Friday, November 20, 2015

பானகல் ராஜா வாசகசாலை ஆண்டுவிழா மேனாட்டு வாசகசாலை நிலைமை -1938

 அன்புள்ள தோழர்களே!
இன்று இங்கு பானகல் இலவச வாசகசாலையின் முதலாவது ஆண்டுவிழாவிற்குத் தலைமை வகிக்கும் பெருமையை எனக்களித்ததற்காக இதன் நிர்வாகிகளுக்கும், அங்கத்தினர்களுக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இந்த ஆண்டு விழாவிற்கு இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இவ்வூர் பிரமுகர்கள் எல்லோரும் இங்கு விஜயமாய் இருப்பதைப் பார்க்க இவ்வாசகசாலை மிகுதியும், செல்வாக்குப் பெற்றிருக்கிறது என்றே கருதுகின்றேன்.
பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்கு இம்மாதிரி வாசகசாலைகள் பெரிதும் அவசியமானதாகும். பள்ளிக்கூடங்கள் எழுத்து வாசனையையும் ஏதாவதொரு விஷயத்தில் விளக்கத்தையும் தான் உண்டாக்க உதவும். ஆனால் வாசகசாலை என்பது பொது அறிவு விளக்கத்தையும் சகல விஷயங்களிலும் ஞானத்தையும் உண்டாக்கும். நல்ல முறையில் அமைக்கப்படும் வாசகசாலையும், புத்தகசாலையும் மனிதர்களை சகல விஷயங்களிலும் ஞான பண்டிதர்களாகவும் அனுபவ ஞானமுடையவர் களாகவும் ஆக்கிவிடும். நம் நாட்டில் பொது உணர்ச்சியின்மீது ஏற்படுத்தப்படும் வாசகசாலை, புத்தகசாலை மிகக் குறைவென்றே சொல்லலாம்.
நம் நாட்டில் ஒரு புத்தகசாலை இயக்கம் இருப்பதாகவும், அதற்கு சர்க்கார் ஆதரவு கூட இருப்பதாகவும், 4,5 வருடமாக அறிந்து வருகிறேன். ஆனால் அது யாரோ ஒரு குறிப்பிட்ட நபர்களின் சுயநலத்துக்கும், சில குறிப்பிட்ட பத்திரிகை, புத்தகம் ஆகியவை விற்பனையாவதற்கும், உள் எண்ணத்திற்கும் பயன்பட்டு வருவதாக உணர்கிறேன். நம் நாட்டில் எப்படிப்பட்ட பொது நன்மையான காரியத்தையும் ஒரு சில நபர்களோ, ஒரு வகுப்போ சுவாதீனம் செய்து கொண்டு சுயநலத்திற்கே பயன்படுத்திக் கொண்டு வரப்படுகிறது. இதற்குக் காரணம் பொது மக்களுக்குக் கல்வியறிவும், பொது ஞானமும் இல்லாததேயாகும்.
மத விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பொது ஜனங்கள் பக்தி செலுத்தவும், பணம் கொடுக்கவும், அடிபணியவும், ஒரு வகுப்பார் அவற்றை கொள்ளையடிக்கவும், நலம் பெறவும்தான் பயன்படுத்தப்படுகிறதே ஒழிய மற்றபடி மதத்தால் ஒழுக்கமோ, ஞானமோ பெற முடிகிறதா என்று பாருங்கள். அது போலவே அரசியலை எடுத்துக் கொள்ளுங்கள். பொது ஜனங்கள் காசு பணம் கொடுக்கவும், ஓட்டு கொடுக்கவும், ஒரு வகுப்பார் அதனால் நலம் பெறவும், உயிர் வாழ்வு நடத்தவும், மற்ற மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும் தான் பயன்பட்டு வருகிறது. அது போலவேதான் கல்வியை எடுத்துக்கொண்டாலும் சரி, வேறு எதை எடுத்துக் கொண்டாலும் சரி அவற்றிற்காக பொது மக்கள் வரி கொடுக்க வேண்டும். கஷ்டப்பட வேண்டும். பலனை எல்லாம் ஒரு சிறு வகுப்பார் அடையவேண்டும் என்கிறதாகத்தான் இருந்து வருகிறது.
~subhead
உழைப்பு நமக்கு பலன் யாருக்கு?
~shend
கல்விக்காக செலவாகும் பணம், நேரம், உழைப்பு ஆகியவைகளை எடுத்துக் கொள்வோமேயானால் அதனால் கல்வி கற்றுக் கொடுப்பவர்கள் என்னும் கூட்டத்தார் அடையும் பலனில் 4ல் ஒன்று 8ல் ஒன்று கூட படிக்கும் மக்களுக்கோ, படிக்கச் செலவுக்கு பணம் கொடுக்கும் பெற்றோர்களுக்கோ பயன்கிடையாது. நம் கல்வித்திட்டம் பெரிதும் கற்றுக் கொடுப்பவர்கள் நன்மைக்கு ஆகவே இருந்து வருகிறது. இவற்றிற்கு எல்லாம் காரணம் பொது மக்களுக்குப் பொது ஞானம் இல்லாததேயாகும்.
புத்தகசாலை, வாசகசாலை ஆகியவைகளை வெளி நாடுகளில் நான் பார்த்து இருக்கின்றேன். ஒரு புத்தக சாலையில் 500 பேர் 600 பேர் வேலையாட்கள் இருந்து வருவதை பார்த்தேன். 3 லக்ஷம் 4 லக்ஷம் புத்தகங்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். தினம் ஒன்றுக்கு 5 ஆயிரம் 10 ஆயிரம் பேர்கள் வந்து படிப்பதும் எழுதிக்கொண்டு போவதும் புத்தகங்கள் எடுத்துக் கொண்டு போவதுமான காரியங்களை ஒரு நாள் முழுதும் இருந்து பார்த்து இருக்கிறேன்.
கிராமங்களுக்கும், மற்ற சின்ன ஊர்களுக்கும் புத்தகங்கள் வாரா வாரம் அனுப்பப்படுவதையும் திரும்பி வந்து சேருவதையும் பார்த்தால் மிக மிக ஆச்சரியமாய் இருக்கும். ரயில்வே வாகன் புத்தகாலைய முன் வாசலில் வந்து நிற்கும். அந்த ரயில் தொடர்ச்சியாகப் போய்ச் சேரும் ஊர்வரையில் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு கட்டு வீதம் பல புத்தகங்கள் கட்டப்பட்ட கட்டுகள் வாகன் நிறைய அடுக்கப்படும். தபால் கட்டுபோல் அது ஸ்டேஷன் ஸ்டேஷனுக்கு எடுத்துக் கொடுக்கப்படும். அது போலவே வரும்போது படித்து முடித்த புத்தகங்கள் கட்டுக்கட்டாய் வாங்கிவரப்படும். இந்தக் காரியம் ஒரு பெரிய இலாக்காவாக நடைபெறுகிறது.
~subhead
பத்திரிகை அபிமானம்
~shend
அதுபோலவே பத்திரிகை படிப்பதும் நடைபெறுகிறது. பத்திரிகை படிக்காத மனிதன் சமூகத்தில் கேவலப்படுத்தப்படத் தக்கவராவர். சகல கூலிக்காரர்களும், தொழிலாளிகளும் வீட்டு வேலைப் பெண்களும் தினம் 2 முறையாவது பத்திரிகை படிப்பார்கள். வீடு மெழுகும் ஒரு வேலைக்காரப் பெண் ஒரு கையில் லோஷன் நனைத்த துணியில் நிலத்தை மெழுகிக் கொண்டே, மற்றொரு கையால் பத்திரிகை படித்துக்கொண்டே இருப்பதை நான் பார்த்தேன். பத்திரிகை வினியோகிக்கப்பட்ட 2 மணி 4 மணி நேரத்துக்குள் பழைய பத்திரிகையை வாங்கும் வியாபாரி வந்து வாங்கிக் கொண்டுபோய் கடைகளுக்கு விற்றுவிடுவான். அன்றாடப் பத்திரிகையை அன்றாடமே கடையில் சாமான் மடித்துக் கொடுப்பதைப் பார்க்கலாம். அரசியல் ஞானமும் மற்றும் ஊர்ப் பொது விஷயமும் ஒவ்வொருவருக்கும் தெரியும். ஒருவரை ஒருவர் ஏமாற்றமுடியாது. இவற்றிற்கெல்லாம் காரணம் அந்த நாடுகளில் படித்த மக்கள் 100க்கு 100 பேர்களாக இருப்பதேயாகும்.
நம் நாட்டில் 100க்கு 8 பேர் 10 பேரே படித்திருக்கிறார்கள். பெண்கள் 1000க்கு 8 பேர் 10 பேரே படித்திருக்கிறார்கள். இதனால் அதிக வாசகசாலை ஏற்படவோ அதிக புத்தகசாலை ஏற்படவோ இடமில்லாமல் போனதோடு ஏற்பட்டாலும் பயன்படவோ, நிலை பெறவோ முடியாமல் போய் விடுகிறது. நம்மில் கொஞ்சம் பேரே படித்திருந்தாலும் நமக்குப் படிக்க நல்ல புத்தகங்கள் கிடையாது. தமிழ்புத்தகமெல்லாம் புராணங்களும், அவற்றிற்கு புதுப்புது உரைகளும், கருப்பொருள்களும், நுண்பொருள்களுமாகத்தான் இருக்கிறதே ஒழிய அறிவுக்கு ஏற்ற புத்தகங்கள் இல்லை. கதைப் புத்தகம், இலக்கியப் புத்தகம் என்பதும் “ஒரு ஊரில் ஒரு ராஜா, அவன் வேட்டைக்குப் போனான் அங்கொரு பெண்ணைப் பார்த்தான் காதல் கொண்டான்” என்கின்ற துவக்கமும் “காதலுக்காக உயிரை விட்டான்; கற்புக்காக உயிரை விட்டாள்” என்கிற முடிவுமல்லாமல் வேறு விஷயம் காண்பது அரிதாகவே இருக்கும். நம் புத்தக வியாபாரிகள், வித்வான்கள், கலைவாணர்கள் எல்லோருடைய யோக்கியதையும் இப்படித்தான் இருக்கிறது.
~subhead
இங்கிலீஷின் சிறப்பு
~shend
இங்கிலீஷ் பாஷைக்கும், கலைக்கும் மத சம்மந்தமோ, பைபிள் சம்மந்தமோ கிடையாது. இங்கிலீஷ் பண்டிதர்களுக்கு மத சம்மந்தமான விஷயம் தெரியாது. ஆனால் தமிழ் பண்டிதனுக்கு மதத்தைவிட வேறொன்றும் தெரியாது. இதனால் தான் நம் பாஷைகள் உலகில் மதிக்கப்படுவதில்லை. ஆதி பாஷையாக இருக்கலாம். கடவுள் பேசிய பாஷையாக இருக்கலாம். அனேக அருள் வாக்கு கொண்ட பாஷையாக இருக்கலாம். அது வேறு விஷயம். அறிவுக்கு பயன் உண்டா என்பதற்குப் பதில் வேண்டும். நம் தமிழ் பண்டிதர்கள் 100க்கு 99 பேர்கள் மத பக்தர்களே ஒழிய அறிவாளிகள் என்று சொல்லத் தக்கவர்கள் மிகச் சிலரே யாவார்கள்.
ஆனால் தமிழ் பாஷை நமக்கு நன்மை அளிக்கவில்லை. நமக்கு இன்று இருக்கும் சிறிது வீரத்துக்கும், தன்மான உணர்ச்சிக்கும் தமிழ் எவ்வளவோ உதவி புரிந்திருக்கிறது. அது இல்லாதவரை இவ்வளவு தமிழ் மக்களும் நிஜமாய் குரங்குகளாகவே (அனுமார்களாகவே) இருந்திருப்போம். ஆனாலும் தமிழைப் போற்ற வேண்டுமானால் பரப்ப வேண்டுமானால் மதத்திலிருந்து பிரிக்க வேண்டும். விஞ்ஞானம், பொது அறிவு தமிழில் ததும்ப வேண்டும். பத்திரிகைகளும், வெறும் அரசியலும் மதமுமாகத்தான் இருக்கிறதே தவிர பொது அறிவுக்கு பத்திரிகை இல்லை.
பொது அறிவு பரப்பக்கூடிய பத்திரிகைகள் மலிந்திருக்குமானால் மதத்தினால் அரசியலில் மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள இழிவுகளும் கேடுகளும் ஏற்பட்டிருக்கவே மாட்டா. ஆதலால் இந்த வாசகசாலை புத்தக சாலை நிர்வாகஸ்தர்கள் இவற்றை கவனிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாசகசாலைக்கு பானகல் வாசகசாலை என்று பெயர் வைத்திருப்பதில் நான் மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறேன்.
~subhead
பானகல் பெருமை
~shend
பானகல் என்று பெயர் வைப்பது பானகல் ராஜராமராய நீங்கரின் தனிப்பட்ட பெயருக்கு ஆக அல்ல. அது ஒரு புரட்சியின் அறிகுறியைக் காட்டுவதற்கு ஆகும். பானகல் ஒரு புரட்சி வீரர். தியாகராயரையும், மாதவ நாயரையும் லெனினுக்கு ஒப்பிட்டால் பானகலை ஸ்டாலினுக்கு ஒப்பிடலாம். இவர்களுடைய புரட்சி வீரம் தான் தேவர்களாய் இருந்த இந்நாட்டு பார்ப்பனர்களை மனிதர்களாக ஆக்கிற்று. அவர்களது புரட்சித் தன்மைதான் இந்நாட்டு “சூத்திரர்களை” “இழிமக்களை” “கீழ்ஜாதியார்களை” மனிதர்களாக ஆக்கிற்று. இக்காரியம் மதங்களையும் கடவுள்களையும் ஒழிப்பதைவிட சொத்துக்களை சமமாக பிரித்துக் கொடுப்பதைவிட முக்கியமானதும் பிரயாசையானதும் என்பதை உணருங்கள்.
~subhead
ஒரு உதாரணம்
~shend
இன்றைய “சூத்திரர்களுக்கும்” பார்ப்பனரல்லாத மக்களுக்கும் “சண்டாளர்களுக்கும்” தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கும் இதன் அருமையும், பெருமையும் தெரியாது. ஏனெனில் இப்படிப்பட்டவர்கள், மனிதத்தன்மை சமத்துவ உணர்ச்சி ஏற்பட்டதற்குப் பிறகு அறிவு பெற்றவர்களும் கருப்பந்தரித்தவர்களுமாவார்கள். ஆதலால் அவர்கள் பிறக்கும் முன்பு அறிவு பெறுமுன்பு அவர்கள் சமூகத்துக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் என்ன யோக்கியதை இருந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது. ஒரு சிறு உதாரணம் சொல்லுகிறேன். சுமார் 30, 35 வருஷங்களுக்கு முன் எனது தகப்பனார் ஈரோட்டில் முனிசிபல் கவுன்சிலர், பிரபல வியாபாரி, சுமார் 100, 150 ரூ இன்கம்டாக்ஸ் கட்டிவந்தவர். அவரை அக்காலத்தில் 12 லீ ரூ 15ரூ சம்பளம் உள்ள ஒரு முனிசிபல் பில் கலெக்டர் பார்ப்பனன் வரி விதிப்பு விஷயமான ஒரு விண்ணப்பத்தை நேரில் பார்த்து பைசல் செய்ய மண்டிக் கடைக்கு வந்து கூப்பிடுவான். அப்படிக் கூப்பிட வந்தால் அவனைக் கண்டதும் என் தகப்பனார் எழுந்து “ராவால ராவால தேவடா” வரவேணும், வரவேணும் ஸ்வாமீ என்று இருகைக்கூப்பி கும்பிட்டு உட்காரச் சொல்லிவிட்டு நின்று கொண்டே இருப்பார். அப்பார்ப்பன பில்கெலக்டர் தலை ஆட்டிவிட்டு உட்கார்ந்து கொண்டு “ஏமிரா வெங்கிட்ட நாயுடு போத்தாமா ஆ இண்டினி சூசேகானிக்கு” ஏண்டா வெங்கிட்ட நாயுடு அந்த வீட்டை பார்க்க போகலாமா? என்று கூப்பிடுவான். என் தகப்பனார் “ஆ! ஹா” என்று சொல்லி வஸ்திரத்தை தலையில் கட்டிக் கொண்டு அவன் பின்னால் புறப்பட்டு விடுவார். சுற்றி விட்டு வந்தவுடன் மஞ்சள், மிளகாய், கருப்பட்டி வெல்லம் எல்லாம் ஒரு சாக்கில் கட்டி பையனிடம் கொடுத்து “சுவாமிகள் வீட்டில் கொடுத்து விட்டுவா” என்று சொல்லி வழியனுப்புவார். இதை நான் நேரில் பார்த்ததைச் சொல்லுகிறேன்.
~subhead
பார்ப்பன திமிர்
~shend
இதே மாதிரி எவ்வளவு பெரிய மிராசுதாரையும் ஒரு வக்கீல் குமாஸ்தா பார்ப்பனன் நாயிலும் கீழாக மதித்து அடாபுடா என்று பேசுவான். இதுவும் நான் கண்ணால் பார்த்ததேயாகும். இந்த நிலைமைக்கும், இன்றைய நிலைமைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். ஆகவே எனக்கும் என் போன்றவர்களுக்கும் அல்லவா தெரியும் தியாகராயருக்கும், நாயருக்கும், பானகலுக்கும் எவ்வளவு மரியாதை செலுத்த வேண்டும் எவ்வளவு பெருமை அளிக்க வேண்டும் என்பது.
சுயமரியாதை இயக்கத்துக்கு முன்பு பார்ப்பனர்கள் நிலைமையும் மத உணர்ச்சியும் எப்படி இருந்தது? இந்த 10, 15 வருஷத்தில் எவ்வளவு தூரம் மாற்றமடைந்திருக்கிறது? என்பவைகளை உணர்ந்தவர்களுக்குத்தான் அவ்வியாதியினால் ஏற்பட்ட பலனும் அதன் அவசியமும் விளங்கும். இம் மாதிரியான பெரிய புரட்சிகள் சமுதாய வாழ்வில் உண்டாக்கின. இயக்கங்களுக்கும் புரட்சிக்காரர்களுக்கும் மக்கள் நன்றி செலுத்துவதற்கும் அவற்றை ஞாபகப்படுத்தி மற்றவர்களும் அதைப் பின்பற்ற வேண்டும் என்பதற்குமாகவே அவர்களின் பெயர்களை மக்களுக்கும் இம்மாதிரியான வாசகசாலை முதலியவைகளுக்கும் இடப்பட்டு வருகிறது.
~subhead
ஒரு வேண்டுகோள்
~shend
இவ்வூர் பொதுஜனங்கள் இவ்வாசகசாலையை ஆதரிக்க வேண்டும். அங்கத்தினர்களாக வேண்டும். தாராளமாக பண உதவி செய்ய வேண்டும். பெண்களும் ஆண்களும் அங்கத்தினர்களாக வேண்டும். சீர்திருத்த உணர்ச்சியும் பகுத்தறிவு உணர்ச்சியும் பெற வேண்டும். அறிவுக்கு புறம்பான எதையும் அலட்சியம் செய்ய வேண்டும்.
இந்நிலைமையை நம் மக்கள் அடைந்து விட்டால் சுதந்திரத்துக்கு என்றும் சுயமரியாதைக்கு என்றும் மக்கள் போர் தொடுக்க வேண்டிய அவசியமே ஏற்படாது. ஏனெனில் இன்று நாம் அறிவில்லாத குறையில் அடிமையாய் சுயமரியாதை அற்று கிடக்கின்றோமே ஒழிய சுதந்திரமில்லாமல் அல்ல. மனிதனுக்கு சுதந்திரம் இருக்கிறது. அதை பயன்படுத்திக்கொள்ள அறிவில்லை. எப்படி பயன்படுத்துவது? எது சுதந்திரம்? என்பது கூட நமக்கு இன்னும் சரியாய் தெரியவில்லை. சிலர் வெள்ளைக்காரனை விறட்டுவது சுதந்திரம் என்கிறார். சிலர் பொருள்கள் சமமாய் இருப்பதை சுதந்திரம் என்கிறார். சிலர் கட்டுப்பாடு ஒழுக்கம் இல்லாமல் இருப்பது சுதந்திரம் என்கிறார். சிலர் தனது முட்டாள்தனம், பேராசை, அயோக்கியத்தனம், நன்றி கெட்டத்தனம் ஆகியவைகளுக்கு ஏற்ப தன்னிச்சையாய் திரிவது சுதந்திரமென்கிறார். சிலர் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் வாழ்ந்து திரிவது சுதந்திரம் என்கிறார். எது சுதந்திரம் என்பது ஒரு பெரிய பிரச்னையாய் இருக்கிறது.
ஆகவே மக்கள் யாவரும் கல்விபெற்று உலக விவகாரமுணர்ந்து, தன்னைப் போல் அன்னியன் என்பதை உணர்ந்து அன்புடனும் பரோபகார உணர்ச்சியுடனும் இருந்து வாழ ஆசைப்படவேண்டியது மனிதனுக்கு அவசியமாகும். அதற்கு இப்படிப்பட்ட வாசகசாலை அறிவு வளர்ச்சிப்புத்தகம் சமத்துவ உணர்ச்சி சம்பாஷணைக் கூடம் ஆகியவை அவசியம் என்று சொல்லுகிறேன். தோழர்களே! இவ்வாசகசாலை ஆண்டு விழாவுக்கு தலைமை வகித்து தலைவர் முகவுரை என்கின்ற முகத்தால் இதைப் பேசினேன். மற்றவை முடிவுரையில் கூற நினைத்திருக்கிறேன்.
குறிப்பு: 01.03.1938-இல் காஞ்சிவரம் பனகால் அரசர் வாசகசாலை ஆண்டுவிழாவில் தலைமை வகித்து ஆற்றிய முகஉரை.
குடி அரசு – சொற்பொழிவு – 06.03.1938

0 comments:

Post a Comment

Kindly post a comment.