Friday, October 9, 2015

தடுமாறுகிறதா தமிழகத் தணிக்கைக் குழு? - குள. சண்முக சுந்தரம்


அண்மையில் வெளியாகிப் பலருக்கும் அதிர்ச்சியளித்த படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இந்தப் படத்தில் கையாளப்பட்ட கதை, அதில் பெண்கள் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம், வசனங்கள், காட்சிகள், நடிகர்களின் உடல்மொழிகள் என்று மொத்தப் படமும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தது.

‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தாலும் இந்தப் படத்தின் பல காட்சிகள் மீது கருணையில்லாமல் தணிக்கை வாரியத்தின் கத்தரி பாய்ந்திருக்க வேண்டும் என்று எண்ணவைத்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தமிழகத் தணிக்கைக் குழு இதுபோன்ற படங்களின் மீது மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறதா என்ற சந்தேகம் எழ, தணிக்கை வாரிய ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரைத் தொ

“தணிக்கை வாரியத்தின் ஆலோசனைக் குழுவில் இப்போது சுமார் 50 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். படங்களைத் தணிக்கை செய்யும் அமர்வு சுழற்சி முறையில் இவர்களுக்கு அளிக்கப்படும். தணிக்கைக்காகப் படம் திரையிடப்படும் தியேட்டரில் போய் இருக்கையில் அமர்ந்த பிறகுதான் தாங்கள் எந்தப் படத்தைத் தணிக்கை செய்ய வந்திருக்கிறோம் என்ற விவரமே ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியவரும்.

நாடுகளுக்கிடையில், மாநிலங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில், இரண்டு மொழி பேசுபவர்களுக்குள் பிரச்சினையைத் தூண்டும் வகையிலோ இந்திய இறையாண்மைக்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலோ காட்சிகளோ வசனங்களோ இருக்கக் கூடாது. ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள் இருந்தாலும் தணிக்கைச் சான்று கிடைக்காது.

ஆலோசனைக் குழுவின் ஆட்சேபணைகள் படக் குழுவுக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டால் அடுத்ததாகப் படத்தைப் பத்துப் பேர் கொண்ட ரிவைசிங் கமிட்டிக்கு அவர்கள் கொண்டுபோகலாம். அங்கே அதிகப்படியான உறுப்பினர்கள் எடுக்கும் முடிவின்படி சான்றளிக்கவோ நிராகரிக்கவோ முடியும். அதிலும் திருப்தி இல்லாவிட்டால் மத்திய தீர்ப்பாயத்தை அணுகலாம். தமிழ்க் கலாச்சாரம், பண்பாடு இவற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் காட்சிகளை நாங்கள் இங்கே ஆட்சேபிப்போம். ஆனால், பல நேரங்களில் மத்திய தீர்ப்பாயத்தில் இருப்பவர்களுக்கு இங்குள்ள உணர்வுகளோ மரபுகளோ தெரிவதில்லை. அது மாதிரியான நேரங்களில், நாங்கள் ஆட்சேபிக்கும் படங்களுக்குத் தீர்ப்பாயத்தில் எளிதில் ஒப்புதல் கொடுத்துவிடுவார்கள். இதற்காகவே தீர்ப்பாயம் வரை முட்டி மோதும் தயாரிப்பாளர்களும் உண்டு’’ என்று சொன்ன அவர் தணிக்கை பெற முடியாத படங்களைப் பற்றியும் விளக்கினார்.

வெளியே வர முடியாத படங்கள்

“தணிக்கை பெற்றுத் திரைக்கு வரும் படங்கள்தான் வெளியில் தெரியும். ஆனால், ஆட்சேபகரமான உள்ளடக்கம் மற்றும் காட்சிகளால் தணிக்கைச் சான்று பெற முடியாமல் முடங்கிப் போகும் படங்கள் நிறைய உண்டு. இளம் இயக்குநர் ஒருவர் ஒரு சிறுமிக்குப் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் மிகவும் வக்கிரமாக ஒரு படத்தை எடுத்திருந்தார். படம் முழுக்க வக்கிரம் தவிர வேறு எதுவுமில்லை. அந்தப் படத்தை அடியோடு நிராகரித்தோம்” என்கிறார்.

படைப்பாளிக்குப் பாதுகாப்பு

தணிக்கை விதிகளை மீறும் படங்களை முடக்கும் அதேநேரம் ஒரு படைப்பாளியின் உரிமையையும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார். “ஒரு படத்தில் ஒரே ஒரு காட்சி ஆட்சேபகரமாக வருகிறது என்பதற்காக அந்தப் படத்தையே முடக்க முடியாது. பெண்ணின் தொப்புளைக் காட்டியே தீர வேண்டும் என்பது இயக்குநரின் குறியாக இருந்தால் அதை நாங்கள் அனுமதிப்பதில்லை.

கதையின் ஓட்டத்தில் அப்படியொரு காட்சி வருகிறதென்றால் அதைப் பெரிதுபடுத்துவதில்லை. ‘யு’ சான்றிதழ் படங்களுக்கு வரிவிலக்குக் கிடைக்கும். ஆனால், சில இயக்குநர்கள் ‘ஏ’படத்துக்கு ‘யு’ தரச் சொல்லி எங்களுக்கு அழுத்தம் கொடுப்பார்கள். அதற்கெல்லாம் நாங்கள் மசிந்துவிடுவதில்லை” என்கிறார்.

குடியின் இடம்

இப்போது படங்களில் தவிர்க்க முடியாததாகிவிட்ட குடியைப் பற்றியும் தன் வருத்தத்தைப் பகிர்ந்துகொள்கிறார். “முன்பெல்லாம் படத்தின் முதல் காட்சியில் சாமி படத்தைக் காட்டுவார்கள். ஆனால் இப்போது, ஒயின் ஷாப்பில் பீர் பாட்டிலைத் திறப்பதுதான் ஓப்பனிங் சீன். இது சினிமாவின் குற்றம் மட்டுமல்ல. சமுதாயத்தின் பங்கும் இருக்கிறது. தியாகராஜ பாகவதர் கதாநாயகியைத் தொடாமல் நடித்தார்.

சிவாஜி கணேசன் கட்டிப்பிடித்து நடித்தார். இப்போது கட்டிப்பிடித்து முத்தமும் கொடுக்கிறார்கள். இதெல்லாம் காலத்தின் கோலம் இந்த மாற்றத்துக்கு ஏற்ப நாங்களும் அனுசரித்துப் போக வேண்டியிருக்கிறது. இதற்கெல்லாம் சமுதாயமும் ஒரு காரணம். சமுதாயம் செல்லும் திசையில்தான் சினிமாவும் பயணிக்கிறது. எனவே காலம்தோறும் திரைப்படத் தணிக்கையும் சவாலான பணியாகவே மாறிவருகிறது” என்கிறார் அந்த முன்னாள் அதிகாரி.

எந்தக் காட்சிகள் வரக் கூடாது?

டீக் கடை மற்றும் ஒர்க்‌ஷாப்களில் சிறுவர்கள் வேலை செய்வது போல் காட்சிகள் வரக் கூடாது. பெண்கள், மற்றும் குழந்தைகளை எந்தச் சூழலிலும் கீழ்த்தரமாகச் சித்தரிக்கக் கூடாது. உடல் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டும் கொச்சையான வசனங்கள் இருக்கக் கூடாது. பெண்களை ‘சப்பை ஃபிகரு, மொக்க ஃபிகரு’ என்று அடையாளப்படுத்துவதையும் தணிக்கை விதி அனுமதிப்பதில்லை. படம் பார்ப்பவர்களுக்கு, மது குடித்தால் உற்சாகமாய் இருக்கலாம், ஜாலியாக இருக்கலாம் என்ற எண்ணத்தை வரவழைப்பது போல் காட்டுவதை அனுமதிக்கக் கூடாது என்கிறது தணிக்கை விதி.
இப்படியெல்லாம் விதிகள் இருந்தாலும் இதுபோன்ற வசனங்களும் காட்சிகளும் பல படங்களில் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருப்பதுதான் தமிழ் சினிமாவின் விதியா?

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.