Tuesday, October 13, 2015

இருளுக்கு இங்கே இனி என்ன வேலை? - மீண்டுவந்த போராளியின் உண்மைக் கதை

மகள் இனியாவுடன்

நான் கவிதா. வயது 37. சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் பேராசிரியை. நான், என் கணவர் சதீஷ், மூன்று வயது செல்ல மகள் இனியா... இதுதான் என் உலகம். சின்னச் சின்ன சண்டை, நிறைய மகிழ்ச்சி, எனக்குப் பிடித்த நாவல்கள், மனநிறைவான பேராசிரியை வேலை, தோள்கொடுக்கும் தோழிகள் என்று வண்ணங்களால் நிறைந்தது என் வாழ்க்கை.

2014, மே மாதம் 19-ம் தேதி மிக இயல்பாகத்தான் விடிந்தது எனக்கும். பறவைகள் கிறீச்சிடுகிற அதிகாலையில் விழிப்புவந்துவிட்டது. ஜன்னலைத் திறந்தேன். சில்லென்ற காற்று முகத்தில் அறைய, அந்த நொடியின் பரவசத்தை லயித்தபடியே என் தினசரி வேலைகளைத் தொடங்கினேன். ஈஷா யோகா மையத்துக்குச் செல்லத் தொடங்கியதிலிருந்து நான் காபி, டீ குடிப்பதில்லை. கணவரும் மகளும் உறங்கிக்கொண்டிருந்தனர். முகத்தில் மென் சிரிப்பு படர திரும்பிப் படுத்த மகளின் அழகை ரசித்தபடியே சமையல் வேலையைத் தொடங்கினேன். சமையலை முடித்துவிட்டுக் குளியலறைக்குச் சென்றேன்.

எனக்குக் கல்யாணமாகி ஆறு ஆண்டுகள் கழித்துதான் இனியா பிறந்தாள். செயற்கைக் கருவூட்டல் முறையில் அவள் பிறந்ததால் அந்த நேரத்தில் நிறைய ஊசிகளும் மருந்துகளும் என்னைப் பாடாய்ப்படுத்தின. அவற்றின் பக்க விளைவாக ஏதாவது வந்துவிடக் கூடாது என்று மிகுந்த கவனத்துடன் இருப்பேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டி.வி., நியூஸ் பேப்பர் என்று திரும்பின பக்கமெல்லாம் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்களைப் பார்த்தேன். அதன் தாக்கமோ என்னவோ நானும் மார்பகப் புற்றுநோய் குறித்தத் தகவல்களைத் தேடித் தேடிப் படித்தேன். வாரம் ஒரு முறையோ அல்லது நேரம் கிடைக்கும் போதோ மார்பக சுயபரிசோதனை செய்வேன். அன்று குளித்துக்கொண்டிருந்தபோது எதேச்சையாக சுயபரிசோதனை செய்தபோது வலது மார்பகத்தில் சின்ன கட்டி போன்று தட்டுப்பட்டது.

ஏற்கெனவே மார்பகக் கட்டிகளைப் பற்றி படித்திருந்தாலும் எனக்கு அப்போது ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால் கட்டியை அழுத்தியபோது வலிக்கவில்லை. தவிர மூன்று நாட்களுக்கு முன்பு வலது மார்பிலிருந்து லேசாக திரவம் கசிந்தது. இவை இரண்டும் எனக்கு சந்தேகத்தைக் கிளப்பின. இருந்தாலும் எனக்கு அப்படியெல்லாம் எதுவும் வராது என்று நம்பினேன். யோசிக்கக் கூட நேரமில்லாமல் அவசரமாக காலேஜ் பஸ்ஸைப் பிடித்தேன். முதல் வகுப்பே முக்கியமானது என்பதால் அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கிப்போனேன். மதிய உணவு இடைவேளையின்போதுதான் காலையில் நடந்ததை என் கணவரிடம் சொல்லவில்லை என்பதே நினைவுக்கு வந்தது.

உடனே அவருக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னேன். சாயந்திரம் குடும்ப டாக்டரிடம் போக லாம் என்று சொன்னார். வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சொன்னேன். நீ நிறைய மாத்திரைகள் சாப்பிட்டதன் பக்க விளைவாக இருக்கும், மற்றபடி பயப்படும்படி எதுவும் இருக்காது என்று அம்மா சொன்னார். இருந்தாலும் அடி மனதில் இனம் புரியாத தவிப்பு. என் காலைக் கட்டிக்கொண்டு சிரித்த இரண்டு வயது மகளைப் பார்த்தபோது வேதனை அதிகமானது. கணவருக்கு வேலை இருந்ததால் டாக்டரைப் பார்க்க நான் தனியாகத்தான் போனேன். எங்கள் குடும்ப டாக்டர் அம்மணி தருகிற மாத்திரைகளைவிட அவர் சொல்கிற தைரியத்திலேயே பாதி நோய் கரைந்துவிடும். என் முகத்தைப் பார்த்தபடி நான் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டார். மலர்ந்த முகத்துடன், ‘ஒண்ணும் பயப்படத் தேவையில்லை. முதல்ல ஸ்கேன் எடுப்போம். அப்புறம் பார்த்துக்கலாம்’ என்றார்.

எனக்கும் அவர் சொல்வதுதான் சரியென்று பட்டது. கதவுக்கு அந்தப் பக்கம் பூதமா சாமியா என்று தெரியாமல் ஏன் குழம்ப வேண்டும்? எந்தக் கலக்கமும் இல்லாமல் வீட்டுக்கு வந்தேன். பிடித்ததை விரும்பிச் சமைத்தேன். குழந்தையுடன் குதூகலமாக விளையாடினேன். நாளை ஸ்கேன் எடுக்கச் செல்ல வேண்டும். ஷாப்பிங் போவது போல மகிழ்ச்சியோடு ஸ்கேனிங் சென்டருக்குச் சென்றேன். மாமோகிராம் எடுத்தார்கள். பிளட் டெஸ்ட் செய்ய வேண்டும் என்றார்கள். எல்லாம் முடிந்து நான்கு நாட்கள் கழித்து ரிசல்ட் வரும் என்று சொன்னார்கள். எப்படியும் எதுவும் இருக்காது என்றாலும் அடி நெஞ்சில் லேசான நடுக்கம்.

இந்த நான்கு நாட்களை எப்படிக் கழிப்பது? கைகொடுத்தது என் ஒன்றுவிட்ட தம்பியின் திருமணம். உறவுகளைப் பார்த்துவிட்டு வந்தால் மனது கொஞ்சம் லேசாகுமே. ரிசல்ட் பற்றிய நினைப்பே இல்லாமல் இருக்கலாமே என்று பரமகுடிக்குக் கிளம்பினேன். என் கணவருக்கு வேலை இருந்ததால் இந்தப் பயணத்தில் அவர் எங்களுடன் கலந்துகொள்ளவில்லை.

எனக்கு எப்போதுமே ஜன்னலோரப் பயணம் பிடிக்கும். எதிர் திசையில் வேகமாக நகர்ந்து செல்லும் மரங்களையும் மனிதர்களையும் என் மகளுடன் சேர்ந்து வேடிக்கை பார்த்தபடி பயணித்தேன். செல்போன் ஒலித்தது. என் கணவர்தான் அழைத்தார். ஸ்கேனிங் ரிசல்ட் வந்துவிட்டது என்று சொன்னார். DCIS (Ductal carcinoma in situ) என்று ரிசல்ட் வந்திருப்பதாகச் சொன்னார். அதாவது பால் சுரப்பிக்குள்ளே வருகிற சிறிய கட்டியைத்தான் இப்படி சொல்வார்கள். நான் என் மகளுக்குத் தாய்ப்பால் கொடுத்ததால் எனக்கு இதுபோன்ற பால் கட்டி வருவதற்கு வாய்ப்பே இல்லை. அதனால் அப்படி எதுவும் இருக்காது என்று அவருக்கு சமாதானம் சொல்லி போனை வைத்தேன். ஜன்னலுக்கு வெளியே காட்சிகள் கொஞ்சம் மங்கலாகத் தெரிவதுபோல இருந்தது.

திருமண வீட்டில் மகிழ்ச்சி நிறைந்த முகங்களைப் பார்த்ததுமே என் மகிழ்ச்சி இரட்டிப்பானது. ரிசல்ட் பற்றி யாரிடமும் எதுவும் பேசவில்லை. எதுவாக இருந்தாலும் மோதிப் பார்ப்பது என் வழி. ஆனால் ரிசல்ட் பற்றி சொன்னால் என் சொந்தக்காரர்கள் எல்லாம் வருத்தப்படுவார்களே என்று எதுவுமே சொல்லவில்லை. கல்யாணக் கொண்டாட்டம் முடிந்து சென்னை திரும்பிய அன்றே ரிசல்டை எடுத்துக்கொண்டு எங்கள் குடும்ப டாக்டரிடம் சென்றேன். அனைத்தையும் பார்த்துவிட்டு, ‘எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. அதில் focal invasion என்ற வார்த்தைதான் கவலையை அதிகப்படுத்துகிறது’ என்று சொன்னார்.

நாமே பரிசோதிக்கலாம்!

18 வயது முதல் 30 வயதுவரை உள்ள பெண்கள் மாதத்துக்கு ஒரு முறையாவது மார்பக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மார்பகத்தின் அளவில் திடீர் மாற்றம், மார்பில் கட்டி, வீக்கம், தடிப்பு ஆகியவை இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். கட்டி அழுத்தமாக இருக்கிறதா என்றும் பரிசோதிக்க வேண்டும். மார்பகக் காம்பில் வலியோ புண்ணோ இருந்தாலோ அதில் இருந்து நீர் வடிந்தாலோ உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும். ஒரு செ.மீ. அளவுக்கும் குறைந்த சின்னக் கட்டிகள் இருந்தாலும் மருத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டும். கட்டிகள் இருந்தாலே அவை கேன்சர் கட்டிகள் என்று பீதியடையத் தேவையில்லை. எல்லாக் கட்டிகளும் கேன்சர் கட்டிகள் இல்லை.

30 வயதுக்கு மேல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் அவ்வப்போது மருத்துவர்களிடம் சென்று கிளினிக்கல் பிரெஸ்ட் எக்ஸாமினேஷன் செய்துகொள்ளலாம். 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் வருடத்துக்கு ஒரு முறையாவது மாமோகிராம் செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் மார்பகத்தில் கட்டிகள் இல்லாவிட்டாலும் கட்டிகள் வரக்கூடிய அறிகுறிகள், கால்சியம் அளவில் மாற்றங்கள் இருந்தால்கூட மாமோகிராம் பரிசோதனை காட்டிக் கொடுத்துவிடும்.

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.