Friday, October 9, 2015

பூவுக்குத் தடை! ! -இலங்கை இனப்பிரச்சினைக்கான கதை


இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான கதைகளைக் கையாளும் படங்கள் தொடர்ந்து தணிக்கைப் பிரச்சினையைச் சந்தித்துவருகின்றன. தற்போது தமிழகத் தணிக்கைக் குழு, மறு தணிக்கை, மத்திய தணிக்கை தீர்ப்பாயம் என மூன்று இடங்களிலும் தடைசெய்யப்பட்டிருக்கிறது ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படம். இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் பெங்களுரில் வசிக்கும் தமிழரான கணேசன்.

இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பிரிவில் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தவர் இசைப்பிரியா. கடந்த 2009-ல் இலங்கையில் நடந்த போரில் இவர் ராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல்கள் உலக அரங்கில் அதிர்ச்சியலைகளைப் பரவச் செய்தன. அவரது வாழ்க்கையை மையமாக வைத்தே ‘போர்க்களத்தில் ஒரு பூ' என்ற படத்தை இயக்கியிருந்தார் கணேசன். இசைப்ரியாவாக தான்யா என்பவர் நடித்திருந்தார்.

இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் “இந்தியாவின் நட்பு நாடான இலங்கைக்கு எதிரான காட்சிகள் இருப்பதால் படத்தை வெளியிடக் கூடாது” என்று கூறித் தமிழகத் தணிக்கை குழு, மறுதணிக்கைக் குழு ஆகியவை படத்துக்குத் தடைவிதித்துவிட்டன. ஆனால், படத்தைப் பார்த்த மத்திய தணிக்கைத் தீர்ப்பாயம், “இலங்கை அரசுக்கு எதிராகத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது போன்ற காட்சியை நீக்கினால்” படத்துக்கு அனுமதி தருவதாகக் கூற, இயக்குநர் கணேசன் அதற்கு மறுத்துவிட்டார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி ஜெனிவாவிலுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் அரங்கத்தில் பன்னாட்டு மனித உரிமை ஆர்வலர்களுக்கு இந்தப் படத்தைத் திரையிட்டுக் காட்டிக் கவன ஈர்ப்பு செய்திருக்கிறார் இயக்குநர்.

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.