கு மாறாக, எல்லாம்
செய்வதால்தான இயற்கைச் சீரழிவுகளும் அதிகமாகிக்
கொண்டே வருகிறது. வேறு என்ன சொல்ல?  

http://vaarthaichithirangal.blogspot.in/2011/03/blog-post_17.html
காயத்ரி ஞானம்

2011 -இல்  வலைப்பதிவில்  எழுதப்பட்டது.

விளை நிலங்களில் நகரமா?

First Published : 05 November 2015 01:43 AM IST
ஆந்திர மாநிலத்தில் அமராவதியைத் தலைநகரமாக அமைப்பதற்காக சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களைக் கையகப்படுத்தி நகரம் அமைக்கப்படுகின்ற செய்தி அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகின்றது. 

 நாடு முழுவதும், தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் சமீப காலங்களில் விளை நிலங்களை குடியிருப்பு வசதி ஏற்படுத்தவும், தொழிற்சாலை கட்டுவதற்கும் உபயோகித்து வருகின்றனர். 

 நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயத் துறையும், தொழில் துறையும் இன்றியமையாதது. தொழில் முன்னேற்றத்தின் அவசியமும், விவசாய முன்னேற்றத்தின் அவசியமும் ஒன்றுக்கொன்று முரணானது இல்லை என்பதை நாம் என்றும் மனதில் கொள்ள வேண்டும்.

 இத்தகைய நிலையில், தொழில் வளர்ச்சிக்கோ அல்லது நகர்ப்புற வளர்ச்சிக்கோ விளை நிலங்களை உபயோகிப்பது ஒப்புக்கொள்ள முடியாத செயல். இத்தகைய அணுகுமுறை எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.

 12-ஆம் ஐந்தாண்டு திட்டத்தில், முதல் நான்கு ஆண்டுகளில் நாட்டின் விவசாய வளர்ச்சி 1.5 சதவீதம்தான். நான்கு சதவீத வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற இலக்கு எட்டப்படவில்லை. 

 குறைந்த விவசாய வளர்ச்சி விகிதத்தால், கிராமப்புற வளர்ச்சிக்கும், ஏழ்மையை அகற்றும் முயற்சிக்கும் பின்னடைவு ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது. இத்தகைய நிலையில், விவசாயத்துக்கு குந்தகம் ஏற்படுத்தக்கூடிய எந்தச் செயலிலும் அரசு ஈடுபடக் கூடாது.

 இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் பொதுவாக கவலை அளிக்கும் நிலையிலேயே உள்ளது.
 நரேந்திர மோடி அரசு, விவசாயத் தொழிலில் இந்த அளவு மக்கள் ஈடுபட வேண்டிய அவசியமில்லை என்று தனது கருத்தைக் கூறியிருக்கிறது. விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருப்போர்களின் தொகை தேவைக்கு அதிகமாக உள்ளது. அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு, கணிசமான அளவில் விவசாயிகளை வேறு தொழிலுக்கு மாற்ற வேண்டும். 

 அதற்கு அவர்களுக்கு வேறு தொழிலில் பயிற்சியும், வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் மோடி அரசு கூறி வருகிறது. மோடி அரசின் இத்தகைய அணுகுமுறையைக் குறை கூற முடியாது.

 அதேசமயம், விவசாயிகளை வேறுவிதமான வருவாய் அளிக்கக் கூடிய முறைக்கு மாற்றும் கொள்கை வேறு, விவசாய விளை நிலங்களை விவசாயம் அல்லாத தொழிலுக்கு ஈடுபடுத்துவது வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 நாட்டுக்குத் தொழில் வளர்ச்சி எந்தளவில் அவசியமோ, அதே அளவில் விவசாய வளர்ச்சியும் அவசியம் என்பதை நாம் புரிந்து கொண்டு, விவசாயத் துறை வளர்ச்சியின் தேவையைக் குறைவாக மதிப்பிடுவது போன்ற செய்கையை அரசு அறவே தவிர்க்க வேண்டும்.
 இந்தியாவில் தற்போது சுமார் 1,600 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு விவசாயம் செய்யக் கூடிய நிலம் உள்ளது. விவசாயப் பொருள்கள் ஏற்றுமதியில், அமெரிக்கா, பிரேசில், சீனா, கனடாவிற்கு பின் இந்தியா முன்னணியில் உள்ளது. 

 ஆனால், இந்தியாவில் தொழிலமைப்புகள், மின் பொருள் துறைகள் இறக்குமதி செய்யும் அளவைப் பார்க்கும் போது, விவசாயத் துறைக்கு செய்யப்படும் இறக்குமதி மிகவும் குறைவு.

 இந்தியா ஒரு விவசாயம் சார்ந்த நாடு. என்றென்றும் இந்தியா விவசாயம் சார்ந்த நாடாகத்தான் திகழும். இந்த நிலைமை நாம் பெருமைப்பட வேண்டியது. விவசாயத் துறை இந்தியாவின் முதுகெலும்பு என்பதை நாம் மறக்கக் கூடாது. 

 இந்த யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு, விவசாயத் துறைக்கு உரிய மரியாதையைக் கொடுப்பது நாட்டின் கடமை. விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு சகலவிதமான தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை. கல்லும், சிமென்ட்டும் இல்லாமலும் மக்கள் வாழ முடியும். அரிசியும், கோதுமையும் இல்லாமல் வாழ முடியாது. 

 சமீபத்தில் மோடி அரசால் அறிவிக்கப்பட்ட நிலம் கையகப்படுத்தும் மசோதா, கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியதில் ஆச்சரியமில்லை. மோடி அரசு இந்த மசோதாவைக் கைவிட்டதை விவசாயிகளின் குரலுக்கு மதிப்பு கொடுத்து செவி சாய்த்தது என்றே கொள்ள வேண்டும்.
 இன்று நாட்டில், ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளன. தொழில்சாலை அமைக்க ஏற்கெனவே நாடெங்கும் அளிக்கப்பட்ட நிலம் பெரிதளவில் உபயோகிக்கப்படாமல் வீணாகிக் கொண்டு வருகின்றன. 

 பல நலிவுற்ற, மூடிக் கிடக்கும் தொழில்சாலைகளில் பரந்த நிலப்பரப்புகள் வீணாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலங்களை தொழில்சாலை அமைக்கவும், வீட்டு வசதி ஏற்படுத்தவும் உபயோகிக்கலாம். இந்த தரிசு நிலமும், உபயோகிக்கப்படாத நிலமும் இன்றைய அவசியத்திற்குப் போதுமானவை.

 உபயோகிக்காமல் உள்ள தரிசு நிலங்களை நோக்கி தொழில்சாலையும், நகரங்களும் நகர வேண்டுமே அல்லாமல், விளை நிலத்தினை அழித்து, நகரங்களை அமைக்கவும், தொழில்சாலை அமைப்பதையும் தவிர்க்க  வேண்டும்.
நன்றி :- தினமணி
இனி ஊடகங்கள் வலைப்பதிவர்கள் கைவசம்தான்.


0 comments:

Post a Comment

Kindly post a comment.